நேற்று நள்ளிரவு, சுமார் மூன்று மணி நேரம் மின்சாரம் போய்விட்டது. வியர்த்து ஊற்றி, தவித்துப்போய்விட்டேன். ஆனாலும், அநியாயத்துக்கு நானெல்லாம் மின்விசிறிக்கு அடிமையாகிவிட்டேனோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. சில மணி நேரம் மின்சாரம் இல்லாவிட்டாலே கூட திணறிப்போகிறோம். கொஞ்ச நேரம் இணைய இணைப்பு இல்லையென்றால்கூட, உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது போன்ற உணர்வு பலருக்கும் ஏற்பட்டுவிடுகிறது. இந்த நவீன தொழில்நுட்ப வசதிகளெல்லாம் ஒன்றிணைந்து, பொதுவாகவே மனித உடலையும், மனதையும் பலவீனமாக்கிவிட்டதா என்ன?! ஆனால், இது உண்மையில்லை.
மனித உடல் சில நேரங்களில் விஞ்ஞானிகளையே அதிர்ச்சியுற வைக்கும் அளவுக்கு உயிரைக் காத்துக்கொள்ளப் போராடுகிறது. 2023-ல் இந்தியாவையே உலுக்கிய ஒரு செய்தி, உத்தரகாண்டில் நடந்த சுரங்க விபத்து. 41 தொழிலாளர்கள், கட்டிக்கொண்டிருந்த சுரங்கப்பாதையின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்கள். சுமார் 17 நாட்கள்! வெளியுலகத்தோடு தொடர்பில்லாமல், சூரிய வெளிச்சமில்லாமல், எந்த நேரத்திலும் மேலும் மண் சரிந்து தங்களைப் புதைத்துவிடலாம் என்ற அச்சத்துடன், அந்த மனிதர்கள் உள்ளே உயிரோடு இருந்தார்கள். குறுகிய குழாய்கள் வழியாக உணவும், ஆக்சிஜனும் அனுப்பப்பட்டன. இறுதியில் அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டபோது, உலகமே நிம்மதிப் பெருமூச்சு விட்டது. இப்படி ஏராளமான கதைகளை நாம் கேள்விப் படுகிறோம்!
அப்படி ஒரு சூழலை, ஒரு மனிதன் எப்படி மனதளவிலும், உடலளவிலும் தாங்கிக்கொள்கிறான்? உண்மையில் மனித உடலின், பிழைத்திருப்பதற்கான எல்லை எது வரை நீள்கிறது?
இந்தப் பிழைத்திருக்கும் கருப்பொருளில், பிரபலமான ஒரு விதி இருக்கிறது. அதுதான் ‘Rule of Three’. மூன்று நிமிடங்கள் — ஆக்சிஜன் இல்லாமல், மூன்று நாட்கள் — தண்ணீர் இல்லாமல், மூன்று வாரங்கள் — உணவு இல்லாமல்! இது ஒரு துல்லியமான விஞ்ஞானக் கணக்கு அல்ல; ஆனால், மனித உடல் பொதுவாக எவ்வளவு வரை தாக்குப்பிடிக்கும் என்பதற்கான, விதிவிலக்குகளுக்கு உட்பட்ட ஒரு எளிய விதி.
முதலில் ஆக்சிஜன். மனித உடலில் மிக அதிகமாக ஆக்சிஜனைக் கேட்பது மூளை. சில நிமிடங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போனாலே மூளைச் செல்கள் பாதிப்படையத் (Hypoxia) தொடங்கிவிடும். அதனால்தான் மூச்சுத்திணறல் மனிதனுக்கு மிகப் பெரிய பயத்தைத் தருகிறது. நீரில் மூழ்கும்போதோ, புகை நிறைந்த அறைக்குள் சிக்கும்போதோ, மனிதன் உடனடியாக பதற்றமடைவதற்குக் காரணம். ஆக்சிஜன் கிடைக்காமல் போனால், சுமார் ஆறு, ஏழாவது நிமிடம் தொடங்கி, மூளை முற்றிலும் செயலிழந்து (Brain dead) மனிதன் மரணத்தைத் தழுவுவான்.
