AI Image 
அறிவோம்

வங்கியில் லட்சங்கள்... பஸ்ஸுக்குக் கையில் காசில்லை! #MoneyAnxiety

பல்லாண்டுகள் உழைப்புக்குப் பிறகும், அதில் கிடைத்த செல்வத்தைக் கொண்டு நிம்மதியாக வாழத் தெரியாமல் தவிக்கும் மனநிலை இது!

ஆதி தாமிரா

பக்கத்து ஊரில் என் சித்தியம்மா ஒருவர் இருக்கிறார். அடிக்கடி வீட்டுக்கு வருவார். ஒருநாள் அப்படி வந்துவிட்டுக் கிளம்பும் போது அவரது அக்காவிடம், அதாவது என் அம்மாவிடம், ‘பஸ்ஸுக்குக் காசு குடுக்கா’ என்று கேட்டார். என் அம்மாவும் அவருக்கு ஒரு ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்தார். அதைப் பார்த்து எனக்குச் சிரிப்புதான் வந்தது. என் சித்தியம்மாவின் கணவர் அரசு ஊழியராக இருந்து மறைந்தவர். அதனால் அவருக்குப் பென்ஷன் வருகிறது. அவர் அவரது திருமண வாழ்க்கையில் இருந்ததை விட இந்த ஓய்வு வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். ஆனால், எங்கள் கதையில், என் தந்தையாரும் மறைந்துவிட்டார். அவர் அரசு ஊழியராகவும் இருந்தவரில்லை. நானும், என் சகோதரனும் கொடுக்கும் சொற்பப் பணம்தான் என் அம்மாவின் மாதச் செலவுக்கான தொகை. ஆனால், சித்தியம்மாவின் ஸ்மார்ட்போனைப் பிடுங்கிப் பார்த்தால், நிச்சயமாய் அவரது வங்கிக் கணக்கில் சில லட்சங்கள் இருக்கும்!

நம்மில் பலரது வீடுகளிலும் இப்படியான மனிதர்களைப் பார்க்க முடியும். வங்கிக் கணக்கில் லட்சங்களும், கோடிகளும் இருக்கும். ஆனால், வெயில்காலத்தில் வீட்டில் ஃபேன் போட்டால் ‘கரண்ட் பில்’ ஏறிவிடுமோ என்று பதறுவார்கள். உடம்புக்கு சுகமில்லை என்றால், மருத்துவமனைக்குச் செல்லத் தயங்கி, ‘இது சாதாரண வலிதான்’ என்று மெடிகல் ஷாப்பில் மாத்திரை வாங்கிப் போட்டுக் கொள்வார்கள். பணம் இருந்தும் அதைத் தனக்காகச் செலவழிக்கத் தெரியாத, அல்லது செலவழிக்கப் பயப்படுகிற இந்த மனநிலையை உளவியலில் ‘பணப் பயம்’ (Money Anxiety) என்கிறார்கள். பல்லாண்டுகள் உழைப்புக்குப் பிறகும், அதில் கிடைத்த செல்வத்தைக் கொண்டு நிம்மதியாக வாழத் தெரியாமல் தவிக்கும் மனநிலை இது! இது ஏன் நடக்கிறது?

