ஈராக்கின் புனித நகரமான நஜாஃப்பில் (Najaf) உலகின் மிகப்பெரிய இடுகாடு அமைந்துள்ளது. இங்கு 60 லட்சத்திற்கும் அதிகமான உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 'வாடி அல்-சலாம்' (Wadi Al-Salam) என்று அழைக்கப்படும் இந்த இடுகாடு, பல இறைத்தூதர்கள், அறிஞர்கள், தத்துவஞானிகள் மற்றும் அரச குடும்பத்தினரின் கடைசி புகலிடமாக ஆயிரம் ஆண்டு காலத்துக்கு மேல் இருந்து வருகிறது. Wadi Al-Salam என்ற அரபுச் சொல்லுக்குத் தமிழில் 'அமைதியின் பள்ளத்தாக்கு' என்று பொருள். நஜாஃப் நகரின் மையப்பகுதியிலிருந்து வடமேற்கு திசை வரை, பரந்து விரிந்துள்ள இந்த இடுகாடு, நகரின் மொத்தப் பரப்பளவில் 13 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இன்னமும், விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது.
வானத்திலிருந்து பார்க்கும்போது, நெருக்கமாக அமைந்த கட்டடங்களைப் போன்ற தோற்றமளிக்கும் கல்லறைகளால், வாடி அல்- சலாம் ஒரு குட்டி நகரத்தைப் போலவே காட்சியளிக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள் இங்கு வருகை தருகின்றனர். இஸ்லாமிய மக்களின் மிகப் புனிதமான இடங்களில் ஒன்றாக இந்த இடுகாடு கருதப்படுகிறது. இதன் புனிதத்தன்மை காரணமாக இஸ்லாமிய மக்கள் இந்த இடுகாட்டில் தங்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
உலகில் பழமையான மற்றும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் இடுகாடுகளில் இதுவும் ஒன்று. வாடி அல்-சலாம் இடுகாட்டில் சுட்ட செங்கற்கள் மற்றும் சாந்து (plaster) கொண்டு கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள பல கல்லறைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. சுமார், 1400 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் தொடர்ந்து உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வரும் உலகின் ஒரே இடுகாடு 'வாடி அல்-சலாம்' ஆகும்.
இடுகாட்டில் அடக்கம் செய்யும் வழக்கம் பண்டைய காலத்திலிருந்தே உள்ளதாக யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு தெரிவித்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரியமான பாதுகாக்கப்பட்ட இடமாகத் தற்காலிகப் பட்டியலிலும் வாடி அல் சலாம் இடம் பெற்றுள்ளது. அல்-ஹிரா (Al-Hira)மன்னர்கள் மற்றும் சசானிய (Sassanian) காலத்துத் தலைவர்கள், பிற அரச குடும்பங்களைச் சேர்ந்த சுல்தான்கள், இளவரசர்கள் உள்ளிட்ட பலர் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வாடி அல்-சலாம் (Wadi Al-Salam) இடுகாட்டில் நபிகள் நாயகத்தின் மருமகனான இமாம் அலி இப்னு அபி தாலிபின் உடலும் (Imam Ali Ibn Abi Talib) அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தரைமட்டத்திற்குக் கீழே அமைக்கப்பட்ட கல்லறைகள் முதல் உயரமான கோபுர வடிவிலான கல்லறைகள் என விதவிதமான கல்லறைகளை இங்கே நாம் பார்க்க முடியும்.
இந்த இடுகாடு ஒரு தனித்துவமான கலாசார மரபின் சான்றாகத் திகழ்கிறது. உலகெங்கிலும் உள்ள ஷியா முஸ்லிம்களுக்கு இது ஒரு முக்கியமான அடக்க ஸ்தலமாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் 50,000 பேர் வரை, இங்கு அடக்கம் செய்யப்படுகிறார்கள். இதுவரை 60 லட்சம் பேர் இந்த இடுகாட்டில் அமைதியாக உறங்குகின்றனர். இது கிட்டத்தட்ட புனே நகரத்தின் மக்கள் தொகைக்கு ஈடானது. இங்கு ஒரு கல்லறையை அமைக்க 100 டாலர்களும், கற்களைச் செதுக்க 170 முதல் 200 டாலர்களும் செலவாகின்றன.
யுனெஸ்கோ அமைப்புக்கு ஈராக் அரசு சமர்ப்பித்த அறிக்கையில், இந்த இடுகாட்டின் பரப்பளவு 917 ஹெக்டேர் என்று குறிப்பிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 1,700-க்கும் மேற்பட்ட கால்பந்து மைதானங்களுக்குச் சமமாகும். கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தால் உலகின் மிகப்பெரிய இடுகாடாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறையைப் பார்வையிட்டு, மரியாதை செலுத்த வருவார்கள். அதனால், எப்போதும் இந்த இடுகாட்டில் மக்கள் கூட்டம் காணப்படும்.
சவுதி அரேபியாவின் மெதீனா நகரிலுள்ள 'பக்கீ' (Baqi) இடுகாட்டிற்கு அடுத்தபடியாக இஸ்லாமிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது இடுகாடு இதுதான். பக்கீ இடுகாட்டில் இறைதூதர் முஹம்மது நபியின் தோழர்கள் உட்பட அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த முக்கியமான இஸ்லாமியப் பெரியவர்களின் கல்லறைகள் அமைந்துள்ளன.