How to focus on Steriogram Images 
அறிவோம்

ஸ்டீரியோகிராம் 3D படங்களைப் பார்ப்பது எப்படி? #Steriogram

1-ஆம் இடத்தில் ஸ்டீரியோகிராம் படத்தை வைத்துக்கொண்டு, அதற்குப் பின்னால் இருக்கும் 2-ஆம் இடத்தைப் பார்ப்பதுபோல கண்களை வைத்தால், அந்த ஸ்டீரியோகிராம் காட்சி மெதுவாகப் பிடிபடத் தொடங்கும். இதன் அடிப்படை. டெக்னிகலாக விஷயம் இவ்வளவுதான்.

ஆதி தாமிரா

ஸ்டீரியோகிராம் பார்ப்பது எப்படி என்று ஒவ்வொரு சமயத்திலும் கேள்விகள் எழுகின்றன. பலருக்கும் அது பிடிபடாமல் சலிப்புக்குள்ளாவதை அடிக்கடி பார்க்க முடிகிறது. ஸ்டீரியோகிராம் என்பது எல்லோரும் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒரு சுவாரஸ்யமான கலை. ஆகவே, அதை எப்படிப் பார்ப்பது என்று மிக எளிமையாகப் பார்ப்போம். இன்னும் பிடிபடாதவர்களுக்கு இது உதவலாம்.

இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். அதில் இருப்பதுபோல, நமது கண்களை 1-ஆம் இடத்தைப் பார்க்கச் சொன்னால் அதைப் பார்க்கும். 2-ஆம் இடத்தைப் பார்க்கச் சொன்னால் உடனே அங்கே பார்க்கும். நாம் எதைப் பார்க்கிறோமோ அதற்கேற்ப கண்களின் பார்வையும், ஃபோகஸும் மாறிக்கொள்ளும். சரிதானா?

ஆனால், 1-ஆம் இடத்தில் ஸ்டீரியோகிராம் படத்தை வைத்துக்கொண்டு, அதற்குப் பின்னால் இருக்கும் 2-ஆம் இடத்தைப் பார்ப்பதுபோல கண்களை வைத்தால், அந்த ஸ்டீரியோகிராம் காட்சி மெதுவாகப் பிடிபடத் தொடங்கும். கண்கள் பார்க்கும் இடமும், படம் இருக்கும் இடமும் ஒன்றாக இல்லாத ஒரு வித்தியாசமான பார்வை முறையை உருவாக்குவதுதான் இதன் அடிப்படை.

டெக்னிகலாக விஷயம் இவ்வளவுதான். ஆனால் அப்படிக் கண்களைப் பழக்குவது அவ்வளவு எளிதான வேலை அல்ல. ஏற்கனவே ஸ்டீரியோகிராம் பார்க்கப் பழகியவர்களுக்கு இது மிக எளிதாக இருக்கும். புதியவர்களுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருக்கலாம்.

முதலில் முகத்திலிருந்து போனை அல்லது படத்தை சுமார் ஒரு அடி தொலைவில் பிடியுங்கள். முழு ஸ்கிரீனிலும் வேறு எதுவும் இல்லாமல், ஒரு நல்ல ஸ்டீரியோகிராம் படத்தை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது போனுக்கு அப்பால், இன்னும் ஒரு அடி தொலைவில் ஒரு பேனாவை நிறுத்துங்கள். அது போனுக்கு மேலே லேசாகத் தெரியும் அளவுக்கு இருந்தால் போதும். இப்போது அந்தப் பேனாவையே பார்த்துக்கொண்டிருங்கள்.

முக்கியமான விஷயம், உங்கள் பார்வையை பேனாவிலிருந்து மெல்ல படத்துக்கு நகர்த்தவேண்டும், அல்லது பேனாவும், கண்களுக்கு முன்னால் இருக்கும் ஸ்டீரியோகிராம் படமும் ஒரே தளத்தில் அருகருகே இருப்பதாக கருதிக்கொண்டு இரண்டையும் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் இது குழப்பமாக இருக்கலாம். பொறுமையாக இருங்கள். சில விநாடிகளுக்குப் பிறகு, அந்தக் குழப்பமான புள்ளிகள் மற்றும் வடிவங்களுக்குள் ஒரு புதிய முப்பரிமாணக் காட்சி மெல்ல உருவாகத் தொடங்கலாம். காட்சி தெரிந்துகொண்டிருக்கும் அந்த நிலையிலேயே பார்வையை நிலையாக வைத்திருங்கள். ஆரம்பத்தில் காட்சி கொஞ்சம் மங்கலாக இருக்கலாம். சில நொடிகளில் அது மேலும் தெளிவாகவும், ஆழத்துடனும் தெரியத் தொடங்கும்.

காட்சி பிடிபடவில்லை என்றாலோ, பிடிபட்ட காட்சி உடனே கலைந்துவிட்டாலோ கவலைப்பட வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். சிலருக்கு முதல் முறையே பிடிபடும். சிலருக்கு பல முயற்சிகள் தேவைப்படும். ஒரு முறை சரியாகப் பிடித்துவிட்டால், அடுத்தடுத்த ஸ்டீரியோகிராம் படங்களைப் பார்ப்பது மிகவும் எளிதாகிவிடும்.

Steriogram -Cat
Steriogram -Flower
Steriogram -Golf

உண்மையில், நாம் வழக்கமாகப் பார்ப்பது போல ஒரு படத்தின் மேற்பரப்பை மட்டும் பார்ப்பதில்லை என்பதுதான் இங்கே சுவாரஸ்யம். இரண்டு கண்களும் ஒரே படத்தில் இருக்கும் சிறிய வேறுபாடுகளைப் பயன்படுத்தி ஆழத்தை உணர்கின்றன. ஸ்டீரியோகிராம் அந்த இயல்பான பார்வை முறையையே ஒரு விதத்தில் நம்மை வைத்து விளையாடுகிறது. அதனால்தான் முதல் முறையாகப் பார்க்கும்போது, “இதில் என்ன இருக்கிறது? வெறும் டிசைன்தானே, புள்ளிகள்தானே!” என்று தோன்றும். ஆனால் சரியான பார்வை அமைந்தவுடன் அதே புள்ளிகளுக்குள் தோன்றும் முப்பரிமாணக் காட்சி தோன்றும் அந்தக் கணம்தான் ஸ்டீரியோகிராமின் உண்மையான சுவாரஸ்யம்.

இணைப்பில் சில ஸ்டீரியோகிராம் படங்களைத் தருகிறோம். தெரிகிறதா என்று பாருங்கள். ஒருமுறை பிடித்துவிட்டால், இனி ஸ்டீரியோகிராம் உங்களுக்கு வெறும் புள்ளிகளாகத் தெரியாது!