71 ஆண்டுகளில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் செய்த விஷயம்! #RoyalEnfield

1955ம் ஆண்டு சென்னையில் உற்பத்தியை தொடங்கிய ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 71 ஆண்டுகளுக்குப் பிறகு, வேறு மாநிலத்தில் முதல் தொழிற்சாலையை அமைக்கிறது.
eicher motors md with andhra chief minister
eicher motors md with andhra chief minister
Published on

சென்னையின் முக்கியத் தொழிற்சாலைகளில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனமும் ஒன்று. இங்கிலாந்தில் 1901ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம், சென்னையில் 1955-ஆம் ஆண்டு கால்பதித்தது. தற்போது, இந்த நிறுவனம் 15 வகையான மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்கிறது. இதில் ஹண்டர் ரக மோட்டார் சைக்கிள் குறைந்தபட்சமாக 1.37 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ராயல் என்ஃபீல்ட் சூப்பர் மீட்டியோர் 650 ரகம் அதிகபட்சமாக 4 லட்சத்துக்கு விற்பனையாகிறது. சென்னையில் ஓரகடம், திருவொற்றியூர் ஆகிய இடங்களிலும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்துக்குத் தொழிற்சாலைகள் உள்ளன.

இந்தச் சூழலில், உள்நாட்டு மற்றும் உலகளவில் தேவை அதிகரித்து வரும் நிலையில், அடுத்தகட்ட விரிவாக்கத்திற்கு ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தயாராகியுள்ளது. இதனால் ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதிக்கு அருகிலுள்ள தடா பகுதியில் ஒரு புதிய உற்பத்தி மையத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இந்தத் தொழிற்சாலையில் சுமார் ரூ. 2,500 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 14.6 லட்சம் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. அதோடு, கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாட்டிலுள்ள செய்யார் ஆலையை விரிவுபடுத்துவதற்காக ரூ.958 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த ஆலையும் விரிவு படுத்தப்பட்டால், ஆண்டுக்கு 20 லட்சம் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்ய முடியும்.

தற்போது, ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தை Eicher Motors Limited கையகப்படுத்தியுள்ளது. 1955ம் ஆண்டு தமிழகத்துக்கு ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் வந்த பிறகு, முதன்முறையாக மாநிலத்துக்கு வெளியே ஆந்திராவில் உற்பத்தி மையத்தை அமைக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

royal enfield company
royal enfield company

இது குறித்து ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி. கோவிந்தராஜன் கூறுகையில், ''ஆந்திரப் பிரதேசத்தில் செய்யப்படும் இந்த முதலீடு, நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சி திட்டங்களுக்கு உதவியாக இருக்கும். தென்னிந்தியாவில் உற்பத்தியை பரவல்படுத்த முடியும். ஏற்கெனவே, ஆந்திரப் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் சேவை மையங்களை தொடங்கியுள்ளோம். இதனால், இந்த மாநிலத்தில் 1,200-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்'' என்கிறார்.

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் நான்கு தொழிற்சாலைகளையும் வங்கதேசம், நேபாளம், பிரேசில், தாய்லாந்து, அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் 7 CKD அசெம்பிளி யூனிட்களையும் நடத்தி வருகிறது. (அதாவது, பைக்கின் பாகங்கள் தனித்தனியாக ஏற்றுமதி செய்யப்பட்டு அந்தந்த நாடுகளில் அசெம்பளிங் செய்யும் மையம்) சென்னையிலும், பிரிட்டனில் Leicestershire-ல் உள்ள Bruntingthorpe Proving Ground - இலும் தொழில்நுட்ப ஆய்வு மையங்களையும் கொண்டுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டில், ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்கள் உலகளவில் 1.20 கோடி விற்பனையை எட்டியது. தொடர்ந்து, இரண்டாவது ஆண்டாக கோடிக்கும் அதிகமான பைக்குகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், 2025 -ம் ஆண்டுக்கான ஜே.டி. பவர் இந்தியா இருசக்கர வாகனங்களின் ஆரம்பக்கட்ட தர ஆய்வில் இந்த பிராண்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதோடு, 2026ம் ஆண்டு பிராண்ட் ஃபைனான்ஸ் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி வழங்கிய, உலகின் சிறந்த ஆட்டோமொபைல் பிராண்டுகளில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Puthuyugam
www.puthuyugam.com