ஒரு பிரபல நடிகர்-இயக்குநர் ஒருவர், இன்னொரு பிரபல மூத்த நடிகர்-இயக்குநர் ஒருவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கச் செல்கிறார். அங்கு வந்த மூன்றாம் விஐபி ஒருவரிடம், ‘இவர்தான் எனக்கு எல்லாமாகவும் இருந்தவர்’ என்பது போல தன் வருத்தத்தைப் பகிர்கிறார். அதற்கு அந்த விஐபி, ‘அவருக்கும், நீங்கள் அப்படித்தானே இருந்தீர்கள்’ என்று பதில் தருகிறார். அது ஒரு சபை நாகரீகத்துக்காக தரப்படக்கூடிய, ஆறுதலான பதில்! அதை அப்படியே விட்டுவிடுவதுதான், இறந்தவருக்கு நாம் செய்யும் மரியாதை. அதைக்கொண்டு வந்து மீடியா மைக்குக்கு முன்னால், ‘இந்த விஐபி இப்படி என்னைச் சொல்லிவிட்டார்’ என்று சொல்வது என்ன மாதிரியான முதிர்ச்சி? அதன் உள்ளர்த்தம், இறந்து போன இயக்குநருக்கு இணையானவர் நான், அதற்கு இந்த விஐபிதான் சாட்சி என்று சொல்வதா? உண்மையில் இவர், அவருக்கு இணையானவராக இருக்கட்டும், அல்லது அவரைவிட திறமைசாலியாகக்கூட இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், அதை இங்கே யார் கேட்டது? அதற்கு பொருத்தமான இடமா அது?
அவர் மட்டுமல்ல, யாராவது இறந்துபோய்விட்டால், இதே தொனியில் நிறைய இரங்கல் கட்டுரைகளை சமூக வலைத்தளங்களிலும் நம்மால் பார்க்க முடியும். இறந்துபோனவரை விட்டுவிட்டு, நானெல்லாம் எப்பேர்ப்பட்ட ஆள் தெரியுமா, என்னைக் கேட்காமல் இறந்து போனவர் எதையுமே செய்யமாட்டார் தெரியுமா, என்றெல்லாம் பசுமாட்டைப் பற்றி பக்கம் பக்கமாகக் கட்டுரை எழுதிவிட்டு, கடைசியில் பனை மரத்தில் கொண்டு வந்து கட்டிப்போடுவார்கள். இதற்கு என்ன காரணம்?
இதுதான் தற்பெருமை! சுயமோகம்! எல்லா இடத்திலும் தன்னை முன்னிறுத்தும் குணம். இதுவே நார்சிசிசம் (Narcissism).
கிரேக்க புராணங்களில் 'நார்சிசஸ்' (Narcissus) என்றொரு இளைஞனின் கதை சொல்லப்படுகிறது. உலகில் இதுவரை பிறந்த ஆண்களிலேயே மிக அழகானவன் அவன். அவனை மிக அழகான பெண்கள், தேவதைகள் பலரும் அடைய விரும்புகிறார்கள். அனைவரையும் அவன் தன் அகந்தையினால் தவிர்த்திருக்கிறான். ஒருநாள், ஒரு தெளிந்த நீரோடையில் பிரதிபலித்த தனது சொந்த பிம்பத்தைக் கண்டு மயங்கி, அதனிடம் காதலை வயப்பட்டு, அந்தப் பிம்பத்தை விட்டு விலக முடியாமல் அதை ரசித்தபடியே அங்கே இருந்துவிடுகிறான். உணவு, நீரின்றி ஒருநாள் இறந்தும் போகிறான். அவன் நினைவாகவே, கிரேக்கப்பகுதிகளின் நீர்நிலைகளில் தலைகுனிந்தபடி தன் பிம்பத்தையே பார்ப்பது போலத் தோற்றமளிக்கும், மிக அழகான மஞ்சள் நிற பூ ஒன்றுக்கு நார்சிசஸ் மலர் என்று பெயர் வழங்கப்படுகிறது.
