BSNL சாட்டிலைட் போன் அறிமுகம்... யாரெல்லாம் வாங்க முடியும்?

அருகிலுள்ள மொபைல் கோபுரங்களைச் சார்ந்திருக்கும் தொலைபேசிகளைப் போல் இல்லமல் , இந்தத் தொலைபேசி நேரடியாக செயற்கைக்கோள்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால், சிக்னல் இல்லாத பகுதிகளிலும்கூட நம்மால் பயன்படுத்த முடியும்.
Image AI
Image AI
Published on

மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் மக்கள் தொடர்பில் இருக்க உதவும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய செயற்கைக்கோள் தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலைபேசியின் விலை, ஆப்பிள் ஐ போனை விட அதிகமாகும்.

வழக்கமான மொபைல் நெட்வொர்க்குகள் இல்லாத இடங்களில் பயன்படுத்தும் வகையில், எஸ்என்எல் இந்த செயற்கைக்கோள் தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது. யார் வேண்டுமானாலும் இந்தத் தொலைபேசியை எளிதாக வாங்கிப் பயன்படுத்த முடியாது. இந்தியாவில், செயற்கைக்கோள் தொலைப்பேசியைப் பயன்படுத்த பல கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தத் தொலைபேசியை வாங்குவதற்கு மத்திய தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (DoT) முறையான அனுமதியைப் பெற வேண்டும்.

அருகிலுள்ள மொபைல் கோபுரங்களைச் சார்ந்திருக்கும் தொலைபேசிகளைப் போல் இல்லமல் , இந்தத் தொலைபேசி நேரடியாக செயற்கைக்கோள்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால், சிக்னல் இல்லாத பகுதிகளிலும்கூட நம்மால் பயன்படுத்த முடியும். இது, அவசர காலங்களில் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இன்மார்சாட் (Inmarsat) போன்ற சர்வதேச செயற்கைக்கோள் நிறுவனங்களுடன் இணைந்து இந்த சாட்டிலைட் தொலைபேசி உருவாக்கப்பட்டுள்ளது .

பிஎஸ்என்எல் செயற்கைக்கோள் தொலைபேசி: முக்கிய அம்சங்கள் என்ன?

மொபைல் நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் செயற்கைக்கோளுடன் இந்த தொலைபேசி இணைக்கப்பட்டுள்ளது.

தொலைதூர இடங்களிலிருந்து குரல் அழைப்பு பெற முடியும்.

இக்கட்டான சூழ்நிலைகளுக்கான SOS அவசர உதவி கோர முடியும்.

சார்ஜிங் வசதிகள் இல்லாத இடங்களில் நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கான நீண்டகால ஆயுள் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்படுகிறது.

சவால் நிறைந்த இடங்களில் பயன்படுத்தும் வகையில் உறுதியான மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு

வழக்கமான மொபைல் நெட்வொர்க்குகள் கிடைக்காத பகுதிகளில் தகவல் தொடர்பு தேவைப்படும் மக்கள் மற்றும் நிறுவனங்களுக்காக இந்த செயற்கைக்கோள் தொலைபேசியை வடிவமைத்துள்ளதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் துறை, கடல்சார் நடவடிக்கைகள், பேரிடர் மீட்புப் பணிகள், சுரங்கத் தொழில், தொழிற்சாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் வழியாகப் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் சாகசப் பயணங்களில் ஈடுபடுபவர்கள் இந்த தொலைபேசியை வாங்கிக் கொள்ள முடியும்.

ரூ. 134,166 விலை கொண்ட இந்த செயற்கைக்கோள் தொலைபேசி (satellite phone), மிக முக்கியமான மற்றும் அவசரச் செயல்பாடுகளுக்காக (mission-critical situations) வடிவமைக்கப்பட்ட சிறப்புத் தகவல் தொடர்பு சாதனமாகும்.

உரிய அனுமதியின்றி செயற்கைக்கோள் தொலைபேசியை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது இந்திய சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய செயல். இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர், பி.என்.என்.எல் அலுவலகத்தை அணுகலாம்.

மேலும், நாடு முழுவதும் 4G சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இதுவரை சுமார் 99,000 4G தளங்களை (sites) செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கூடுதல் 4G தளங்களை அமைக்க இந்த நிறுவனத்தை அனுமதிப்பது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

கடந்த 2000ம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.எஸ்.என்.எல் நிறுவனம் மத்திய அரசுக்குச் சொந்தமானது. இந்த நிறுவனம் இந்தியா, மொரிஷியஸ், நேபாள நாடுகளுக்கு சேவை வழங்குகிறது. ஒரு காலக்கட்டத்தில், இந்தியாவின் முன்னணி செல்போன் நிறுவனமாக இருந்தது. பின்னர், தனியார் செல்போன் நிறுவனங்கள் சந்தைக்குள் நுழைந்ததால், பி.எஸ்.என்.எல் தனது மவுசை இழந்தது. எனினும், இப்போதும் தனியார் செல்போன் நிறுவனங்களின் சிக்னல் இல்லாத இடங்களில், குறிப்பாக மலைப்பிரதேசங்களில் பி.எஸ்.என்.எல்தான் கோலோச்சுகிறது!

Puthuyugam
www.puthuyugam.com