சத்தமில்லாமல் பேசுபொருளாகியிருக்கும் Demon Slayer! #MangaComics

டிமோன் ஸ்லேயர்- இன்பினிடி கேஸில்! (Demon Slayer: Kimetsu no Yaiba – Infinity Castle)
Demon Slayer Poster
Demon Slayer PosterGoogle
Published on

சென்னை சிட்டியிலிருக்கும் பெரிய தியேட்டர்கள் அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கின்றன. சிட்டி மட்டுமல்ல, தமிழகமெங்கும் உள்ள சிறுநகரங்களில் இப்படி ஒரு படம் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக, படம் வெளியாகியிருப்பது தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்தில் மட்டுமல்ல, ஒரிஜினலான ஜப்பானிய மொழியிலேயே ஏராளமான காட்சிகள் திரையிடப்பட்டிருக்கின்றன. சென்னையில் அரங்கு நிறைந்த ஐமேக்ஸ் காட்சிகள். திருநெல்வேலி பிஎஸெஸ் அரங்கில் இரண்டு ஜப்பானிய மொழிக் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அப்படி என்னதான் நடந்துகொண்டிக்கிறது?

இது ஒரு ஜப்பானிய, 2D Manga அனிமேஷன் சினிமா.

மாங்கா (Manga) என்பது ஜப்பான் மொழியில் கார்ட்டூன் என்பதைக் குறிக்கிறது. அவர்களது கார்ட்டூன் வடிவத்துக்கென்று ஒரு தனிப்பெரும் அடையாளமும், நீண்ட வரலாறும் இருக்கிறது. தங்கள் வலிகளையும், உணர்வுகளையும், வரலாறுகளையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த மாங்கா காமிக்ஸ் வடிவங்களைப் பயன்படுத்துகின்றனர். இரண்டாம் உலகப்போருக்குப் பின்பாக ஜப்பானிய மக்களை மீட்டெடுத்த கலை வடிவங்களில் மங்காவுக்கும் தனியிடம் இருக்கிறது.

அப்படியான மாங்கா வடிவில் 2016ல் ஒரு ஜப்பானிய காமிக்ஸ் புத்தகமாக வெளியானதுதான் இந்த ‘Demon Slayer’ எனும் கதை. இதை உருவாக்கியவர் கொயஹாரு எனும் ஓர் இளம் ஓவியக்கலைஞர். அது சுமார் 25 கோடி புத்தகங்கள் விற்பனையாகி உலகெங்கும் விற்பனையில் பெரும் சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து டிவி சீரியலாக வெளியாகத் தொடங்கியது. 4 சீசன்களாக இதுவரை வெளியாகியிருக்கும் இந்தத் தொடரின் சினிமா வடிவம் ஏற்கனவே 2020 ’Demon Slayer: Mugen Train’ எனும் பெயரில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த ’Infinity Castle’ 3 பாகங்களாகத் திட்டமிடப்பட்டு, அதன் முதல் பகுதி இதோ சென்ற வாரம் உலகெங்கும் வெளியாகியிருக்கிறது. இந்தியாவிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

Comic books of Demon Slayer
Comic books of Demon SlayerGoogle
தமிழ்நாட்டின் கடைக்கோடி ரசிகனைக்கூட இந்தப் படத்தால் தியேட்டருக்கு எப்படி இழுத்துவர முடிந்தது? உள்ளடக்கம்!

சமீப வருடங்களாக, பெரும் எழுச்சி பெற்றுவரும் ஓடிடி மற்றும் சமூகவலைத்தளங்கள் மூலமாக நமது பிள்ளைகளுக்கு உலகளாவிய கலைப்படைப்புகள் மிக எளிதாக அறிமுகமாகின்றன. அதன் தொடர்ச்சியாக, அதில் சிறப்பான படைப்புகள் எளிதில் ரசிகர்களின் கவனத்துக்கு வந்துவிடுகிறது. அதன் பின்பு அது தரமானதாக இருந்தால், அது அவர்களின் மனதை வென்று விடுகிறது. இதில் ஈரோப்பிய காமிக்ஸ், கொரிய இசை, கொரிய சினிமாக்கள், ஜப்பானிய டிவி தொடர்கள் என எந்த வித்தியாசமும் இல்லை. அப்படி வந்ததுதான் இந்த டிமோன் ஸ்லேயர்- இன்பினிடி கேஸில்!

