இனி குறைந்த கட்டணத்தில் பறக்கலாம்.. வருகிறது கூட்டுறவு சங்க பயணிகள் விமான நிறுவனம்!

முதல்கட்டமாக கரீபூர் (கோழிக்கோடு விமான நிலையம்), சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு, மங்களூரு, கண்ணூர் போன்ற நகரங்களுக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். பட்ஜெட் கட்டணத்தில் இந்த விமான நிறுவனம் செயல்படும்.
இனி குறைந்த கட்டணத்தில் பறக்கலாம்.. வருகிறது கூட்டுறவு சங்க பயணிகள் விமான நிறுவனம்!
Published on

நாட்டிலேயே கூட்டுறவு சங்கங்கள் வழியாக முதன்முறையாக பயணிகள் விமான நிறுவனம் கேரளத்தில் தொடங்கப்படுகிறது.

தற்போதைய நவீன காலக்கட்டத்தில் விமானப்பயணம் அத்தியாவசியமாகி விட்டது. இதனால் பல சிறிய நகரங்களிலும்விமான நிலையங்கள் அமையவுள்ளன. இந்தியாவில் உதான் (UDAN) திட்டத்தின் கீழ் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக, ரூ.28,840 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உதான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சுற்றுலா மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தஞ்சை உள்ளிட்ட 8 நகரங்களில் புதிய விமான நிலையங்கள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குட்டி விமானங்களுக்கும் தேவை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு சங்கங்கள் வழியாக விமான நிறுவனம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கோழிக்கோடு எம்.வி. ராகவன் நினைவு புற்றுநோய் மையத்தின் தலைவர் விஜயகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடத்தில் அவர் பேசியதாவது, ''கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்படும். இதற்காக, இரண்டு 72 இருக்கைகள் கொண்ட விமானத்தை நாங்கள் குத்தகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளோம் . முதல்கட்டமாக கரீபூர் (கோழிக்கோடு விமான நிலையம்), சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு, மங்களூரு, கண்ணூர் போன்ற நகரங்களுக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். பட்ஜெட் கட்டணத்தில் இந்த விமான நிறுவனம் செயல்படும். குறைந்தபட்ச டிக்கெட் விலை 3,500 ஆக இருக்கும். விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, விற்காத டிக்கெட்டுகளை தள்ளுபடி விலையில் விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்க விதிகளின் கீழ், இந்த நிறுவனம் பதிவு செய்யப்படும். இந்த நிறுவனத்தில் கேரளாவில் செயல்படும் 200 கூட்டுறவு சங்கங்கள் தலா 2 கோடி முதலீடு செய்யவுள்ளன. கிட்டத்தட்ட 400 கோடி மதிப்பில் இந்த நிறுவனம் உருவாக்கப்படும். அரசிடம் இருந்து நாங்கள் எந்த நிதியும் பெறவில்லை. எனினும், இந்த நிறுவனத்துக்கு கேரள முதல்வர்தான் தலைவராக செயல்படுவார். கூட்டுறவுத்துறை அமைச்சர் துணைத் தலைவராக நியமிக்கப்படுவார். இந்தத் திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் மேலும், பல நகரங்களுக்கு சேவை விரிவு செய்யப்படும். இதுதவிர, விமானப் பயிற்சிப் பள்ளி ஒன்றை தொடங்கும் எண்ணமும் உள்ளது.

C N Vijayakrishnan
C N Vijayakrishnan MVR Cancer Centre & Research Institute

மாதம் ஒன்றுக்கு விமான நிறுவனத்தை நடத்த 3.20 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விமான நிறுவனத்துக்கு கோ- கேரளம் (Co-Keralam) என்ற பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசிடம் திட்டம் குறித்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. பாசிடிவான பதில் கிடைத்துள்ளது. 200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பயணிகள் குறைவாக இருந்தால்கூட, ஆரம்ப ஆண்டுகளின் நட்டத்தை சமாளிக்க முடியும். நிறுவனம் செயல்படத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, லாபப் பாதைக்கு திரும்பி விடும். அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்தவுடன், அடுத்த கட்டப்பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

கோ- கேரளம் விமான நிறுவனம் தொடங்கப்படும் பட்சத்தில் நாட்டிலேயே கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் விமான நிறுவனம் என்ற பெருமையை பெறும். கோழிக்கோட்டிலுள்ள எம்.வி.ஆர் புற்றுநோய் மையம், கோழிக்கோடு கூட்டுறவு சங்கம் மற்றும் கேர் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. புற்றுநோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Puthuyugam
www.puthuyugam.com