டாடா குழுமத்தின் பார்சி அல்லாத முதல் தலைவர்: சந்திரசேகரன் சம்பளம் எவ்வளவு?

நாமக்கல்லைச் சேர்ந்த என். சந்திரசேகரன் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்தார். இவரது ஆண்டு சம்பளம் நம்மை தலைசுற்ற வைத்துவிடும்.
 N. Chandrasekaran
N. Chandrasekaran
Published on

தமிழகத்தைச் சேர்ந்த என். சந்திரசேகரன் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக சாம்ராஜ்யமாக டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2017 -ஆம் ஆண்டு முதல் டாடா குழுமத்தின் தலைவராகவுள்ள சந்திரசேகரனின் பதவிகாலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது.

டாடா குழும நிறுவனங்கள் உலகம் முழுவதும் பல சவால்களைச் சந்தித்து வரும் வேளையில், என். சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக, டாடா குழுமத்தின் பங்குகளும் சரிவை சந்தித்தன.

சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் முதன்மை நிறுவனமாக 'டாடா சன்ஸ்' (Tata Sons) உள்ளது. இந்நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), டாடா மோட்டார்ஸ், ஏர் இந்தியா உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீதப் பங்குகள், இந்தக் குழுமத்தின் அறக்கட்டளையான 'டாடா டிரஸ்ட்ஸ்' (Tata Trusts) வசமே உள்ளன. என். சந்திரசேகரனின் ராஜினாமாவுக்கு டாடா டிரஸ்ட் அறக்கட்டளை தலைவரான நோயல் டாடா முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள். மேலும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனுக்கு அடுத்த ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு ஒருமித்த ஆதரவு கிடைக்காததாலும் சந்திரசேகரன் ராஜினாமா செய்து விட்டதாகத் தெரிகிறது.

டாடா டிரஸ்ட்ஸ் தலைவரான நோயல் டாடா என்.சந்திரசேகரனின் மறுநியமனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அவரது மறுநியமனம் குறித்த அறிவிப்பை டாடா சன்ஸ் ஒத்திவைத்தது . 'டாடா சன்ஸ் நிறுவனம் ஒருபோதும் பங்குச் சந்தையில் பட்டியலிடக் கூடாது ' என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகளை நோயல் டாடா என். சந்திரசேகரனுக்கு விதித்ததாகவும், ஆனால், அத்தகைய உறுதிமொழி அளிக்க முடியாமல், சந்திரசேகரன் ராஜினாமா முடிவு எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

ratan tata and N. Chandrasekaran
ratan tata and N. Chandrasekaran

தொழில்துறையில் 'சந்திரா' என்று செல்லமாக அழைக்கப்படும் சந்திரசேகரன் நாமக்கல்லைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் திருச்சி ரீஜனல் இன்ஜீனியரிங் கல்லூரியில் பட்டம் பெற்றவர். அதோடு, மறைந்த ரத்தன் டாடாவின் மனதுக்கு நெருக்கமானவர். ரத்தன் டாடாதான் இவரை, தலைவராக 'டிக்' செய்தார். சுமார் 150 ஆண்டு கால டாடா குழும வரலாற்றில் முதன் முதலாக தலைவர் பதவியில் அமர்ந்த பார்சி இனத்தவர் அல்லாதவர் என். சந்திரசேகரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரத்தன் டாடா மறைந்த பிறகு, 2024ம் ஆண்டு டாடா அறக்கட்டளை தலைவராக அமர்ந்த நோயல் டாடாவுக்கும் சந்திரசேகரனுக்கும் கருத்து வேறுபாடு தொடர்ந்து, இருந்து வந்ததாகவும் தகவல் உள்ளது.

சந்திரசேகரன் கடந்து வந்த பாதை

கடந்த 1987ம் ஆண்டு என். சந்திரசேகரன் டி.சி.எஸ் நிறுவனத்தில் டிரெய்னி புரோகிரமராக பணியில் சேர்ந்தார். 2009ம் ஆண்டு அதே டி.சி.எஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார். பின்னர், 2007ம் ஆண்டு டாடா குழுமத்துக்கே தலைவரானார். இவரது , தலைமையில்தான் டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. கடந்த நிதியாண்டில் ஏர்இந்தியா 22, 238 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது.

2025ம் ஆண்டு நடந்த அகமதபாத் ஏர் இந்தியா விமான விபத்தும் டாடா குழுமத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் டாடா அறக்கட்டளைக்கும் குழுமத் தலைவரான என். சந்திரசேகரனுக்குமிடையே விரிசல் விழ முக்கியக் காரணமாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது.

தற்போது, 63 வயதான சந்திரசேகரன் கடந்த நிதியாண்டில் மட்டும் சம்பளம் மற்றும் இதர சலுகைகளாக 158 கோடியை பெற்றுள்ளார். நாட்டிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நிறுவனத் தலைவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 671 கோடியை அவர் சம்பளமாகப் பெற்றுள்ளார். போட்டோகிராபி, மாரத்தன் ஓட்டம் போன்றவற்றிலும் என். சந்திரசேகரன் ஆர்வம் கொண்டவர்.

'என். சந்திரசேகரனுக்குப் பிறகு டாடா குழுமத்தை கட்டி ஆள்வது யார்?' இப்போது எழுத்திருக்கும் கேள்வி இதுதான்!

Puthuyugam
www.puthuyugam.com