அரசியல் மட்டுமல்ல, நிர்வாகம், தொழிற்துறை, கலை என எல்லா துறைகளிலுமே நம் காதுகளில் அடிக்கடி விழும் வாக்கியம்தான், “முதியவர்கள், இளையோருக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும்.” இதில் இளையோர் வரவேண்டும் எனும் ஒரு பகுதி நிச்சயமாக நியாயமானதுதான். ஆனால், முதியோர் விலகத்தான் வேண்டுமா? இது சரியா?
இளைஞர்கள் அரசியலுக்குள் வரவேண்டும். இளையோரின் பலம் ஆற்றல். புதிய அறிவியல் தொழில்நுட்பங்கள் குறித்த புரிதலும், பயன்பாடும் அவர்களுக்குத் தெரியும். மூத்த தலைமுறையால் எளிதில் உணர்ந்து கொள்ளமுடியாத இளையோரின் பிரச்சினைகளை அவர்களால் கையாள முடியும். ஆனால் இவை மட்டுமே போதுமா அல்லது வயது மட்டுமே ஓர் இளைஞன் நல்லவன் என்பதற்கான சான்றாக ஆகிவிடுமா?
முதியவர்களிடம் இளைஞர்களிடம் இல்லாத பெரும்பலம் ஒன்றிருக்கிறது. அது அனுபவம். ஓர் ஓவியத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ரசித்திட முடியும். ஆனால், அதனை ஆக்குவது அத்தனை எளிதானல்ல. வருடக்கணக்கான பயிற்சியினால், அனுபவத்தால்தான் அதில் நாம் தேர்ச்சி பெற முடியும்.
ஒரு பகுதிச் செயலாளர் தவறு செய்யலாம். ஒரு கவுன்சிலர் தவறு செய்யலாம். ஒரு எம்.எல்.ஏ கூட தவறு செய்யலாம்.ஆனால், ஓர் அமைச்சர் தவறு செய்யக்கூடாது. முதலமைச்சரின் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயல்பாடும், ஒவ்வொரு ஆணையும் துல்லியமாக இருக்க வேண்டும், அங்கே தவறுக்கு இடமே இருக்கக்கூடாது. ஒரு பிரதமர் தவறு செய்யக்கூடாது. இவர்களது ஒவ்வொரு முடிவிலும், கோடிக்கணக்கான மக்களின் மாண்பு சம்பந்தப்பட்டிருக்கிறது. அவர்களின் நிகழ்கால வாழ்க்கை சம்பந்தப்பட்டிருக்கிறது. எதிர்காலத்துக் கனவுகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அவர்களது ஒரு தவறான முடிவு, ஒரு பண்பாட்டுச் சிதைவுக்குக் காரணமாகிவிடும். கோடி இளைஞர்களின் கல்வியும், வேலைவாய்ப்பும் கனவாகிப்போய்விடும். ஓர் ஓவியர், தொடக்க காலத்தில் வண்ணங்களை வீணாக்கலாம், கேன்வாஸ்களைக் கிழித்தெறியலாம், தூரிகைகளை உடைத்துப் போடலாம். ஆனால், ஒரு மாநில முதல்வருக்கோ, ஒரு நாட்டின் பிரதமருக்கோ அந்த வாய்ப்புகள் இல்லை.
பல்லாண்டுகள் அரசியலில் இருந்த ஒருவர் பல்வேறு அரசியல் சூழல்களைக் கடந்து வந்திருப்பார். வெற்றிகளையும் தோல்விகளையும் பார்த்திருப்பார். அவரது ஒவ்வொரு முடிவின் விளைவுகளையும் அனுபவித்திருப்பார். நிர்வாகம் எப்படி இயங்குகிறது, அதிகாரம் எப்படி செயல்படுகிறது, ஒரு முடிவின் பின்னால் எத்தனை தரப்புகளின் நலன்கள் இருக்கின்றன என்பதையெல்லாம் நேரடியாக அறிந்திருப்பார். மனிதர்கள் எப்படியானவர்கள் எனும் புரிதல் இருக்கும். அவர்களில் பொதுமக்கள், அதிகார வர்க்கம், தொழில்வர்க்கம் என ஒவ்வொன்றும் எப்படிச் சிந்திக்கும், ஒவ்வொரு வர்க்கத்தின் தேவை என்ன, நோக்கமென்ன என்பதெல்லாம் தெரிந்திருக்கும். ஒரு நல்ல திட்டத்திலும் கூட ஒரு சிறிய பின்விளைவு இருக்கலாம். அது என்ன, அதனால் பாதிக்கப்படப்போவது யார், அதை எதிர்கொள்வதும், அதைத்தாண்டியும் அதைச் செயல்படுத்துவதற்கான அவசியம் என்னெவெனும் புரிதல் இருக்கும்.
