AI Image 
அறிவோம்

வரலாற்றுப் போலிப் பெருமிதங்கள் #Fake pride

நம்மிடம் பெருமைப் பட்டுக்கொள்ள நாமாக உருவாக்கிய ஒன்றுமில்லை எனும் போதுதான், நம் அப்பன், தாத்தன் நாம் பெருமைப் பட்டுக்கொள்ளும்படி ஏதாவது செய்து வைத்திருக்கிறானா என்று தேட வேண்டியதாக இருக்கிறது.

ஆதி தாமிரா

கோவிட் வைரஸை விடவும் எளிதாக, இந்த ஆண்ட பரம்பரைப் பெருமிதம் எப்படித்தான் நம் பிள்ளைகளைத் தொற்றுகிறதோ அநியாயம்! எந்நேரமும் இளைஞர்கள் சோஷியல் மீடியாக்களில் ரீல்ஸ் போட்டு, சாதிப் பெருமை பேசி, அதற்கு சோழர்களை துணைக்கழைத்துக்கொண்டு ஃபயர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் பெருமிதப்பட்டுக்கொள்வதற்கு வாகாகக் கிடைத்தார்கள் இந்தச் சோழ மன்னர்கள். முதலில் இந்தப் பெருமிதங்களெல்லாம் ஏன் தேவைப்படுகிறது? நம்மிடம் பெருமைப் பட்டுக்கொள்ள நாமாக உருவாக்கிய ஒன்றுமில்லை எனும் போதுதான், நம் அப்பன், தாத்தன் நாம் பெருமைப் பட்டுக்கொள்ளும்படி ஏதாவது செய்து வைத்திருக்கிறானா என்று தேட வேண்டியதாக இருக்கிறது. அவன் ஒன்றும் செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை, அவன் பெயரில் எதையாவது பொய்யாகப் புனைந்துகொள்ளலாம். ஐம்பதாயிரம் யானைகளை ஏற்றிச் செல்லும் கப்பலைக் கட்டியவன் என் தாத்தன் என்று ஒரு போடு போடுவோம்! யார் வந்து நம்மைக் கேட்கப்போகிறார்கள்?

படிப்பும், அறிவும், முதிர்ச்சியும், சிந்தனையும் வேண்டுமென்றால் உழைக்க வேண்டியதிருக்கிறது. அதெல்லாம் இல்லாமலேயே நடிகர்கள் ‘வைப்’ (Vibe) எனும் போதையைக் கொடுக்கிறார்கள். அது போதும். அது போலவே நம் அரசியலையும், வரலாற்றையும் ‘வைப்’ ஆகவே அணுகிவிட்டால் போயிற்று! சோழர்களையும் ஆக்குவோம் வைப் மெட்டீரியல்களாக எனும் போக்கு இப்போது அதிகரித்துக்கொண்டே போகிறது.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நம்மை ஆண்டார்கள், சரிதான். அவர்கள் காலத்தில் கலைகள் வளர்ந்தன. அவர்தம் பிரம்மாண்டமான கட்டடக்கலை உலகையே வியக்க வைத்தது. இரும்புப் பயன்பாட்டில் அவர்கள் கைதேர்ந்திருந்தார்கள். போர்த்திறனில் அசாத்தியமான தந்திரங்களைக் கையாண்டு பேரரசை விரிவுபடுத்தினார்கள். எல்லாவற்றிற்கும் மேலாகக் கடல்கடந்த வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தார்கள். எல்லாம் உண்மைதான்; மறுப்பதற்கில்லை. தமிழர்களாகிய நம் அத்தனை பேருக்குமே இவை பெருமைக்குரிய விஷயங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அதற்காக அவர்களை எப்போதும், எல்லாவற்றிலும் ’புனிதப்படுத்தி’க் (Romanticizing) கொண்டே இருப்பது எந்த வகையில் சரியாகும்?

