'இன்ஸ்டாகிராமில் பெண்கள் பகிரும் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?' என்று கேட்டால், இதெல்லாம் என்ன கேள்வி, இன்ஸ்டாவில் வேறென்ன வேலை எங்களுக்கு என்று பதில் சொல்வீர்கள். சரிதான், விசயத்துக்கு வருகிறேன்!
இன்ஸ்டாவில் ஒரு சிலர் ஒரே விதமான படங்களாகவே எப்போதும் பதிவேற்றுவதைப் பார்க்க முடியும். ஒரு பெண் முக்கால்வாசி தலையை இதுபுறம் திருப்பி, சட்டகம் முழுதும் அவரது வலப்புறக் கன்னம் மட்டுமே முக்கியத்துவமாக இருப்பது போல புகைப்படங்களைப் பதிவிடுவார். கண்கள் என்னவோ கேமராவைத்தான் பார்த்துக்கொண்டிருக்கும். உடைகள் மாறலாம், இடங்கள் மாறலாம். ஆனால், அவரது போஸ் (Pose) மட்டும் மாறாது. இன்னொரு பெண்ணுக்கு சற்று பெரிய கண்கள். அந்தக் கண்கள் இன்னும் பெரிதாக தெரியும்படி கேமராவை சற்று நெருக்கமான டாப் ஆங்கிளில் வைத்து எடுத்த புகைப்படங்களை மட்டுமே பதிவிடுவார். மற்றொரு பெண் சற்று லாங்ஷாட்டில் முழு உருவத்தோற்றத்தைப் பதிவிடுவார். ஒரே மாதிரியான புடவை உடுத்தும் முறை, கைகளைக் கட்டிக்கொள்ளும் முறை, ஒரே மாதிரியான சிரிப்பு. பொட்டு கூட ஒரே மாதிரிதான் இருக்கும். சமயங்களில் இவர் ஏதோ மேடம் டுஸ்ஸார்டில் செய்து வாங்கப்பட்ட மெழுகு பொம்மையோ, எல்லா படங்களிலும் எப்படி இவரால் ஒரே மாதிரியாக இருக்க முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கும். உதாரணத்துக்குப் பெண்களைச் சொல்லியிருக்கிறேனே தவிர, கணிசமான ஆண்களிடமும் இந்தச் சிக்கலைப் பார்க்க முடியும்.
முன்னதாக, நாங்கள் நண்பர்களோடு ஒரு சுற்றுலா சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கூகுள் டிரைவில் ஏற்றி நண்பர் பகிர்ந்திருந்தார். நூற்றுக்கணக்கான புகைப்படங்கள். இப்படியான சமயங்களில் ஃபோட்டோ எடுக்கும்போது, இங்கொன்று எடு, அங்கொன்று எடு என்று மிக ஆர்வமாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால், அத்தனையையும் பொறுமையாகப் பார்க்கவெல்லாம் இப்போது யாருக்கு நேரமிருக்கிறது? இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து எல்லாவற்றையும் மின்னல் வேகத்தில் பார்வையிடுகிறோம். அந்த இன்னொரு நாளெல்லாம் எப்போதும் வரப்போவதில்லை. இந்த வேகமான பார்வையிடுதலிலும் என்ன நடக்கிறது? நாம் இல்லாத படங்களை விருட்டென ஸ்வைப் செய்கிறோம். நாம் இல்லாத புகைப்படத்துக்கு, நம் மூளை முக்கியத்துவம் தருவதில்லை. நாம் இருக்கும் படங்களிலும், நம்மை மட்டுமே சில விநாடிகள் ரசிக்கிறோம், கடந்துவிடுகிறோம். அதில் உடனிருந்த நபர்கள் யாரென்று கூட நாம் கவனிப்பதில்லை.