இன்றைக்கு அறுபது, எழுபது வயதைக் கடந்தவர்களின் இளமைக்காலம் நம் சமூகத்தில் அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. ஒரு சைக்கிள் வாங்கவோ, வருடம் ஒரு புத்தாடை வாங்கவோ கூட பலத்த சிந்தனைக்கும் போராட்டத்துக்கும் பிறகுதான் அது நடந்திருக்கும். 25 பைசா டிக்கெட் வாங்கி ஒரு சினிமா  பார்க்கக்கூட வழியில்லாமல், நாட்கணக்கில், மாதக்கணக்கில் காத்திருந்திருப்பார்கள். எப்போதாவது உறவினர்கள் தரும் 5 பைசா, 10 பைசாக்களைக் கூட ‘சேமிப்பு’ என்ற பெயரில் பத்திரப்படுத்துவார்கள். இன்றைய சாக்லெட், கேக்ஸ், தின்பண்டங்கள் இவற்றையெல்லாம் அவர்களின் சிறுவயதில் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். அவர்கள் தின்றதெல்லாம் இலவசமாகக் கிடைத்த அரிசிப்பொரி, கருப்பட்டித் துண்டுகள் அல்லது வயல்வெளிகளில் தேடிக் கண்டுபிடித்த வெள்ளரிக்காய், வெண்டைக்காய், மரவள்ளிக்கிழங்கு, போன்றவற்றைத்தான். அவர்களுக்கு அது ஒரு பழக்கம் மட்டுமல்ல; அதுவே அன்றைய சூழலில் அவர்களைப் பிழைத்திருக்கச் செய்த ஒரு வழி. அப்படிப் பழகிய ‘சிக்கனம்’ என்னும் அந்தப் பழக்கம், இன்று காலம் மாறிய பின்பும் அவர்கள் கையை விட்டு நகர மறுக்கிறது. நாளைக்கு என்ன நடக்குமோ என்ற அந்த பழைய பயம்.

Money Anxiety

இப்போது அவர்களின் பிள்ளைகள் கார் வைத்திருந்தாலும், உடலை வருத்திக்கொண்டு பஸ்ஸில் போவார்கள். நிம்மதியாக விமானத்திலோ அல்லது ரயிலில் ஏசி வகுப்பிலோ செல்ல வசதி இருந்தாலும், சாதாரண வகுப்பில் பயணிப்பார்கள். தங்கள் உழைப்பின் பலனை, அல்லது தங்கள் உரிமைகளை அனுபவிக்காமல், எதிர்காலத் தேவைக்குப் பயந்தே நிகழ்காலத்தைச் சிரமமாக்கிக் கொள்வார்கள். பொதுவாக ’நாம்தான் கஷ்டப்பட்டோம், நம் பிள்ளைகளாவது சொகுசாக இருக்கட்டும்’ என்பது இவர்களின் வாதமாக இருக்கும். ஆனால், உண்மை என்னவென்றால், இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் பெரும்பாலும் படித்து, நல்ல வேலைகளில் தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். என் சித்தியம்மாவின் பையனும் அரசு வேலையில்தான் இருக்கிறான். இப்படி இவர்கள் பட்டினி கிடந்து பிள்ளைகளுக்குச் சேர்த்து வைக்கும் லட்சங்கள், அவர்கள் காலத்துக்குப் பின்னர், பெரும்பாலும் பிள்ளைகளின் ஆடம்பரச் செலவுகளுக்குதான் பயன்படுமே தவிர, அந்தப் பெற்றோரின் தியாகத்திற்கு பெருமதிப்பு உருவாகிடாது. காலத்தால் பழமையாகிவிட்ட சிலர்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால், அந்த மனநிலைக்குள் சிக்குவதை இன்றைய இளைஞர்களாவது மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதற்கு என்னதான் செய்யலாம்?

நல்ல உணவகங்கள், பிடித்த ஆடைகள், சுற்றுலாக்கள் என மனதுக்குப் பிடித்த விசயங்களைச் செய்தே ஆக வேண்டும் என்று உறுதி செய்துகொள்ளுங்கள். வயது முதிர்ந்த காலத்தில் சௌகரியம் என்பது ஆடம்பரம் அல்ல, அது உங்கள் உடலின் தேவை. நல்ல மெத்தை, தேவையான மருத்துவ உதவி, கோடைகாலத்தில் ஏசி என இதெல்லாம் வீண் செலவல்ல, உழைத்துக் களைத்த உங்களுக்கான உரிமைகள். பணம் எதிர்கால பாதுகாப்புக்கு அவசியமானதுதான். ஆனால், அதற்காக அத்தனையையும் பூட்டி வைத்துக்கொள்வேன் என்பது சரியல்ல. அது சுழன்றால்தான் அதற்கு மதிப்பு. வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் நம்  வாழ்க்கையை வாழாது. அதை செலவழிக்கும் போதுதான் அது நினைவுகளாகவும், மகிழ்ச்சியாகவும் மாறும். அதன் பெயர்தான் வாழ்க்கை!