Tung Chee-hwa 
அறிவோம்

ஹாங்காங் பற்றி தெரியாத ரகசியங்கள்! #Honkkong

பிரிட்டனிடமிருந்து சீனாவிடம் ஹாங்காங் திரும்ப ஒப்படைக்கப்பட்ட பிறகு, அதன் முதல் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்ற துங் சீ-ஹ்வா (Tung Chee-hwa) 89-வது வயதில் காலமானார்.

எம். குமரேசன்

பிரிட்டனிடமிருந்து சீனாவிடம் ஹாங்காங் நகரம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட பிறகு, அதன் முதல் தலைமை நிர்வாகியாகப் பதவியேற்ற துங் சீ-ஹ்வா (Tung Chee-hwa) செப்டம்பர் 8ம் தேதி, அவரது 89-வது வயதில் காலமானார்.

முதல் ஓபியம் போரில் (First Opium War) பிரிட்டன் சீனாவை தோற்கடித்தது. இதையடுத்தே, ஹாங்காங்கில் பிரிட்டிஷாரின் ஆட்சி தொடங்கியது. கடந்த 1842-ம் ஆண்டில் நான்கிங் (Nanking) ஒப்பந்தத்தின்படி, சீனாவின் குயிங் வம்சம் (Qing Dynasty) ஹாங்காங் தீவை பிரிட்டனிடம் ஒப்படைத்தது. பின்னர்,1860ம் ஆண்டு கவ்லூன் தீபகற்பத்தை (Kowloon Peninsula) பிரிட்டன் கைப்பற்றியது.1898-ம் ஆண்டு ஹாங்காங் அருகேயிருந்த 'புதிய பிரதேசங்களை' (New Territories) 99 ஆண்டு காலக் குத்தகைக்கு எடுத்து, பிரிட்டன் அரசு தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியது. இந்த மூன்று பிரதேசங்களும் இணைந்ததே பிரிட்டிஷார் ஆட்சியின் கீழ் இருந்த ஹாங்காங் நகரம் ஆகும்.

1997-ம் ஆண்டு குத்தகைக் காலம் முடிவடைந்தது. முன்னதாக 1980ம் ஆண்டுவாக்கில்ஹாங்காங்கின் எதிர்காலம் குறித்து பிரிட்டனும் சீனாவும் பேச்சுவார்த்தையைத் தொடங்கின. ஹாங்காங்கின் நிலப்பரப்பில் பெரும்பகுதியை உள்ளடக்கியிருந்ததோடு, நீர் மற்றும் மின்சார விநியோகத்துக்கு முக்கிய பகுதியாக இருந்த 'புதிய பிரதேசங்கள்' இல்லாமல் நகரின் மற்ற பகுதிகளை நிர்வகிப்பது சாத்தியமற்றதாக தோன்றியது. எனவே, ஹாங்காங் தீவு , கவ்லூன், புதிய பிரதேசங்கள் உள்ளிட்ட முழுப் பகுதியையும் சீனாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் முடிவு செய்தது.

கடந்த 1984ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி பெய்ஜிங்கில் சீன-பிரிட்டிஷ் அரசுகளுக்கிடையே ஹாங்காங் குறித்த புதிய ஒப்பந்தம் கையொழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி,1997 ஜூலை 1- ம் தேதி ஹாங்காங்கை சீனாவிடம் திருப்பிக் கொடுக்க பிரிட்டன் ஒப்புக்கொண்டது. அப்பகுதியை ஒரு சிறப்பு நிர்வாகப் பிராந்தியமாக மாற்றி நிர்வாகம் செய்ய சீனா ஒப்புக்கொண்டது. ஹாங்காங் தனது முதலாளித்துவப் பொருளாதார முறை, மக்களின் வாழ்க்கை முறை மற்றும் சுயாட்சியை 50 ஆண்டுகளுக்கு தன்னாட்சியாக செய்து கொள்ள சீனா உறுதியளித்தது. இதனால், ஹாங்காங் தனது சொந்த சட்டங்களை இயற்றிக் கொண்டது. பொருளாதாரம் மற்றும் உள்ளாட்சி அமைப்பையும் செய்து கொண்டது. அதே நேரத்தில், மெயின்லேண்ட் சீனா பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளும்.

Hong Kong

தொடர்ந்து, 1997ம் ஆண்டு ஜூன் 30 ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் ஹாங்காங்கில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்தது. நள்ளிரவில், 'ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதி' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் பகுதியின் முதல் தலைமை நிர்வாகியாக துங் சீ-ஹ்வா (Tung Chee-hwa) பொறுப்பேற்றுக் கொண்டார். சீன குடியரசுக்குள் தனித்துவமான ஒரு அரசாக ஹாங்காங் செயல்படத் தொடங்கியது. ஹாங்காங்கின் அரசியலமைப்புச் சட்டமான 'அடிப்படைச் சட்டம்' (Basic Law) மாற்றப்படவில்லை.

சீனாவின் சோசலிச சட்டங்களோ அல்லது கொள்கைகளோ ஹாங்காங்கில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. முதலாளித்துவ பொருளாதாரமும் அப்படியே பின்பற்றப்பட்டது. பேச்சுரிமை, பத்திரிக்கை சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம், ஊர்வலம் நடத்தும் சுதந்திரம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.

ஹாங்காங்கின் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு வாக்களிக்கவும் தேர்தலில் போட்டியிடவும் உரிமை வழங்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் ஹாங்காங் சிக்கிக் கொண்டது. அதோடு, நகரில் பறவைக் காய்ச்சல் பரவியது. 2003ம் ஆண்டு சார்ஸ் (SARS) பெருந்தொற்று ஏற்பட்டது. 300 பேர் வரை பலியானார்கள். ஹாங்காங்கில் பெரும் பொருளாதார சீர்குலைவையும் இந்த பெருந்தொற்று ஏற்படுத்தியது. இந்த நெருக்கடிகளைக் துங் சீ-ஹ்வா முறையாக கையாளவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. எனினும், 2002ம் ஆண்டு ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியாக மீண்டும் துங் சீ-ஹ்வா சீன அரசால் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2003ம் ஆண்டு தேசத்துரோகம் மற்றும் நாசவேலைகளுக்கு எதிராக ஹாங்காங் சொந்த தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டுமென ஒரு மசோதாவை ஹாங்காங் சட்டன்றத்தில் துங் நிறைவேற்ற முயன்றார். இதற்கு, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுட்டனர். 2003ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி 5 லட்சம் மக்கள் ஹாங்காங்கில் பேரணியில் ஈடுபட்டனர். அதோடு, ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி மற்றும் சட்டமன்றத்திற்கு நேரடித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வெடித்தது.

இந்த சர்ச்சைகளையடுத்து, 2005-ஆம் ஆண்டு மார்ச் 10 ம் தேதி துங் தனது பதவி விலகலை அறிவித்தார். தொடர்ந்து,சீனத் தலைமையுடன் நெருக்கமாகவே இருந்தார். 2019ம் ஆண்டு நாட்டுக்கு சிறப்பாக சேவையாற்றியதற்காக சீன அதிபர் ஸீ ஜின்பிங்கிடம் இருந்து விருதையும் துங் பெற்றார். இந்தநிலையில்தான், அவர் காலமாகியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு சீன அரசு துங் கொண்டு வந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஹாங்காங்கில் அமல்படுத்தி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.