சினிமா: பார்ட்-2 எனும் சிக்கல் - Sequel Syndrome

முதல் படத்தின் Magic, Surprise, Freshness – இவை எல்லாம் அந்தத் தருணத்திற்கே உரியவை. அதை மறுபடியும் உருவாக்க முயற்சிக்கும் போது, அது போலச் செய்தலாக ஆகிவிடுகிறது. இது நிச்சயமாக ஒரு வீழ்ச்சிதான்.
KALAYANRAMAN and JAPPANIL KALYANARAMAN
KALAYANRAMAN and JAPPANIL KALYANARAMANAmazom.com
Published on

சமீபத்தில் ஒரு சினிமா நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒரு திரைக்கதையை என்னிடம் சொல்லிக் கருத்து கேட்டார். அது ஓர் அழகான காதல் கதை. மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால், அவர் அதன் முடிவைச் சொன்னபோதுதான் திருப்தியாக இல்லை. ஏன் இவ்வளவு அழகான கதைக்கு, இப்படி ஒரு முடிவை எழுதி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்ன விஷயம்தான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒருவேளை இந்தப் படம் பெரிய அளவில் பேசப்பட்டால், பார்ட் டூ எடுப்பதற்கு இந்த முடிவு தான் சரியாக இருக்கும் என்றார்.

சினிமா ஒரு வியாபாரம்தான். ஆனால், அதன் பாதிப்பு, கிரியேட்டிவிடியையே பாதிக்கும் அளவுக்கு எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கிறது பாருங்கள். சினிமா ஒரு கலை என்பதைத் தாண்டி, உலகெங்கிலும், பொழுதுபோக்குக்கான மிகப்பெரிய நுகர்பொருளாகவே இருந்து வருகிறது. சினிமாவின் உருவாக்கமும் அதிக பொருட்செலவு செய்ய வேண்டிய ஒன்றாகவும், அதன் வியாபாரமும் மிகப்பெரிய எண்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. இது இன்னும் இன்னும் அதன் கலைத் தன்மையைப் பாதிக்கத்தான் செய்யும்.

தமிழில் பார்ட் 2 எடுக்கும் யோசனை ஒன்றும் புதிதானதல்ல. 1973 காலகட்டத்திலேயே எம்ஜியார், நடித்து, தயாரித்து, இயக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கான சீகுவல் திட்டமிடப்பட்டிருக்கிறது. பின்னர் 1980களில் கமல்ஹாசன் நடித்த, ‘கல்யாணராமன்’ எனும் படத்துக்கான சீகுவலாக ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படம் வெளியானது. அதன்பின் 1990களில், அர்ஜுன் நடித்த ஜெய்ஹிந்த் உட்பட ஓரிரு படங்களின் பார்ட் -2 வெளியாகியிருக்கின்றன. ஆனால், இந்தப் படங்கள் எல்லாம், முழுமையான வியாபார நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை அல்ல. அந்தக் கதையின் சுவாரசியத்தை இன்னும் கொஞ்சம் நீட்டிக்கலாமே எனும் அடிப்படை, அல்லது ஒரு வித்தியாசமான முயற்சி எனும் நோக்கத்தில்தான் உருவாகியிருக்கக்கூடும். 2000த்துக்குப் பிறகுதான் பார்ட்-2 எடுப்பதன் பின்னாலிருக்கும் வியாபாரச் சிறப்பை நமது சினிமாக்காரர்கள் உணர்ந்துகொண்டார்கள்.

அப்படியென்ன அதன் மிகப்பெரிய பலம்?

இன்றைய சூழலில் ஒரு சினிமாவுக்கான கதையை உருவாக்குவது என்பது, மிகப்பெரிய சவாலான காரியம். அந்த அளவுக்கு சினிமாவின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு வளர்ந்திருக்கிறது. தகவல் தொடர்புப் புரட்சியின் காரணமாக, உலகம் முழுதுமான கலை வடிவங்களையும், பொழுதுபோக்கு வடிவங்களையும் நம் ரசிகர்கள் மிகச் சிறப்பாக அறிந்திருக்கிறார்கள். அதனால், அவர்களை பிரமிப்பூட்டுவதோ, அவர்களின் மனதைத் தொடுவதோ அத்தனை எளிதான காரியமில்லை. அப்படி ஏழு மலைகள், ஏழு கடல்கள் தாண்டி ஒரு சிறப்பான கதையை உருவாக்கி, ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துவிட்டால் அது வெற்றிதான். ஆனால், அடுத்த கதைக்கு மீண்டும் அந்தக் கதாசிரியர் ஏழு மலை, ஏழு கடலைத் தாண்டிதான் வரவேண்டும். ‘இதற்கு மேல் என்னால் முடியாது, இந்தக் கதை அவர்களுக்குப் பிடித்துவிட்டதல்லவா, இதையே பட்டி டிங்கரிங் பார்த்து இன்னும் எத்தனை படங்களை எடுக்கப்போகிறேன் பாருங்கள்’ என்று இறங்கி விடுகிறார். எப்படி பார்ட்-2 படங்களை உருவாக்க, கிரியேட்டிவ் உழைப்பு இவ்வாறாக சற்றுக் குறைகிறதோ, அதைப் போலவே மக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஒரு படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டுவது என்பது சாதாரண விசயமல்ல, அந்த வகையில், இதுவும் மிக முக்கியமான வியாபாரக் காரணியாகிவிடுகிறது! இவையிரண்டும்தான் பார்ட்-2 படங்களின் மிகப்பெரிய பலமாக இருக்கின்றன!

