மலையாளத் திரையுலகின் தந்தை ஜே.சி.டேனியல்..!

கடன்சுமை தாளாமல் தொழில் உபகரணங்கள் மட்டுமின்றி தனது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.  பின்பு தனது கடைசிக்  காலத்தை தமிழகத்தின் பாளையங்கோட்டையில் கழித்தார்.
ஜே.சி.டேனியல்
ஜே.சி.டேனியல்Wiki
Published on

1928. கேரளம். மலையாள மொழியில் வெளியாகும் முதல் திரைப்படமான விகதகுமரன் திரையிடுவதற்குத் தயாராக இருந்தது. முதன்முதலாகத் திரைப்படம் எனும் கலையை தங்களது மொழியில் கண்டுகளிக்க மிகுந்த ஆர்வத்தோடு பலரும் குழுமியிருந்தனர்.. திரையில் ஒளி வந்து விழுந்தவுடன் கண்ணெதிரே தோன்றிடும் ஒரு மெய் நிகர் உலகம் என்ற மிகச்சமீபத்திய திரைப்படக் கலையை அதிசயித்துப் பார்க்க... படம் துவங்கியது. 

பார்வையாளர்களோடு ஒரு பெண்ணும் அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்தாள். அவளது தோற்றத்தை வைத்து அவளொரு பட்டியலினச் சாதியைச் சேர்ந்தப் பெண் என்று கண்டுகொண்டதும், திருவனந்தபுரம் திரையரங்கத்தில் அமர்ந்திருந்த மக்களிடையே ஒரு சலசலப்பு கிளம்பியது. சாதி வெறி வேரூன்றிருந்த காலக்கட்டம் அது. தன்னை நோக்கிப் பரவத் துவங்கிய முகச் சுளிப்புகளையும் தன் மீது ஊறிய வித்தியாசமான பார்வைகளையும் உணர்ந்தபடியே அங்கு அமர்ந்திருந்தாள் அவள். ஒரு புலையர் இனப்பெண் எப்படி தங்களுடன் அமர்ந்து திரைப்படம் பார்க்கலாம் என்று அங்கிருந்த சாதி இந்துக்கள் பிரச்சனை செய்து, அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கோரினர். இதை அதிகம் பெரிதுபடுத்தாமல் இருந்த ரோஸி, திரைப்படத்தைக் கண்டே தீரவேண்டும் என்ற உறுதியோடு தொடர்ந்து அங்கேயே அமர்ந்திருந்தார்.

ஜே.சி.டேனியல்
தமிழ் சினிமா vs மலையாள சினிமா: தற்போதைய போக்கு
 P K Rosi
P K RosiP K Rosi Foundation

படம் திரையிடப்பட்ட கொஞ்ச நேரத்தில்தான் அப்படத்தில் அந்தப் பெண்ணே நடித்திருக்கிறார் என்று அறிந்தார்கள் அம்மக்கள். தங்கள் முன்னே நிகழ்ந்து கொண்டிருந்த புதியதொரு கலையின் மீதான பிரமிப்பைத் தாண்டி, வெகுண்டெழுந்து, ஆவேசமாக கூச்சலிட்டுத் திரையை கிழிக்கத் தொடங்கினர். நடப்பவற்றையெல்லாம் செய்வதறியாத கையறுநிலையில் கவனித்துக்கொண்டிருந்த இன்னொரு ஜீவனும் அக்கூட்டத்தில் இருந்தது. அவர்தான், அப்படத்தை இயக்கிய ஜே.சி.டேனியல். கடும் உழைப்பால் அத்திரைப்படத்தை  தயாரித்து இயக்கிய டேனியல் அங்கிருந்து தப்பித்து ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தான் தயாரித்த முதல் படத்திற்கே இந்தப் பிரச்சனை வரக்  காரணம் என்ன? சமூகத்தில் கடும் எதிர்ப்புகளுக்கும் தடைகளுக்கும் உள்ளான, கேரளத்தின் முதல் திரைப்படத்தின் கதைப் பின்னணி என்ன? இதனை தயாரித்து இயக்கிய டேனியல் என்பவர் யார்? அவரது கதை என்ன..?