சொந்த வரலாற்றைப் பார்த்து அதன் சாதனைகளுக்காகப் பெருமைப்பட்டுக்கொள்வதோடு, அதன் பலவீனங்களுக்காக விமர்சித்துக் கொள்ளுவதும்தான் ஒரு முதிர்ச்சியான சமூகத்தின் அடையாளம். ஆனால், நம்மிடையே வரலாற்றுப் புரிதல் என்பது பெரும்பாலும் ஒருதலைப்பட்சமான உணர்ச்சிப் பெருக்காக மட்டுமே தேங்கி நிற்கிறது. அரசன் என்பவன் மக்களுக்கான ஜனநாயகத்தைப் பேசும் ஒரு நல்ல தலைவனாக எப்போதும் இருந்ததில்லை. அவன் ஒரு நிலப்பிரபுத்துவ அமைப்பின் (Feudal System) உச்சகட்ட அதிகாரம். மன்னராட்சி என்று வந்துவிட்டாலே அங்கே அதிகாரக் குவிப்புகளும், தனிமனித விருப்பு வெறுப்புகளும், அதற்கான சட்டங்களும்தான் முன்னிலை பெறும். மூவேந்தர்கள் காலத்திலும் இத்தகைய கொள்கை ரீதியான பெரும் பலவீனங்களே இருந்திருக்கின்றன.

இன்று நாம் வியந்து பார்க்கும் பல பிரம்மாண்டமான கற்கோவில்களும், அரண்மனைகளும் சாமானிய மக்களின் உழைப்பிலும், அவர்களின் மீது சுமத்தப்பட்ட கடுமையான வரிகளின் மூலமுமே சாத்தியமாகியிருக்கின்றன. போர்க்களங்களில் காட்டிய வீரம் என்பதும் பல நேரங்களில் எல்லையை விரிவுபடுத்துவதற்காக எளிய மக்களின் ரத்தத்தால் நடத்தப்பட்ட அநியாயங்களே! இப்போது மட்டுமல்ல, எப்போதுமே போர்கள் அநீதியானவைதான்! அணுகுண்டுகளும், கொத்துக்குண்டுகளும் மட்டுமல்ல கொடூரம், சக மனிதனை ஒரே வீச்சில் இரண்டு துண்டுகளாக்கிப்போட்டதும், கழுவிலேற்றிச் சித்திரவதை செய்து கொன்றதும் கொடூரம்தான்!

கல்வி என்பதும் அவர்களது காலக்கட்டத்தில் அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. அனைவருக்குமான கல்வியின் சிறப்பை, அவசியத்தை, எதிர்காலத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை! அது தொடக்க காலம்தானே என்று நாம் அதை அத்தனை எளிதாக விட்டுவிட முடியாது. ஏனென்றால், அன்றிலிருந்து இன்னுமொரு ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போனால், கி.முவின் தொடக்க நூற்றாண்டுகளிலேயே தொல்காப்பியம் எனும் மொழியிலக்கண நூல் கண்ட மண் நம்முடையது. கூடவே திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு அறநூல்களையும் உருவாக்கியிருந்தது தமிழ். சங்க கால வேளிர்குல மன்னர்கள் வளர்த்தெடுத்த தமிழ் நம்முடையது. ’மன்னருக்கும், அரசுக்கும் எப்படிக் கட்டுப்பட்டு, விசுவாசத்தோடும், அடிபணிந்தும் மக்கள் நடந்துகொள்ள வேண்டும்’ என்று சீனாவில் கன்பூசியஸ் பாடம் சொல்லிக்கொண்டிருந்த போது, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று குறளும், ’தேரா மன்னா! செப்புவ துடையேன்’ என்று சிலம்பும் நமக்குச் சொல்லிக்கொடுத்தது. எப்பேர்ப்பட்ட முதிர்ச்சி மற்றும் அறிவு! அந்த லெகசியெல்லாம் எங்கே போயிற்று? பதிலாக சோழர்கள் ஆயிரம் ஆண்டுகள் கழித்து செய்துகொண்டிருந்தது என்ன? ’நாலாயிரத் திவ்ய பிரபந்தம்’, ‘பன்னிரு திருமுறைகள்’ என்று பக்தி இலக்கியங்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். இவற்றுக்கு இலக்கிய மதிப்பு இருந்தது, இவை மொழி வளத்துக்கும், இசை மரபுக்கும் பங்களித்தன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இவை மட்டுமேதான் இருந்தன. அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், தத்துவம், சமூகம் போன்ற கருத்தாக்கங்களுக்கு இடமே இல்லாது போயிற்று. அதுவே அடிமைத்தனத்துக்கும், சிந்தனை வீழ்ச்சிக்கும் காரணமாகியிருக்கிறது. அதே காலகட்டத்தில் பாரசீகமும், ஐரோப்பாவும், சீனாவும், ஜப்பானும் அறிவியலையும், மருத்துவத்தையும் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். ஆஹா, நமக்குத்தான் எப்பேர்ப்பட்ட வீழ்ச்சி, பின்னடைவு?

