சமீபத்தில் அஜித் நடித்த ‘கேம்பா எனர்ஜி’ குளிர்பான விளம்பரம் பற்றிப் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தக் கேம்பகோலாவுக்கும், ரஜினிகாந்துக்கும் ஒரு சிறிய தொடர்பு இருக்கிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவரது தொடக்க காலமான 1970களின் இறுதிப்பகுதியில் நடித்த முதலும், கடைசியுமான விளம்பரப்படம் ‘பாம் கோலா’ (Palm Cola) என்ற பெயரிலான குளிர்பான விளம்பரம் மட்டுமே. அதுவும் இந்த கேம்பா நிறுவனத் தயாரிப்புதான்!
1950கள் முதல், 1970களின் பிற்பகுதி வரையில் இந்திய சந்தையில் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் கோலோச்சிக் கொண்டிருந்தன. அதன் பின்னர், இந்திய அரசின் கொள்கை மாற்றம் காரணமாக, கோககோலா போன்ற வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்தியாவை விட்டு தற்காலிகமாக வெளியேறி, 1990களுக்குப் பின், கொள்கைகள் தளர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் உள்ளே வந்தன. இந்த இடைப்பட்ட சுமார் 15 ஆண்டுகள், உள்நாட்டுக் குளிர்பான தேவையை பூர்த்தி செய்ய சில இந்திய நிறுவனங்கள் முயற்சித்தன. அவற்றில் ஒன்றுதான் ‘கேம்பா’ நிறுவனம் தயாரித்த பாம் கோலா! கோககோலா போலவே பெயர், எழுத்து வடிவம், நிறம், சுவை என அது முயற்சிக்கப்பட்டது. அதில்தான் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
விளம்பரமே செய்வதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டிலிருந்த கமல்ஹாசன், 2015ல் தன் கொள்கையிலிருந்து விலகி, நடித்த ஒரே விளம்பரப்படம், போத்தீஸ் ஜவுளி நிறுவனத்துக்கானது. நடிகர் விஜய் கோககோலா (1990களில் கோககோலா இந்தியாவுக்கு மீண்டும் வந்தபோது), டாடா டொகோமோ, ஜோஸ் ஆலுக்காஸ் போன்ற பல விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். போலவே நடிகர் அஜித், ஹவாய் செப்பல், நெஸ் கஃபே, கேம்பா எனர்ஜி போன்ற விளம்பரங்களில் வந்திருக்கிறார். சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு, விக்ரம் என்று பலருமே, பல்வேறு விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள்.
இது தவிர, கமல்ஹாசனும், ரஜினிகாந்தும், தமிழக அரசின் போலியோ விழிப்புணர்வு உள்ளிட்ட பல அரசு விளம்பரங்களிலும் நடித்துள்ளனர். கமல்ஹாசன் சிறிது காலம் ஐ.நா அமைப்பின் ஹெ.ஐ.வி விழிப்புணர்வுக்கான விளம்பரத் தூதுவராகவும் இருந்திருக்கிறார்.
இப்படித் தமிழ் நடிகர்கள் குறைவாகவும், உணவு, ஜவுளி, தங்கம் சார்ந்த அதிக சமூக பாதிப்பில்லாத விளம்பரங்களிலும், விழிப்புணர்வுப் படங்களிலும் நடித்து வந்திருக்கும் அதே வேளையில், வடக்கே ஹிந்தி சூப்பர்ஸ்டார்கள் செய்த வேலை என்ன?
சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதோடு, ஒவ்வொருவரும், ஏராளமான விளம்பரப்படங்களில் நடித்துக் கோடிகளைக் குவித்து வருகிறார்கள் ஹிந்தி ஸ்டார் நடிகர்கள். ஷாருக்கான், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலிகான், சல்மான் கான் என அத்தனை முன்னணி நடிகர்களும் புகையிலையின் மாற்று வடிவமான பான் மசாலா விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான ரசிகர்கள், குறிப்பாக இளைஞர்கள் அவர்களைப் பின்பற்றும் நிலையில், இத்தகைய விளம்பரங்களில் அவர்கள் நடிப்பது சரிதானா எனும் தார்மீகக் கேள்வியை எழுப்புகிறது.
போலவே, இந்தியாவில் மதுபான விளம்பரங்களுக்கானத் தடை 1995-லிருந்து நடைமுறையில் உள்ளது. இதனால், மதுபான நிறுவனங்கள் சரொகேட் விளம்பரம் (Surrogate Advertising) எனப்படும் மறைமுக விளம்பர உத்திகளையைப் பயன்படுத்துகின்றன. இதில் சோடா, தண்ணீர், மியூசிக் சிடிக்கள் போன்ற பிற தயாரிப்புகளை அதே மதுபான பிராண்ட் பெயரில் தயாரித்து விளம்பரப்படுத்தி, நுகர்வோர் மனதில் மதுபான பிராண்டை நினைவூட்டுகின்றனர். இத்தகைய சரொகேட் விளம்பரங்களிலும், ஷாருக்கான் மற்றும் சயிஃப் அலிகான் (Imperial Blue), சஞ்சய் தத் (The Glenwalk), ரன்வீர் சிங் (Rangeela), அஜய் தேவ்கன் (GlenJourneys) என பலரும் வகைதொகையில்லாமல் நடித்து வருகிறார்கள்.