ஆனால், குரோஷியாவைச் சேர்ந்த ஒருவர் தண்ணீருக்கு அடியில் தன் மூச்சை சுமார் 24 நிமிடங்கள் அடக்கி உலக சாதனை படைத்துள்ளார்! ‘டைவிங் ரிஃப்ளெக்ஸ்’ (Diving Reflex) எனும் ரத்த ஓட்டத்தைக் கையாளும் பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டதன் மூலமாக அவர் அந்த எல்லையைத் தொட்டார்.
அடுத்தது தண்ணீர். பசி மெதுவாகக் கொல்லும்; தாகம் மனிதனை உடனடியாக உடைக்கத் தொடங்கிவிடும். நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் ஆனது. வியர்வை, சிறுநீர், வியர்வை, சுவாசம் என தொடர்ந்து நீரை இழந்துகொண்டே இருக்கும் இந்த உடல், ஓரிரு நாட்களிலேயே வறண்டு சோர்ந்துபோய் விடும். உடலில் நீர் குறையும்போது, முதலில் சோர்வு, அதன் பின் குழப்பம், இறுதியில் மயக்கம் ஏற்படும். மூன்றாம் அல்லது நான்காம் நாளில் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்து (Kidney failure), நச்சுக்கள் உடலில் பரவி மனிதன் கோமா நிலைக்குச் சென்றுவிடுவான்.
உணவு இல்லாமல் மனித உடல் ஆச்சரியப்படத்தக்க அளவுக்கு சராசரியாக 3 வாரங்கள் வரை உயிர் வாழ முடியும். நம்மால் ஒரு வேளை உணவைத் தவிர்க்கவே கடினமாக இருக்கிறது. ஆனால், மனித உடல் பரிணாம வளர்ச்சியில் பெருமளவு பட்டினியைச் சந்தித்தே உருவானது. உணவு கிடைக்காத போது, உடல் முதலில் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பை எரிக்கத் தொடங்கும். அதன் பின் மெதுவாக தசைகளையே உட்கொள்ள ஆரம்பிக்கும். அதனால்தான், பட்டினியில் சிக்கிய மனிதர்களின் உடல் எலும்பும் தோலுமாக மாறிவிடுகிறது. உணவற்ற நிலைமை நீடித்தால், இறுதியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழும்.
இவை தவிரவும், கடுங்குளிர், கொளுத்தும் வெப்பம், தூக்கமின்மை என பல விஷயங்கள் மனிதனின் உயிரோடு விளையாடுகின்றன. இவற்றையெல்லாம் விட மோசமான இன்னொன்று உள்ளது. அது தனிமை. நீண்டகால தனிமைச்சிறை (Solitary Confinement), மனித மனத்தைத் தீவிரமாகப் பாதிக்கிறது. உடல் பாதிப்பை விட பல நேரங்களில் மனம் பாதிக்கப்படுவதுதான் பெரும் வலியானது. சிலருக்கு மாயத் தோற்ற (Hallucinations) மனநிலை ஏற்பட்டு தங்களோடு யாரோ பேசுவது போலவோ, யாரோ உடனிருப்பது போலவோ உணர்வார்கள். நினைவாற்றலும், கவனிப்புத் திறனும் பாதிக்கப்படும். அந்த நிலை அப்படியே தொடர்ந்தால், மனிதன் உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் தன்னையே இழந்துவிடுவான். அதனால்தான், உலகின் பல மனித உரிமை அமைப்புகள், நீண்டகால தனிச்சிறையை ஒரு வகையான உளவியல் சித்திரவதையாகவே கருதி, அதைத் தவிர்க்கவேண்டுமென்று வலியுறுத்துகிறார்கள்.
நாம் இப்போது ஏர் கண்டிஷனர் அறைகளிலும், மின்விசிறிகளின் கீழும் வாழ்கிறோம். இது உண்மையில் பலவீனமல்ல, பழக்கத்தால் ஏற்பட்ட அடிமைத்தனத்தின் (Comfort Dependency) பின்விளைவுகள்தான். அடிமைத்தனமென்பது மதுவுக்கும், போதைக்குமானது மட்டுமல்ல. உறவுகள், உணர்வுகள், பழக்க வழக்கங்கள் என பலவற்றுக்கும் இது பொருந்தும். ஆனால், நம் உடலுக்குள் இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், பசியோடும், குளிரோடும், இருளோடும் போராடி, உயிர் பிழைத்த மனிதன் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறான். ஆபத்தான அல்லது தீவிரமான சூழ்நிலைகளில் (Extreme conditions) தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைக்கவும் தேவையான ஆற்றல் அவனிடம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.