SINGAM 3 POSTER
SINGAM 3 POSTERprimevideo

ஹாலிவுட்டில் இது முன்னமே மிகப்பெரிய அளவில் இருந்து வந்திருக்கிறது. கிங்காங், ஸ்டார்வார்ஸ், டெர்மினேட்டர், டை ஹார்ட், சூப்பர்மேன், பேக் டு தி ப்யூச்சர், இண்டியானா ஜோன்ஸ் உள்ளிட்ட 1960, 70களில் தொடங்கிய இந்தக் கலாச்சாரம் இன்று, ஜுராஸிக் பார்க், டாய் ஸ்டோரி, லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், அவதார், அவெஞ்ன்சர்ஸ், டூன் என்று பிரமிப்பூட்டும் அளவுக்குத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது ஒரு படம் மிகப்பெரிய ஹிட் ஆகிவிட்டால், பார்ட் 2 என்பது தவிர்க்க இயதாதாகிவிடுகிறது.

ஆனால், அங்கே ’அவதார்-1’ ஏற்படுத்திய பிரமிப்பையும், வசூல் சாதனையையும் அவதார் 2, அவதார் 3 படங்களால் முறியடிக்க முடியவில்லை. போலவே இங்கே, ‘சிங்கம்-1’ கொடுத்த திருப்தியை, சிங்கம் 2, சிங்கம் 3யால் கொடுக்க முடியவில்லை. இந்தியன் 2 எல்லாம் இந்த வரிசையில் நிகழ்ந்த மிகப்பெரிய அநியாயம். சேனாபதி எனும் வயதான சுதந்திரப்போராட்ட வீரனின், குணம், பிடிவாதம், அஞ்சாமை  போன்ற விசயங்களால் அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், அது தெரியாமல், சேனாபதியின் பிராஸ்தடிக் மேக்கப்பாலும், சேனாபதி போட்ட வர்மச் சண்டையினாலும்தான் மக்களுக்குப் பிடித்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு பார்ட்-2 எடுத்தால், அது எப்பேர்ப்பட்ட அறியாமை?! இதெல்லாம் கிரியேடிவ் உழைப்பைச் செய்ய தயாராக இல்லாததால் ஏற்படும் இழப்புகள். போலவே, ரசிகர்களின் அதீத எதிர்பார்புமே இந்தப் படங்களின் பலவீனமாகவும் ஆகிவிடுகின்றன.

முதல் படத்தின் Magic, Surprise, Freshness – இவை எல்லாம் அந்தத் தருணத்திற்கே உரியவை. அதை மறுபடியும் உருவாக்க முயற்சிக்கும் போது, அது போலச் செய்தலாக ஆகிவிடுகிறது. இது நிச்சயமாக ஒரு வீழ்ச்சிதான்.

அதே நேரத்தில் சில சீகுவல்கள், ’காட்ஃபாதர்’ போல அந்தக் கதை உலகத்தை விரிவுபடுத்தும் திறன் கொண்டவை, அல்லது ’பொன்னியின் செல்வன்’ போன்று பெருங்கதைகளாக இருக்கக்கூடியவை. அவற்றை சீகுவல்களாக செய்வதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. முக்கியமான கேள்வி இதுதான்-ஒரு கதாபாத்திரத்தை, கதைக்களத்தை நாம் இன்னும் சந்திக்க விரும்புகிறோமா, அதில் சொல்லப்படாத பகுதிகள் இருக்கின்றனவா? அல்லது அந்தக் கதையை அதன் நிறைவிலேயே விட்டுவிடுவது நல்லதா? எல்லா கதைகளையும் தொடர வேண்டிய அவசியமில்லை. எப்போதும், கதைகள் ஓர் அழகான முடிவில்தான் முழுமை பெறுகின்றன. ஒரு கதையை முடிக்கத் தெரிந்தவர்கள்தான் உண்மையான படைப்பாளிகள்.

Puthuyugam
www.puthuyugam.com