நுட்பமான வெளிப்பாடுகள்
நார்சிசிசக் குணம் கொண்ட ஒருவரை அடையாளம் காண்பது அத்தனைச் சிரமமான ஒன்றல்ல. அவர்கள் பெரும்பாலும் மிகுந்த வசீகரத்துடன் உடையணிந்துகொள்வது, தோற்றத்துக்கு அதீத முக்கியத்துவம் தருவது என தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள். தன்னம்பிக்கை நிறைய இருக்கும். ஆனால், அவர்களின் உள்ளார்ந்த நார்சிசிச இயல்பு மிக எளிதாக வெளிப்பட்டுவிடும்.
நார்சிசிசக் குணம் கொண்ட ஒருவரால் மற்றவர்கள் பேசும்போது முழுமையாகக் கேட்கமுடியாது. எந்த உரையாடலையும், தன்னை நோக்கியே திருப்பிவிடுவார்கள். யாராவது தங்களுடைய வெற்றியைப் பற்றிச் சொல்லத் தொடங்கினால், உடனே அதைவிடப் பெரிய தன்னுடைய அனுபவத்தையும், வெற்றியையும் பற்றிப்பேச ஆரம்பித்துவிடுவார்கள். மற்றவர்களின் துயரத்தைக் கேட்டாலும், அதை உணர்வதைவிட்டுவிட்டு, தனக்கும் அதைவிடப் பெரிய இழப்புகளெல்லாம் உண்டு எனும் கோணத்தில்தான் பேசுவார்கள். தன்னைப் பற்றிய சிறிய விமர்சனத்தைக்கூட அவர்களால் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியாது; உடனே கோபப்படுவார்கள், எதிர்த்தாக்குதல் நடத்துவார்கள் அல்லது பழிவாங்கும் வாய்ப்புக்காக காத்திருப்பார்கள். அதே நேரத்தில், பாராட்டுகளுக்காக ஏங்குவார்கள். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தொடர்ந்து தன்னைப் பாராட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்குள் இருக்கும். ஒரு குழுவின் தலைவராக இருந்தால் அந்தக் குழுவின் வெற்றியை, ’அது என்னால்தான் நடந்தது’ என்று முழுதாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை அவர்களிம் இயல்பாகவே வெளிப்படும். அதே குழுவில் ஒரு தவறு நடந்தால், அதைப் பிறர் மீது மிக எளிதாக சுமத்திவிடுவார்கள். பொறுப்பேற்றுக்கொள்வதோ, மன்னிப்புக் கேட்பதோ இவர்களின் அகராதியிலேயே இருக்காது.
இந்தக் குணமே இன்னும் தீவிரத்தன்மை அடையும் போது, அது 'நார்சிசிஸ்டிக் பெர்சனாலிட்டி டிஸார்டர்' (Narcissistic Personality Disorder) என்ற மனநலக் கோளாறாகவும் மாறிவிடுகிறது.
இப்போது காலம் நிறைய மாறியிருக்கிறது. எல்லாத் துறையிலும், போட்டிகள் அதிகமாகியிருக்கிறது. நம்மைப் பற்றி, நமது சேவையைப் பற்றி, நமது பொருளைப் பற்றி நாம்தான் விளம்பரம் செய்துகொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்படுகிறது. சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு, கேமராவின் லென்ஸ்கள் எப்போதும் நம்மை நோக்கியே திருப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் நமது இயல்பான சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு இயங்க வேண்டுமே தவிர, நம்மை நார்சிசிஸ்டுகளாக ஆக்கிவிடக்கூடாது.
நார்சிசஸ் நீரில் தெரிந்த தனது பிம்பத்தைக் காதலித்து அழிந்தான். இன்று நீரோடைகளுக்குப் பதிலாக கண்ணாடிகள் இருக்கின்றன, கேமராக்கள் இருக்கின்றன, சமூக ஊடகங்கள் இருக்கின்றன. ஒரு நார்சிசிஸ்ட் உலகம் முழுவதையும் தனக்குக் கீழாக கொண்டுவருவதாக நினைத்துக்கொண்டிருப்பான். ஆனால், கடைசியில் ஏமாறுவது அவனே. எல்லோரும் தன்னைப் பாராட்டுகிறார்கள், ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் அவன், உண்மையில் மெல்ல மெல்ல எல்லோரையும் இழந்துகொண்டிருப்பதை உணரவே மாட்டான். சுயமோகத்தின் முடிவு வெற்றி அல்ல; தனிமை.