மனிதர்களின் ஓவியத்திறனும், சிஜிஐ நுட்பமும் இணைந்த ஓர் அற்புதமான ஹைபிரிட் நுட்பத்தில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருந்தாலும், எல்லாவற்றையும் தாண்டி நிற்பது அதன் கதைதான், உள்ளடக்கம்தான்!

டிமோன் ஸ்லேயர் தொடரின் முக்கியக் கதை, பல நூற்றாண்டுகளாக மனிதர்களுக்கு ஆபத்தாக இருக்கும் மாயாவிகள் மற்றும் அந்த மாயாவிகளை வேட்டையாடும் "டிமோன் ஸ்லேயர்" படை ஆகியவற்றுக்கு இடையிலான போரை மையமாகக் கொண்டது. டான்ஜிரோ கமாடோ எனும் சிறுவனின் குடும்பம் மாயாவிகளால் கொல்லப்படுகிறது, மேலும் அவனது சகோதரி நெசுகோ ஒரு மாயாவியாக மாறிவிடுகிறாள். ஆனால், அவள் மற்ற மாயாவிகளைப் போல மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல், தன் மனிதத் தன்மையை மீட்டெடுக்க முயற்சிக்கிறாள். தனது குடும்பத்துக்காகப் பழிவாங்கவும், சகோதரியைக் குணப்படுத்தவும் டான்ஜிரோ ஒரு டிமோன் ஸ்லேயராக மாறுகிறான்.

Demon Slayer Infinity Castle Movie Poster
Demon Slayer Infinity Castle Movie PosterUfotable Studios

முசான் கிபுட்சுஜி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மாயாவிகளின் தலைமை மாயாவி. அவனது ஒரே நோக்கம், அவர்களை வேட்டையாடும் வேட்டையர்கள் அனைவரையும் அழித்து, சூரிய ஒளியால் பாதிக்கப்படாத ஒரு பூரணமான உடலைப் பெறுவது.

இந்தப் படத்தில், டிமோன் ஸ்லேயர் படை இறுதியாக முசானின் மறைவிடமான இன்பினிடி கேஸிலைக் கண்டுபிடித்து, அவனது கோட்டைக்குள் நுழைகிறது. அந்த "இன்ஃபினிட்டி கேஸில்" என்பது ஒரு சாதாரண கோட்டை அல்ல. அது நாகிமே என்ற ஒரு மாயாவியின் சக்தியால் உருவாக்கப்பட்ட ஒரு மாறுபட்ட உலகம். இது, டிமோன் ஸ்லேயர்கள் உள்ளே நுழையும்போது அவர்களைப் பல திசைகளில் சிதறடிக்கவும், குழப்பமடையச் செய்யவும் உதவுகிறது. இதனால், கோட்டைக்குள் நுழைந்தவர்கள், ஒருவருக்கொருவர் துண்டிக்கப்பட்டு, தனித்தனியே சக்திவாய்ந்த மாயாவிகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். பின் என்ன நடந்தது என்பதே இந்தப் பாகத்தின் கதை. குறிப்பாக டாஞ்சிரோ, அகாசாவுடன் சண்டையிடும் மிக நீண்ட காட்சிகளும், அதற்கூடாக சொல்லப்படும் மாயாவி அகாசாவின் பின்னணிக் கதையும் இந்தப் படத்தில் மிக முக்கியப் பங்குவகிக்கிறது.

இது வெறுமனே ஒரு சண்டைப் படமாக இல்லாமல், இழப்பு, நம்பிக்கை, மற்றும் விடாமுயற்சி போன்ற உணர்ச்சிகரமான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதால் உலகெங்கும் இளைஞர்களைச் சென்றடைந்ததில் வியப்பில்லை.

Puthuyugam
www.puthuyugam.com