ஏர்பஸ் A380 விமானம் நவீன காலத்தின் 'வானத்தின் அரசன்' என்று கருதப்படுகிறது. இதுவரை உருவாக்கப்பட்ட பயணிகள் விமானங்களில் மிகப்பெரியது இதுவாகும்.
வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்து குறித்த கண்ணோட்டத்தையே முற்றிலுமாக மாற்றியமைத்த ஒரு பிரமாண்டமான பறக்கும் இயந்திரம் இந்த விமானம் என்றால் அது உண்மையே. ஏர்பஸ் A380 வானில் எழும்பி பறக்க தொடங்கும் போதே, அதன் பிரமாண்டம் நம்மை அப்படியே பிரமிக்க வைத்து விடும்.
கடந்த 2007ம் ஆண்டு ஏர்பஸ் நிறுவனம் இந்த விமானத்தை முதன்முதலாக விற்பனை செய்தது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதல்முதலாக இந்த விமானத்தை வாங்கி, சேவையில் ஈடுபடுத்தியது. இத பிரமாண்டமான அளவு, ஆடம்பரமான உட்புற அழகு மற்றும் ஸ்மூத்தான பயணம் போன்ற காரணங்களால் சர்வதேச விமானப்பயணிகள் மத்தியில் வெகுவாகப் பிரபலமானது. தற்போது, 8,00,000-க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் மூலம் இந்த விமானம் இதுவரை 30 கோடிக்கும் மேற்பட்ட பயணிகளைச் சுமந்து சென்றுள்ளது.
A 380 உருவானது எப்படி?
1990ம் ஆண்டுகளில் நீண்டதூர விமானப் போக்குவரத்துத் துறையில் அமெரிக்காவின் போயிங் 747 ரக விமானமே ஆதிக்கம் செலுத்தி வந்தது. போயிங் 747க்கு போட்டியாக பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனம் உருவாக்கியதே A380 ரக விமானம். பல சிறிய ரக விமானங்களை இயக்குவதற்குப் பதிலாக, முக்கிய நகரங்களுக்கு இடையே ஒரே நேரத்தில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில், இந்த விமானம் தயாரிக்கப்பட்டது. எனவே மிகப்பெரியதும், நீளமும் கொண்ட இரு அடுக்கு (double-decker) விமானத்தை ஏர்பஸ் நிறுவனம் வடிவமைக்கத் தொடங்கியது. 2000-ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் விமானப் போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் லட்சியம் வாய்ந்த முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது.
விமானப் போக்குவரத்துத் தரநிலைகளின்படி, A380 ஒரு பிரம்மாண்டமான விமானமாகும். சுமார் 73 மீட்டர் நீளமும் கிட்டத்தட்ட 80 மீட்டர் இறக்கை விரியும் அளவும் கொண்ட இந்த விமானம், இரண்டு மாடிகளைக் கொண்டுள்ளது.
முழுமையாக 'எகானமி' (Economy) வகுப்பு இருக்கைகளை மட்டும் கொண்டிருந்தால், இந்த விமானத்தில் அதிகபட்சமாக 853 பயணிகள் வரை பயணிக்க முடியும். இவ்வளவு பெரிய விமானமாக இருந்தாலும், வானில் பறக்கும்போது மிகவும் ஸ்மூத்தாக இயங்கும்.
இந்த விமானத்தை உருவாக்குவது மிகவும் பொறியியல் சவாலாக இருந்தது. விமானத்தின் பல்வேறு பாகங்கள் ஐரோப்பா முழுவதும் தயாரிக்கப்பட்டன. உதாரணமாக, இறக்கைகள் பிரிட்டனிலும் வால் பகுதிகள் ஸ்பெயினிலும் தயாரிக்கப்பட்டன; இறுதிக் கட்ட ஒருங்கிணைப்புப் பணிகள் பிரான்ஸிலுள்ள டூலூஸ் (Toulouse) நகரில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ரக விமானங்கள் அதன் பிரமாண்டத்துக்கு மட்டுமல்லாமல் நவீனகாலப் பயண வசதிக்காகவும் புகழ்பெற்றது. அழகான வசதியான கேபின்கள், அகலமான இருக்கைகள், உயரமான மேற்கூரைகள் மற்றும் பயணிகளுக்கு அதிக தனிப்பட்ட இடம் கிடைக்கும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டதாக ஏர்பஸ் நிறுவனம் குறிப்பிடுகிறது. விமானம் மிகப் பெரியதாக இருப்பதால், காற்றுச் சுழற்சியினால் ஏற்படும் குலுக்கல் அறவே இருக்காது. விமானம் ரன்வேயில் இருந்து புறப்படும் போது கேபினுக்குள் பெரிய அளவில் குலுக்கலை உணர முடியாது. இப்படிப்பட்ட பயண அனுபவத்துக்காகவே, இந்த ரக விமானங்களில் பயணம் செய்ய விமானப்பயணிகள் விரும்புகின்றனர்.
உலகில் எமிரேட்ஸ் (Emirates) விமான நிறுவனம்தான் A380 ரக விமானங்களை அதிகளவில் இயக்குகிறது. விமானத்தில் ஓய்வறைகள் (Lounges), தனிப்பட்ட முதல்-வகுப்பு அறைகள் (Suites), குளியலறைகள், ஆடம்பரமான பிசினஸ் வகுப்பு இருக்கைகளை எமிரேட்ஸ் நிறுவனம் வடிவமைத்து வாங்கியுள்ளது. நீண்ட தொலைவு பயணத்தின் போது, பயணிகள் 40,000 அடி உயரத்தில் குளியல் அனுபவத்தையும் பெற முடியும்.
அமீரகத்தின் எமிரேட்ஸ் நிறுவனம்தான் A380 ரக விமான உற்பத்திக்கு அதிகளவில் ஆர்டர்களைக் கொடுத்தது. முக்கியமான வாடிக்கையாளராகவும் இருந்தது. ஆனால், கடந்த 2019ம் ஆண்டு எமிரேட்ஸ் நிறுவனம் தனது ஆர்டர்களைக் குறைத்துக்கொண்டது.
இதையடுத்து, 2021ம் ஆண்டுடன் A380 விமானத்தின் தயாரிப்பு நிறுத்தப்படும் என்று ஏர்பஸ் நிறுவனம் அறிவித்து விட்டது. உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், உலகம் முழுக்க பல முக்கிய விமான நிறுவனங்களின் சேவையில் ஏர்பஸ் A380 தொடர்ந்து இயங்கும்.