சமயங்களில் ஆளும்கட்சிகள் எனும் பெயரில், பிற்போக்குச் சக்திகளிடம் சிக்கித் தவிக்கிறோம். ஆனால், அதன் சிக்கல்களை அனுபவித்த பிறகும் மக்கள் மீண்டும் மீண்டும் அவர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். படித்த, சிந்தனை மிக்க சமூகம் என்றியப்பட்ட மக்கள் கூட கவர்ச்சிக்கு மயங்கிவிடுகிறார்கள். ஜனநாயகத்தின் மறுபக்கம் இப்படியானதாகத்தான் இருக்குமா எனும் கேள்விகள் எழுகின்றன.
மனிதர்கள் குழுக்களாக, குடியிருப்புகளைத் தோற்றுவித்த நாளிலிருந்தே, ஒரு கேள்வி மனித சமுதாயத்தைத் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கிறது.
"மக்களை யார் ஆள்வது? எப்படி ஆள்வது?"
இது வெறும் ஓர் அரசியல் கேள்வி மட்டுமல்ல. ஒரு நாட்டின் பொருளாதாரம், கல்வி, மருத்துவம், சட்டம், சுதந்திரம், சமத்துவம், பாதுகாப்பு என்று ஒவ்வொரு விஷயத்தையும் தீர்மானிக்கும் அடிப்படை கேள்வி. மனித வரலாறு முழுவதும் இந்தக் கேள்விக்கு பலவிதமான பதில்கள் முயற்சி செய்யப்பட்டிருக்கின்றன. சில வழிமுறைகள், பெரிய அளவில் நீடித்தன. சில, கொஞ்ச காலங்களிலேயே தோல்வியடைந்திருக்கின்றன. இன்னும் சில, மாற்றமடைந்துகொண்டே இருக்கின்றன.
மனித வரலாற்றின் மிக நீண்ட ஆட்சி முறை மன்னராட்சி (Monarchy) முறை. இந்த முறையில், அதிகாரமும், பதவியும் அரச குடும்பத்திற்குச் சொந்தமானது. மக்கள் யாரையும் தேர்ந்தெடுப்பதில்லை. மன்னருக்குப் பிறகு அவரது வாரிசே அடுத்த மன்னராகிறார். இந்த முறையின் மிகப்பெரிய பலம் வேகமான முடிவுகள். தேர்தல், கூட்டணி, எதிர்க்கட்சி போன்ற சிக்கல்கள் இல்லை. ஒரு திறமையான மன்னர் நாட்டை மிகச் சிறப்பாக முன்னேற்றவும் முடியும். ஆனால், அந்த முறையின் மிகப்பெரிய பலவீனமும் அதுவே. நல்ல மன்னருக்குப் பிறகு திறமையற்ற அல்லது கொடுங்கோலான ஒரு மன்னர் வந்தால், மக்களுக்கு அவரை மாற்றும் வழி இல்லை. இந்த முறையைக் கடந்து வந்துவிட்டோம். போலவே, சர்வாதிகாரத்தில் (Dictatorship) அதிகாரம் ஒருவரிடமோ, ஒரு சிறிய குழுவிடமோ குவிந்திருக்கும். அவர்கள் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. இந்த முறையிலும் முடிவுகள் வேகமாக எடுக்கப்படலாம். பெரிய திட்டங்கள் தாமதமின்றி செயல்படுத்தப்படலாம். ஆனால், அந்த அதிகாரத்திற்கு கட்டுப்பாடுகள் இல்லாதபோது, விமர்சனங்களும் ஒடுக்கப்படும். ஊடகங்கள், நீதித்துறை, எதிர்க்கட்சிகள் ஆகியவை பலவீனப்படுத்தப்படும். ஒரு நல்ல சர்வாதிகாரி கிடைத்தால் நாடு வேகமாக வளரலாம்; ஆனால் ஒரு மோசமான சர்வாதிகாரி அமைந்துவிட்டால் மக்கள் துன்புறுவதை தவிர்க்க முடியாது. இது நிச்சயம் ஏற்புடையதல்ல.