Daniel with his wife Janet
Daniel with his wife JanetBy Alexmothilal - Own work, CC BY-SA 4.0

நாகர்கோயிலை அடுத்த அகஸ்தீஸ்வரம் எனும் ஊரில் பிறந்தார் டேனியல். நாடகங்களும் திரைப்படங்களும் பார்ப்பதையே பாவச் செயலாகக் கருதிய மிகவும் கண்டிப்பானதொரு கத்தோலிக்க கிறித்தவ குடும்பத்தில் வளர்ந்தார். பல் மருத்துவரான இவர் தனது மேற்படிப்பிற்காக திருவனந்தபுரம் சென்றபோது, அங்கு திரைப்பட மற்றும் நாடக கலைஞர்களோடு பரிச்சயம் ஏற்படுகிறது.  மௌனப்படங்கள், மக்கள்  மத்தியில் பிரபலமடையத் துவங்கியிருந்த நேரம் அது. சினிமா டேனியலை ஈர்க்கத்தொடங்கியது. 

திரைப்படக்கலை மீதிருந்த ஆர்வத்தினாலும் தானே ஒரு திரைப்படம் எடுத்திட வேண்டும் என்ற ஆசையினாலும், திரைப்படக்கலையின் நுட்பங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள விரும்பினார். அன்று முக்கியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் இருந்த இடமான 'மெட்ராஸ் மாகாணத்திற்கு',  திரைப்படத் தயாரிப்பு குறித்து கற்றுக்கொள்வதற்காகச் செல்கிறார். அங்கு சரியான வசதிகள் இல்லாததால், பாம்பாய்க்குச் சென்று திரைப்படத் தயாரிப்பு தொழிழ்முறைகளைக் கற்றுக்கொண்டார் டேனியல். அங்கு பெற்ற அனுபவத்திற்குப் பின் திருவனந்தபுரம் திரும்பி தானே’ தி ட்ராவங்கூர் நேஷனல் பிக்ச்சர்ஸ்’ எனும் ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் அமைகிக்கிறார். தனது திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்தபின் ‘விகதகுமரன்’ என்று பெயர் வைத்து திரைப்படத்தை எடுக்கும் பணிகளில் இறங்கினார். 

அதுவரையில் புராணங்கள் மற்றும் வரலாற்று கதைகளை மட்டுமே மையப்படுத்தி வெளிவந்து கொண்டிருந்த திரைப்படங்களைப் போல் அல்லாமல் சமூக எதார்த்தத்தை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது டேனியலின் திரைக்கதை. தனது படத்தில் கதைக்கேற்ற  ஒரு பெண் நடிகரைத் தேடியலைந்தபோது, முதலில் ஒரு இந்தி நடிகை ஒப்பந்தமானார். ஆனால் அவர் பாதியில் விலகிக் கொள்ளவே, தனது நண்பர் பரிந்துரை செய்ததின் பேரில்,  கட்டிடத் தொழிலாளியான பி.கே.ரோஸி (எ) ராஜம்மாளை  நாடினார். ரோஸியிடம் அக்கதாபாத்திரத்தில் நடிக்குமாறு வேண்ட, அவர் நீண்ட தயக்கத்திற்குப்பின் நடிக்க சம்மதித்தார்.

1928 ஆம்  ஆண்டு, எந்தவித முன்னனுபவமின்றி, படத்தயாரிப்பிற்கான எவ்வித கட்டமைப்புகளின்றி திரைப்படத்தைத் தானே தயாரித்ததோடு மட்டுமல்லாமல் திரைக்கதை எழுதி, இயக்கி, படத்தொகுப்பு செய்து தனது அபாரமான உழைப்பினால் அத்திரைப்படத்தை எடுத்து முடித்தார். பெரும் போராட்டங்களிற்குப் பின், கேரளாவின் முதல் திரைப்படம் என்ற பெருமையோடு வெளிவந்த விகதகுமரன் பொதுமக்களின் கடும் எதிர்ப்பிற்கு உள்ளானது.  எதிர்ப்புக்குக் காரணம் என்ன தெரியுமா? கதையில் வரும் உயர் சாதி என்று கூறிக்கொள்ளும் வகுப்பைச் சார்ந்த நாயகிக்கான பாத்திரத்தில் ஒரு பட்டியலினச் சாதியைச் சார்ந்த பெண் நடித்ததை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்!

P K Rosy's 120th Birthday
P K Rosy's 120th BirthdayGoogle

அப்போது, ஒரு பெண் திரைப்படத்தில் நடிப்பது என்பதே பழமைவாதத்தால் ஊறிப்போயிருந்த ஆண் மையச் சமூகத்தால், இந்த சாதி விஷயத்தையும் அறவே ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றாக இருந்தது. அதிலும் கிறித்தவராக மதம் மாறிய ஒரு தலித் பெண், நாயர் சமூகத்துப் பெண்ணாக வேடமேற்று நடித்தது, அன்று கேரளத்தின் உயர் சாதி இந்துக்களிடையே தீவிரமான எதிர்ப்பை கிளப்பியது.