அதே நேரத்தில், இப்படியான வயதும், அனுபவமும் அதிகமானவர் என்பதாலேயே அவர் அறிவாளியாகவோ, நேர்மையானவராகவோ இருந்துவிடுவதில்லை. அதுபோலவே இளைஞர் என்பதாலேயே ஒருவர் திறமையானவராகவோ, நேர்மையானவராகவோ இருந்துவிடுவதுமில்லை.
நல்ல சிந்தனைக்கும், நேர்மையான நடத்தைக்கும் வயது ஒரு காரணியாக இருப்பதில்லை.
எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை ஓர் இளைஞரிடம் இருக்கலாம். அதே தொலைநோக்குப் பார்வை எழுபது வயது மனிதரிடமும் இருக்கலாம். புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் திறனும் ஒரு தலைமுறைக்கு மட்டும் சொந்தமானது அல்ல. பழைய தலைமுறையைச் சேர்ந்தவர் புதிய உலகத்தைப் பெரியளவில் புரிந்துகொண்டு ஆட்சி செய்த சம்பவங்களும் அனேகம் உண்டு. போலவே, பழைய பிற்போக்குத்தனமான சிந்தனைகள், மூட நம்பிக்கைகளில் சிக்கிக்கொண்டிருப்பதற்கும் வயது ஒரு காரணமல்ல. அதிகார வெறிக்கும், ஊழல் செய்வதற்கும் வயது கிடையாது. பதவி ஆசை, அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் மனநிலை, சொந்த நலனுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்துவது என இவை எல்லாமே இருதரப்பிலும் இருக்கலாம்.
எனவே, அரசியலில் ஒருவருடைய வயதை வைத்து அவருடைய குணத்தையும், திறமையையும் தீர்மானிப்பது சரியல்ல. இங்கேதான் “முதியவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்” என்ற வாக்கியம் சிக்கலாகிறது. ஒருவர் நீண்ட காலமாக அரசியலிலும், பதவியிலும் இருக்கிறார் என்பதற்காக அவர் விலகி வழிவிட வேண்டும் என்று சொல்ல முடியாது. ஜனநாயகத்தில் பதவியிலிருந்து விலகுவதற்கான காரணம் வயதாக மட்டுமே அமையமுடியாது. சிந்தனை, திறமை, உழைப்பு, துணிவு, நேர்மை, அறிவியல் அணுகுமுறை, உடல்நிலை –இவைதான் ஒருவர் அரசியலுக்குள் வரவேண்டுமா, நீடித்திருக்க வேண்டுமா என்று முடிவு செய்யும் முக்கியக் காரணிகளாக இருக்க வேண்டும்.
ஒரு நல்ல அரசியல் அமைப்பில் தலைமுறை மாற்றம் என்பது கதவு மூடப்பட்டு ஒருவர் வெளியேறி, இன்னொருவர் உள்ளே வருவது போன்றதாக இருக்க வேண்டியதில்லை. அனுபவம் கொண்ட தலைமுறையும் புதிய தலைமுறையும் ஒன்றாக கலந்தியங்குவதாக இருக்கவேண்டும். உண்மையில், அரசியலுக்கு தேவை இளமை அல்ல; புதுமை. முதுமை அல்ல; அனுபவம். இவை இரண்டும் எதிரெதிரானவை அல்ல.