AI Image 
அறிவோம்

சின்னச்சின்னதாய் நாம் இழக்கும் திறன்கள் #UseItOrLoseIt #DigitalAmnesia

காலையிலேயே கடைக்குப்போய் 3 முட்டை, 2 பழம், கால்கிலோ வெல்லம் வாங்கிவிட்டு எவ்வளவு ஆயிற்று என்று கேட்டேன். எப்போதும் கல்லாவுக்கு அருகிலிருக்கும் கால்குலேட்டர் அப்போது இல்லாமல் கடைக்காரர் திணறிப்போனார்.

ஆதி தாமிரா

காலையிலேயே கடைக்குப்போய் 3 முட்டை, 2 பழம், கால்கிலோ வெல்லம் வாங்கிவிட்டு எவ்வளவு ஆயிற்று என்று கேட்டேன். எப்போதும் கல்லாவுக்கு அருகிலிருக்கும் கால்குலேட்டர் அப்போது இல்லாமல் கடைக்காரர் திணறிப்போனார். அடாடா, நானே உதவுகிறேன் பேர்வழி என்று விலைகளைக் கேட்டு, கூட்டி ஒரு முடிவுக்கு வர முயன்றேன். அப்போதுதான் புரிந்தது, கணக்கில் கடைக்காரர் என்னைவிட எவ்வளவோ பரவாயில்லை என்பது! அடப்பாவிகளா, எஞ்சினியரிங் படிக்கும் போது வெக்டர் கால்குலஸையும், லீனியர் அல்ஜீப்ராவையும் அசால்ட்டா போட்ட மூளைடா இது! நமக்கு என்னதான் நடக்கிறது?

எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அது பயன்படுத்தப்படாமல் போடப்பட்டால் அது துருப்பிடித்து அழிந்துபோகும். அது மனித உடலுக்கும், மனதுக்கும் கூட பொருந்தும். இன்றைய காலகட்டத்தில் ஒரு தொலைபேசி எண்ணைக் கூட நம்மால் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், பக்கத்து ஊராக இருந்தாலும் கூட திசையறியாமல் தவிக்கிறோம். இதற்குக் காரணம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியோ அல்லது கருவிகளின் பெருக்கமோ அல்ல; மாறாக, அதை நாம் பயன்படுத்தும் முறைகள்தான் கவலையளிக்கின்றன. நம் மூளையின் அத்தியாவசியத் திறன்களுக்கு நாம் சற்றும் வேலை தராமல் கிடப்பில் போடுவது தவறு. இப்படி நாம் இழந்து கொண்டுவரும் திறன்களின் பட்டியல் கவலை தரும்படியான அளவில் கொஞ்சம் பெரிதாகத்தான் இருக்கிறது.

நினைவாற்றல் சிதைவு (Cognitive Atrophy)

மனித மூளையின் தற்காலிக நினைவகம் என்பது தினசரித் தகவல்களைச் சேமித்து வைத்து, தேவைப்படும்போது மீட்டெடுக்கும் அற்புதமான ஓர் அமைப்பு. முன்பு நூற்றுக்கணக்கான தொலைபேசி எண்கள், முகவரிகள், மளிகைக் கடைப் பட்டியல்கள் என அனைத்தையும் நாம் மனப்பாடமாக வைத்திருந்தோம். இன்று மூளையின் அந்தப் பகுதிக்கு, தகவல்களை நினைவில் கொள்ளும் வேலையில்லாததால், மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் பலவீனமடைந்து விடுகின்றன. இதனால், நினைவாற்றல் மங்கி, மறதி சார்ந்த நோய்கள் இளம் வயதிலேயே ஏற்படலாம்.

திசையறியும் திறன் இழப்பு (Loss of Spatial Navigation)

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமானது, சுற்றுப்புறத்தைக் கூர்ந்து கவனித்துத் திசைகளையும் வழித்தடங்களையும் கணிக்கும் திறன். முன்பு ஒரு புதிய ஊருக்குச் சென்றால் மரங்கள், கடைகள், கட்டிடங்கள் போன்ற அடையாளங்களை வைத்து மூளை தனக்குள்ளேயே ஒரு வரைபடத்தை (Visual Mapping) உருவாக்கிக் கொள்ளும். ஒருமுறை போனால், மறுமுறை சட்டென அடையாளம் கண்டுகொள்வோம். ஆனால், இன்று அந்தப் பயிற்சியை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டோம். விளைவு சுற்றுப்புறத்தை உற்றுநோக்கும் நம்முடைய கவனிப்புத் திறன் குறைந்துவிட்டது. பல தடவைகள் நாம் சென்றுவந்த இடத்துக்குக்கூட ‘பேசாமல் லொகேசன் அனுப்பிவிட்டுடு’ என்கிறோம்.

கணக்கீட்டுத் திறன் வீழ்ச்சி (Mental Mathematics)

எண்களைக் கையாளுவது மூளையின் தர்க்கரீதியான சிந்தனையை (Logical Thinking) தூண்டும் ஒரு சிறந்த பயிற்சியாகும். அன்றாட வாழ்க்கையில் உதவும் மிகச் சிறிய கூட்டல், கழித்தல், அல்லது மீதிச் சில்லறைக் கணக்குகளுக்குக் கூட நாம் நம் மூளையைப் பயன்படுத்துவதில்லை. இதனால், எண்களைக் கண்டாலே ஒருவித பயமும், கணக்கிடும் வேகம் குறைதலும் நிகழ்கிறது. மூளையின் பகுப்பாய்வுத் திறனே இதனால் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

இதைப்போலவே நாம் கைப்பட எதையும் எழுதுவது குறைந்து போனதால், நமது மொழியறிவின் சிதைவு (Erosion of Language & Writing), மூளையின் நெகிழ்வுத்தன்மையில் (Neuroplasticity) பாதிப்பு என பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கைகால்களைப் பயன்படுத்தாமல் நாற்காலியிலேயே அமர்ந்திருப்பவனின் தசைகள் எப்படிச் செயலற்றுப் போகுமோ, அதைப்போலத்தான் மூளையும்! தொழில்நுட்பம் நமக்குப் புதிய திறமைகளைக் கொடுத்திருக்கிறது. முன்பு இல்லாத வேகத்தில் தகவல்களைத் தேடுகிறோம். உலக வரைபடத்தை கையில் வைத்திருக்கிறோம். புதிய விசயங்களைக் கற்றுக்கொள்கிறோம். பிரச்சினை தொழில்நுட்பத்தில் இல்லை; பழைய திறமைகளை முழுவதுமாக அவற்றிடம் ஒப்படைத்துவிடுவதில்தான் உள்ளது. வசதிகள் நம் உழைப்பைக் குறைக்க வேண்டுமே தவிர, நம்முடைய திறமைகளை அழிப்பதாக மாறக் கூடாது. வீட்டிலிருப்பவர்களின் போன் எண்களையாவது மனப்பாடம் செய்வது, மளிகைக் கடைக்குப் போனால் சில்லறைக் கணக்குகளையாவது மனதுக்குள் போடுவது, வாரம் ஒரு தடவை பேப்பரில் ஏதாவது எழுதுவது என்று சின்னச்சின்ன சுய பயிற்சிகளையாவது நாம் செய்துகொள்வது இந்தச் சிக்கலைத் தீர்க்கும்!