இந்தியாவின் முன்னணி நடிகர்கள், கிரிக்கெட்டர்கள் வணிக விளம்பரங்களில் (Brand Endorsements) நடித்தும் கோடிகளில் பணத்தை சம்பாதிக்கின்றனர். 2025ம் ஆண்டு அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்களில் முதலிடத்தில் இருந்த விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி, நாட்டின் மதிப்புமிக்க (Most Valuable) பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலமாக நடிகர் ஷாருக்கான் மாறியுள்ளார்.
'க்ரோல்' (Kroll) நிறுவனம் வெளியிட்டுள்ள பிரபலங்களின் வணிக மதிப்பு (Celebrity Brand Valuation) அறிக்கையின்படி, 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் ஷாருக்கான் ரூ.1,691 கோடி பிராண்ட் வேல்யூ கொண்டுள்ளார். 2024- ஆம் ஆண்டு முதலிடத்தில் இருந்த விராட் கோலியை நடிகர் ஷாருக்கான் முந்தியுள்ளார். இது, ஷாருக்கானை நாட்டின் பெரும் பணக்கார நடிகராக மாற்றியுள்ளது. ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு 13 ஆயிரம் கோடியாகும்.
2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் 25 பிரபலங்களின் ஒட்டு மொத்த வணிக மதிப்பு 2 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 19,014 கோடி) உள்ளது. ஒவ்வொரு பிரபலத்தின் விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலுள்ள செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது.
நடிகர் ரன்வீர் சிங் 162.9 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 1,548 கோடி) பிராண்ட் மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் . 2024 -ஆம் ஆண்டுப் பட்டியலில் முதலிடத்திலிருந்த விராட் கோலி, 158.4 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 1,505 கோடி) மதிப்புடன் மூன்றாவது இடத்துக்குப் பின்தங்கியுள்ளார்.
கிரிக்கெட் நட்சத்திரங்கள், தொடர்ந்து நல்ல பிராண்ட் மதிப்பைக் கொண்டுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 125.9 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 1,196 கோடி) மதிப்புடன் நான்காவது இடத்திலும் மகேந்திர சிங் தோனி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். இவரது பிராண்ட் மதிப்பு 115.3 மில்லியன் டாலராக (சுமார் ரூ. 1,096 கோடி) மதிப்பிடப்பட்டுள்ளது. 62 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 589 கோடி) பிராண்ட் மதிப்புடன் ரோஹித் சர்மா 14-வது இடத்தைப் பிடித்தார். 44.6 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 424 கோடி) மதிப்புடன் ஜஸ்பிரித் பும்ரா 20-வது இடத்தைப் பெற்றார்.
நடிகை ஆலியா பட் 93.9 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 892 கோடி) பிராண்ட் மதிப்புடன் ஆறாவது இடத்திலும், தீபிகா படுகோன் 89.2 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 848 கோடி) மதிப்புடன் ஏழாவது இடத்திலும் உள்ளனர். நடிகர் ஹிருத்திக் ரோஷன் 88.9 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 845 கோடி) மதிப்புடன் எட்டாவது இடத்தில் இருக்கிறார். அமிதாப் பச்சன் 80.8 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 768 கோடி) மதிப்புடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் தலா 80 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 760 கோடி) மதிப்புடன் 10-வது இடத்தில் உள்ளனர்.
இளம் பிரபலங்கள் பலரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். நடிகை ராஷ்மிகா மந்தனா 12-வது இடத்திலும், அனன்யா பாண்டே 19-வது இடத்திலும் சமந்தா 21-வது இடத்திலும் உள்ளனர். ஜான்வி கபூர் 23-வது இடத்திலும், ஷ்ரத்தா கபூர் 24-வது இடத்திலும் இருக்கிறார்கள். கரீனா கபூர், கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானி, கிருதி சனோன், தமன்னா பாட்டியா மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரும் முதல் 25 இடங்கள் கொண்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் தமிழ்ப் படங்களில் நடித்த சமந்தா, தமன்னா இருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். தமிழ் நடிகர்களுக்கு 25 பேர் கொண்ட பட்டியலில் இடமில்லை.
தமிழ் நடிகர்கள் இடம்பெறவில்லை என்பதைக் குறையாகப் பார்க்கவேண்டியதில்லை. ஷாருக், அமிதாப் போன்ற பிரபலங்கள் பான் மசாலா உள்ளிட்ட கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு விளம்பரங்கள் செய்வதுண்டு. இன்னும் சொல்வதென்றால், மதுபான வகைகளுக்கும் - அந்த ப்ராண்டின் தண்ணீருக்கு விளம்பரம் செய்வது போல - வட இந்திய நடிகர்கள் விளம்பரத்தில் தோன்றுவதைக் காணலாம். நம் தமிழ் நடிகர்கள் இதில் கொஞ்சம் சென்சிடிவிடியைக் கடைபிடிக்கிறார்கள் என்றே சொல்லலாம். துணிக்கடை, நகைக்கடை என்று சமூகக் கேடில்லாத விளம்பரங்களில்தான் தோன்றுவார்கள்.
புகழ்பெற்ற நட்சத்திரங்கள் தொடர்ந்து நல்ல பிராண்ட் மதிப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். தற்போது, சமூக ஊடகங்களில் இளம் பிரபலங்களுக்குள்ள செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு விளம்பர நிறுவனங்கள் பிராண்ட் அம்பாசிடரைத் தேர்வு செய்வதாக' க்ரோல்' தெரிவித்துள்ளது.