ரோஸி மீது தங்களது எதிர்ப்பை கூடுதலாக வெளிப்படுத்தினார்கள். இழி சொற்களையும் அவதூறுகளையும் கேட்காமல் அவரால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை இருந்தது. ஒரு கும்பல் அவரது குடிசையை எரிக்க முயன்றது, அப்போது ஒரு லாரி டிரைவரின் உதவியுடன் தீயில் இருந்து தப்பித்தார் ரோஸி. அவ்வளவு அவமானப்பட்ட, மலையாள சினிமாவின் முதல் நாயகியை அவரது 120வது பிறந்ததின நினைவில் Google, தன் முகப்பில் கொண்டாடியது வரலாறு!

அப்படி திருவனந்தபுரத்தில் சர்ச்சைக்குள்ளான ‘விகதகுமாரன்‘ ஆலப்புழா போன்ற கேரளத்தின் சில இடங்களில் மட்டுமே வரவேற்பை பெற்றது. இருந்தும் வியாபார ரீதியில் இத்திரைப்படம் படுதோல்வி அடைந்ததனால் பணநெருக்கடியில் கடனாளியானார் டேனியல். தனக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய கேரளா அரசாங்கத்திடம் பணஉதவி கோரினார்.  இவர் கேரளத்தைச் சேர்ந்தவர் இல்லை எனக்கூறி அன்று உதவி செய்ய மறுத்தது கேரளா அரசு, அவருக்கு உதவி வேண்டும் என்றால் அவர் தமிழக அரசிடம் தான் கோரிக்கை வைக்க வேண்டும் என்று வாதம் வைத்தது.

J C Daniel Tomb
J C Daniel TombBy Alexmothilal

கடன்சுமை தாளாமல் தொழில் உபகரணங்கள் மட்டுமின்றி தனது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.  பின்பு பல் மருத்துவ பணிக்குத் திரும்பி, தனது கடைசிக்  காலத்தை தமிழகத்தின் பாளையங்கோட்டையில் கழித்தார். தான் நேசித்த கலையின் மீதுகொண்ட அர்ப்பணிப்பிற்காகப் பல துன்பங்களை அவர் சந்தித்தார். உயிருடன் இருந்தபோது மலையாள சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்குக்  கிடைத்திருக்க வேண்டிய சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அந்த ஆதங்கமும் டேனியலுக்கு இருந்தது. 1975ல் மரிக்கும் தருணம் வரை, அவருக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

Celluloid Movie
Celluloid MovieMovie Poster

ஆனால் டேனியல் மலையாளத் திரைப்பட உலகின் அடித்தளத்திற்காக செய்த முதல் முயற்சியை சிலர் உணர்ந்திருந்தனர். செலங்கோட்டு கோபாலகிருஷ்ணன் எனும் திரைப்பட பத்திரிக்கையாளர் பல வருடங்களாகத் தொடர்ந்து அவரது கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் ஜே.சி. டேனியல்தான் மலையாள மொழியில் முதல் திரைப்படத்தை இயக்கியவர் என்றும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று எழுதி, போராடி வந்தார். கேரள அரசு இந்த உண்மையை வெகு நாட்களுக்குப் பின் உணர்ந்தது. 1992-ல் கேரள அரசு ஜே.சி. டேனியலை கேரளத்தவராக ஏற்றுக்கொண்டு அவரை மலையாள திரைப்பட உலகின் தந்தை என்று அங்கீகரித்தது. அத்தோடு மட்டுமல்லாமல் 1998இல் இருந்து ஜே.சி.டேனியேலை கெளரவிக்கும் விதமாக அவரின் பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வருடந்தோறும்  வழங்கி வருகிறது கேரள அரசாங்கத்தின் சலச்சித்ர அகாடமி.

 செலங்கோட்டு கோபாலகிருஷ்ணன், ஜே.சி.டேனியல் குறித்து எழுதிய நூலையும்,  வினு ஆப்ரகாம் நஷ்டநாயிகா' என்ற பெயரில் பி.கே.ரோஸியைக் குறித்து எழுதிய நூலையும் அடிப்படையாகக் கொண்டு 'செல்லுலாய்ட்' எனும் படம் 2013ல் வெளியானது. பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான இந்தப் படம் இளம்தலைமுறையினருக்கு ஜே.சி.டேனியலைக் குறித்து அறியச்செய்தது எனலாம்.

Puthuyugam
www.puthuyugam.com