அதிலிருந்து ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு, ஐரோப்பியர்கள் துப்பாக்கியையும், மின்சாரத்தையும், மின் விளக்குகளையும், ரயில் எஞ்சின்களையும் கண்டுபிடித்துக் கொண்டிருந்த போது, நாம் அதே ஐரோப்பியர்களுக்காக தேயிலைத் தோட்டங்களிலும், விவசாய நிலங்களிலும் ஒட்டிய வயிறோடு ரத்தம் சுண்டச்சுண்ட வெயிலில் கூலி வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தது ஏன் என்பதற்கான பதில் இதில்தான் இருக்கிறது. நம்மை ஆண்ட பரம்பரையினர், நமக்குக் கல்வியைத் தரவில்லை. அறிவியலை வளர்க்கவில்லை. மாறாக அடிமைத்தனத்தை வளர்த்தெடுத்தனர். அதுதான் காரணம்! ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கத்திற்கு மட்டுமே கல்வி எட்டியது. மக்களுக்கான உண்மையான சமத்துவ ஆட்சி அங்கே நிலவவில்லை; மாறாக வர்க்க மற்றும் சாதிய அடுக்குகளை மிகத் தீவிரமாக வளர்த்தெடுத்தார்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், நம் முன்னோர்களின் பலவீனங்களை மூடி மறைத்துவிட்டு, அவர்களைப் பிழையற்ற நாயகர்களாகக் காட்டுவது வரலாற்றைத் திரிப்பதற்குச் சமம்.

ஒட்டுமொத்த தமிழினத்தின் அடையாளமாக, வரலாற்றின் சாட்சியாகப் பார்க்கப்பட்டு, விமர்சிக்கப்பட வேண்டிய மன்னர்களை, தங்களின் சாதி வட்டத்திற்குள் அடைத்து, அதிலொரு சுகம்காணும் அற்பத்தனமும் இப்போது அதிகரித்திருக்கிறது. கடல் கடந்து வணிகம் செய்த ஒரு தமிழ்நில மன்னனை, இன்று ஒரு சாதிச் சங்கத் தலைவரைப்போல மாற்றுவதை விடப் பெரிய வரலாற்று அறியாமை வேறொன்றும் இருக்க முடியாது. போலவே, ’மன்னராட்சி காலம் பொற்காலம், ஜனநாயகம்தான் மோசமானது’ என்று திரித்துப் பேசும் ஒரு கூட்டமும் ஊடுசால் ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

இன்று ஜனநாயகம் நமக்குச் சமத்துவத்தையும், வாக்குரிமையையும், அனைவருக்குமான கல்வியையும் தந்திருக்கிறது. இந்த வரலாற்றையெல்லாம் நாம் அறிந்துகொள்ளத் தவறினால், புரிந்துகொள்ளத் தவறினால் நம் கண்முன்னே, நாம் கண்ணைத் திறந்துகொண்டிருக்கும் போதே, இவையெல்லாம் பறிபோகும். ராஜராஜ சோழனைப் பற்றியும், ஜடாவர்மன் சுந்தர பாண்டியனைப் பற்றியும் பெருமை பேசுவது எளிது. ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தைவிடச் சிறந்த சமூகத்தை உருவாக்குவது மட்டுமே அவர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான மரியாதை. மாறாக இன்னொரு ஆயிரம் ஆண்டுகள் ஆனபிறகும், வீழ்ச்சிக்கான காரணங்களை சரி செய்வதை விடுத்து, போலிப் பெருமிதங்களுக்குள்ளும், பொய்மைக்குள்ளும் இன்னும் ஆழமாகப் புதைந்து போனால் நாம் அவர்களைக் கொண்டாடவில்லை; நம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் பொருளாகும்.