அந்த சில விநாடிகளில் கூட நாம் என்ன செய்கிறோம்? ‘நான் எப்படி வந்திருக்கிறேன்? என் ஆடை சரியாக இருக்கிறதா? கண் மூடியிருக்கிறதா? தலைமுடி கலைந்திருக்கிறதா? சிரிப்பு இயல்பாக இருக்கிறதா?’ என்ற கேள்விகள்தான் நம் மனதில் முதலில் தோன்றும். இது ஏதோ சுயநலம் மட்டுமே அல்ல, நாம் நமக்குத் தொடர்புள்ள தகவல்களுக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கிறோம். இதுதான் சுய அடையாள விளைவு (Self-Relevance Effect) எனப்படும் மனித இயல்பு. ஒரு புகைப்படத்தில் நூறு நபர்கள் இருந்தாலும், நம் மூளை முதலில் ’நாம் எங்கே?’ என்றே தேடும். அதுவே இயல்பு.
நாம் எப்படி நம்மை மட்டுமே முதலில் பார்க்கிறோமோ, அதே போல மற்றவர்களும் நம்மைத்தான் கூர்ந்து கவனிப்பார்கள் என்று தவறாக நினைக்கிறோம். ’இதில் என் தலைமுடி கலைந்திருக்கிறது, இதை டிலிட் செய்துவிடு’ என்று பதறுகிறோம். ஆனால், உண்மையில் உங்கள் முகத்தையே யாரும் பார்க்கப்போவதில்லை. உங்கள் தலைமுடி கலைந்திருப்பதுதான் அவர்களுக்கு ஒரு பொருட்டாகப் போகிறதா? அவர்களும் உங்களைப் போலவே, தங்களை மட்டுமே புகைப்படத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!
குழுப் புகைப்படத்தில் நம்மைச் சரி பார்த்த பிறகு, நமது பார்வை அடுத்து எங்கே செல்லும் தெரியுமா? நமக்கு இணையாக நாம் கருதும் நபரின் முகத்திற்குச் செல்லும்! அவர் நண்பராகக் கூட இருக்கலாம், ஆனால் அவர்தான் நம் மானசீகப் போட்டியாளர். அவரைவிட நாம் அழகாக இருக்கிறோமா? சமூக ஒப்பீடு. நம்மையும் அறியாமல் நம் தோற்றத்தை அவரோடு ஒப்பிட்டுப் பார்த்துத் திருப்தியோ அல்லது தாழ்வுணர்ச்சியோ அடைகிறோம்.
நமக்கு ஏற்கெனவே நம்மைப் பற்றி ஒரு முன்முடிவு இருக்கும். உதாரணமாக, ’எனக்கு இடது பக்கக் கோணம்தான் நன்றாக இருக்கும்’ அல்லது ’நான் சிரித்தால் நன்றாக இருக்க மாட்டேன்’ அல்லது ’எனது அழகு எனது கண்கள் மட்டும்தான்’ என்பது போன்ற எண்ணங்கள் இருக்கலாம். அதனால்தான் இன்ஸ்டா பெண்களில் சிலர் எல்லா புகைப்படம் மற்றும் விடியோக்களையும் ஒரே கோணத்தில் பதிவு செய்கிறார்கள். குழு புகைப்படங்களிலும் நாம் நம்மைப் பற்றிய அந்தப் பழைய எண்ணத்தையே உறுதிப்படுத்த முயல்கிறோம் (Confirmation Bias). இதனால்தான் மற்றவர்கள் "படத்தில் நீ நன்றாகத்தானே இருக்கிறாய்!" என்று சொன்னாலும் நம்மால் அதை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
ஒவ்வொரு மனிதனும் அவனது வாழ்க்கைக் கதையில் கதாநாயகனாக இருக்கிறான். அதில் மற்றவர்கள் அனைவரும் துணைப் பாத்திரங்களாகத் தெரிகிறார்கள். அதேபோல, அவர்களின் வாழ்க்கைக் கதையில் நாம் வெறும் துணைப் பாத்திரம் மட்டுமே! ஒரே குழுப் புகைப்படத்தை நூறு பேர் பார்த்தாலும், அவர்கள் நூறு வெவ்வேறு புகைப்படங்களைப் பார்க்கிறார்கள். ஏனென்றால், ஒவ்வொருவரின் பார்வையும் முதலில் அவர்களிடமே தொடங்குகிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையின் மையத்திலும், அவனே நிற்கிறான்.