ஜனநாயகம் (Democracy)
ஜனநாயகத்தின் அடிப்படை யோசனை மிகவும் எளிமையானது. ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள் விரும்பவில்லை என்றால் அடுத்த தேர்தலில் அவர்களை மாற்றவும் முடியும். இந்த முறையின் மிகப்பெரிய பலம் இதுதான். எந்த ஆட்சியாளரும் நிரந்தரமானவர் அல்ல. மக்கள் விருப்பமே இறுதி அதிகாரம். ஆனால், ஜனநாயகத்திலும் குறைகள் உள்ளன. தேர்தலில் வெற்றி பெற அரசியல்வாதிகள் நீண்டகால நலனை விட உடனடி வாக்குகளைப் பெறும் கவர்ச்சித் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம். சமூக ஊடகங்கள், பிரச்சாரங்கள், மதம், சாதி, இன உணர்வுகள், பிரபலங்களின் கவர்ச்சி, பொய்கள் ஆகியவற்றைக் கொண்டு வாக்காளர்களை பாதிக்க முடியும். தகவலறிந்த முடிவை விட உணர்ச்சிபூர்வமான முடிவுகள் மேலோங்கவும் வாய்ப்பு உண்டு.
கம்யூனிசம் (Communism)
கம்யூனிசம் முதலில் ஒரு பொருளாதாரச் சித்தாந்தமாக உருவானது. இதன் அடிப்படை யோசனை எளிமையானது. சமூகத்தின் செல்வம் சிலரிடம் மட்டுமே குவியக்கூடாது. நிலம், தொழிற்சாலைகள், இயற்கை வளங்கள் போன்ற உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தச் சித்தாந்தம் கல்வி, சுகாதாரம், அடிப்படை வாழ்க்கை வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் அதிக முக்கியத்துவம் கொடுத்தது. ஆனால் நடைமுறையில் அனேக சிக்கல்கள் இதில் இருக்கின்றன. இங்கே எல்லாவற்றையும் அரசு திட்டமிட வேண்டியிருக்கிறது. "கடினமாக உழைப்பவருக்கும், குறைவாக உழைப்பவருக்கும், பெரிய திறமைசாலிகளுக்கும், சாமானியர்களுக்கும் பலனில் பெரிய வேறுபாடு இல்லையெனில், மக்கள் ஏன் அதிகமாக உழைக்க வேண்டும், திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்?" எனும் கேள்வியும் எழுகிறது. இந்தக் கேள்விக்குத் திருப்திகரமான பதில் இதுவரை இல்லை.
அப்படியானால் எதுதான் சிறந்த ஆட்சி முறை?
எதுவுமே முழுமையானதல்ல என்பதுதான் வலிக்கும் நிஜம். இன்று உலகில் பரவலாக இருப்பவை இரண்டு, கம்யூனிசம் மற்றும் ஜனநாயகம். கம்யூனிசத்தில் மனிதர்கள் சமத்துவ உணர்வுடன் உழைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.. ஜனநாயகத்தில் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். இரண்டுமே சரி வர நடப்பதில்லை! இந்த ஏஐ யுகத்தில் கூட ஒரு முழுமையான, பிழைகளற்ற (Perfect) ஆட்சி முறை ஒன்றை உருவாக்கிட முடியாதா? முடியாது! ஏனென்றால், மனிதர்கள் யாரும் முழுமையானவர்கள் இல்லை!
"ஜனநாயகம் என்பது மிக மோசமான ஒரு ஆட்சி முறைதான், ஆனால் இதுவரை மனிதன் கண்டுபிடித்த மற்ற எல்லா ஆட்சி முறைகளையும் விட அது சிறந்தது" - -வின்ஸ்டன் சர்ச்சில்.