இந்தியில் நிலைமை இப்படியிருக்க, தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் இந்தப் பாதையைத் தவிர்த்தது தற்செயலானதா அல்லது அவர்களின் பொறுப்புணர்வா அல்லது பிம்பம் குறித்த பயமா?
சமூகத்தின் தனித்துவம்:
தமிழகம் என்பது திராவிட இயக்கங்கள் மற்றும் சமூக நீதி போராட்டங்களால் செழுமைப்படுத்தப்பட்ட ஒரு மண். இங்கே சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது மக்களின் உணர்வோடும், அரசியலோடும் பின்னிப் பிணைந்தது. மது ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு என்பது தமிழக அரசியலின் நீண்டகாலப் பேசுபொருளாக இருக்கிறது. ஒரு தமிழ் நடிகர் மதுபான விளம்பரத்தில் நடித்தால், அது அவருடைய பிம்பத்தை (Image) தார்மீக ரீதியாகச் சிதைத்துவிடும் என்பதை உணர்ந்துள்ளார்கள். அந்த 'சமூக அழுத்தம்' (Social Pressure) நடிகர்களை இத்தகைய விளம்பரங்களில் இருந்து தள்ளி வைத்திருக்கிறது.
பொறுப்புணர்வு:
தமிழ்நாட்டில் நடிகர்களின் ரசிகர் மன்றங்கள், நற்பணி மன்றங்களாக, சமூக அமைப்புகளாகச் செயல்படுகின்றன. ரஜினிகாந்த், கமல்ஹாசன் தொடங்கி இன்றைய அஜித், விஜய், சூர்யா வரை ஒவ்வொரு நடிகரும், பின்னணி நோக்கம் என்னவாக இருந்தாலும் தங்களை ஒரு 'முன்னுதாரணமாக' (Role Model) நிலைநிறுத்த விரும்புகிறார்கள். ரஜினிகாந்த் ஒருமுறை, தான் மது மற்றும் புகையிலைக்கு அடிமையாகிப் பட்ட கஷ்டங்களை வெளிப்படையாகப் பேசி, இளைஞர்களை அதிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டார். தான் கடந்து வந்த சிக்கலில் தன் ரசிகர்கள் விழக்கூடாது என்ற அந்தப் பொறுப்புணர்வு, மிக முக்கியமானதாக இருக்கிறது.
ஒப்பீட்டளவில், வட இந்திய நடிகர்கள் சினிமாவை ஒரு 'வணிகமாக' (Business) மட்டுமே பார்க்கிறார்கள். அவர்களுக்கு விளம்பரங்கள் என்பவை வருமானத்தின் இன்னொரு முக்கிய அங்கமாக இருக்கிறது. அதனால், தமிழ் நடிகர்கள் அத்தகைய குறுக்கு வழிகளையும் நாடுவதில்லை. இருப்பினும், சமீபத்தில் இரண்டாம் நிலை தமிழ் நடிகர்களான சரத்குமார், பிரகாஷ்ராஜ், விஜய் சேதுபதி, சிம்பு, சந்தானம் போன்றோர் ஆன்லைன் சூதாட்ட (Gambling) விளம்பரங்களில் நடித்தது தமிழகத்தில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. தமிழ்ச் சமூகம் அதை ஏற்கவில்லை என்பதன் விளைவாகவே, அந்த நடிகர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவர்களில் பலரும் பின்னால் அதற்காக வருத்தம் தெரிவித்தார்கள். இதை நாம் ஒரு விதிவிலக்காகக் கொள்ளலாம், அல்லது பொறுப்பற்ற விளம்பரங்களில் நடித்தால், சமூகத்தின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதற்கான உதாரணமாகவும் கொள்ளலாம். பாலிவுட் பணத்தை நோக்கி ஓடும்போது, தமிழ் நடிகர்கள் இமேஜ் குறித்த பயமோ அல்லது பொறுப்புணர்வோ… ஒரு கண்ணுக்குத் தெரியாத, எழுதப்படாத 'சமூக விதியை' மதிக்கிறார்கள். இது தமிழ் சினிமாவிற்கும், தமிழக மக்களுக்கும் இடையே இருக்கும் அந்த ஆழமான பிணைப்பின் அடையாளத்தைக் காட்டுகிறது.