Narrative  ChatGPT AI Image
அறிவோம்

கதை மயக்கம்! #Narrative Fallacy #GoodReads

திரையில் ஒரு நடிகர் செய்யும் அதிரடிக் காரியங்களை நிஜ வாழ்விலும் அவரால்தான் செய்ய முடியும் என்று நம்பி, அவருக்குப் பாலாபிஷேகம் செய்யும் அளவிற்கு மனிதர்களைச் சிந்திக்கவிடாமல் செய்வது இந்தக் 'கதை மயக்கம்' தான்.

ஆதி தாமிரா

மனித வரலாற்றின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு எது என்று கேட்டால், நெருப்போ, சக்கரமோ அல்ல; அது "கதை" (Story) என்றுதான் சொல்ல வேண்டும். தரவுகளும், புள்ளிவிவரங்களும் (Data & Statistics) உண்மைகளைச் சொல்லலாம். ஆனால், மனித மனம் எப்போதுமே உண்மைகளை விடக் கதைகளையே அதிகம் விரும்புகிறது, நம்புகிறது. சிக்கலான, குழப்பமான உலக எதார்த்தங்களை எளிமையாகப் புரிந்துகொள்ள, நம் மூளை அவற்றோடு உண்மையற்ற தொடர்புகளை உருவாக்கிக்கொள்ளும் மாயம்தான் 'கதை மயக்கம்' (Narrative Fallacy) எனப்படுகிறது. இதைப் பயன்படுத்தியே உலகளவில் அரசியல், மதம், சினிமா, கார்ப்பரேட் பிராண்டுகள் எனப் பல கோட்டைகள் எழுப்பப்படுகின்றன.

மதம்:

மதங்கள் அனைத்தும் தங்களின் தத்துவங்களையும், ஒழுக்க நெறிகளையும் வெறும் சட்டங்களாகவும், விதிகளாகவும் தந்திருந்தால் அவை இவ்வளவு காலம் நிலைத்திருந்திருக்க முடியாது. பிரபஞ்சம் எப்படி உருவானது, மரணத்திற்குப் பின் என்ன நிகழ்கிறது போன்ற, மனிதனால் விடை காண முடியாத கேள்விகளுக்கு மதங்கள் சுவாரசியமான கதைகள் மூலம் விடையளித்தன. மனிதர்களின் அடிப்படைச் சிக்கல்களான பயம், பாதுகாப்பு, உணவு போன்றவற்றை, கடவுள், பாவம், புண்ணியம் போன்றவற்றோடு கதைகள் இணைத்தன. அவர்களை ஒழுங்குபடுத்தி கட்டுக்குள் வைத்திருக்க, நன்மைக்கும் தீமைக்குமான போர், தியாகம், முக்தி போன்ற உணர்வுப்பூர்வமான கதையாடல்கள் உதவுகின்றன. தர்க்க ரீதியான உண்மைகளை விட இந்தக் கதைகள் தரும் மன அமைதியே மனிதர்களை மதத்தோடு பிணைத்து வைக்கிறது.

சினிமா:

 திரையரங்கம் என்பது மனிதர்கள் தங்களின் எதார்த்த வாழ்க்கையை மறந்து, இரண்டு மணி நேரம் ஒரு கதையைப் பார்த்து அழும், சிரிக்கும் ஒரு மாயாஜாலமான இடம். சினிமாவில் லாஜிக் (Logic) மீறப்படும்போது கூட, மேஜிக் (Magic) வேலை செய்கிறது. காரணம், இயக்குநர்கள் நம்முடைய ஆழ்மன ஆசைகளையும், அச்சங்களையும் தொடும் கதைகளைத் திரையில் காட்டுகிறார்கள். திரையில் ஒரு நடிகர் செய்யும் அதிரடிக் காரியங்களை நிஜ வாழ்விலும் அவரால்தான் செய்ய முடியும் என்று நம்பி, அவருக்குப் பாலாபிஷேகம் செய்யும் அளவிற்கு மனிதர்களைச் சிந்திக்கவிடாமல் செய்வது இந்தக் 'கதை மயக்கம்' தான்.

தொழில்:

இன்றைய சந்தையில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் தரத்தை விற்கும் காலத்தைக் கடந்துவிட்டன. அவை இன்று தங்களின் கதைகளை விற்கின்றன. ஒரு கார் விளம்பரம் செய்யப்படும்போது அதன் எஞ்சின் திறனோ, தொழில்நுட்பங்களோ காட்டப்படுவதில்லை. மாறாக, ’இந்தக் காரை ஓட்டினால் நீங்கள் சமூகத்தில், நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள்’ என்று சொல்லப்படுகிறது. ஒரு சோப்பை விற்கும் விளம்பரங்கள், அதன் வேதியியல் தன்மையை விளக்குவதில்லை. மாறாக, ’இந்தச் சோப்பைப் பயன்படுத்தினால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்’ என்கிறார்கள். இவையெல்லாம் நமது உணர்ச்சிகளோடு விளையாடக்கூடிய கதைகள். ஆப்பிள் (Apple) மொபைலையோ அல்லது நைக் (Nike) காலணியையோ வாங்கும்போது நாம் அவற்றை வெறும் பொருளாக நினைப்பதில்லை. நம் கௌரவம் உயர்ந்துவிட்டதாகக் கருதுகிறோம். 

அரசியல் களம்:

’ஒரு சாமானியன் எப்படிப் போராடி, தடைகளை உடைத்து, மக்களின் இரட்சகனாக மாறினான்’ என்ற கதைதான் வரலாற்றில் பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. மக்கள் தங்களின் தனிப்பட்ட ஏமாற்றங்களுக்கு இந்த நாயக பிம்பக் கதைகளில் வடிகால் தேடுகிறார்கள். ஒரு நல்ல கதைக்கு ஒரு வலுவான வில்லன் தேவை. அரசியலில் ’அவர்கள் நம்மை அழிக்கப் பார்க்கிறார்கள், நான் உங்களைக் காப்பாற்றுகிறேன்’ என்ற கதையாடல் (Narrative) உண்மையான வளர்ச்சி குறித்த விவாதங்களை விட மிக எளிதாகத் தேர்தல்களில் வாக்குகளைப் பெற்றுத் தந்துவிடுகிறது.

நம் மூளை, தனித்தனியாக இருக்கும் தரவுகளை (Raw Data) நினைவில் வைத்துக் கொள்ளச் சிரமப்படுகிறது. அதே தரவுகளைக் காரண-காரியம் (Cause and Effect) கொண்ட ஒரு கதையாக மாற்றும்போது, அதை எளிதாக உள்வாங்கிக் கொள்கிறது. உதாரணமாக, ’பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது’ என்பதை விட, ’ஒரு குறிப்பிட்ட நபரின் சூழ்ச்சியால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது’ என்ற கதை நமக்குத் திருப்தி அளிக்கிறது. 

ஆனால், கதைகளால் கட்டப்படும் மாயைக்குள் சிக்கிக்கொண்டால், எதார்த்தமான உண்மைகள் நம் கண்களுக்குத் தெரியாமல் போய்விடும். அரசியல்வாதிகள் விற்கும் கதைகளையும், பிராண்டுகள் காட்டும் மாயைகளையும், சினிமா மற்றும் மதங்கள் உருவாக்கும் பிம்பங்களையும் தர்க்க ரீதியாக அணுகக் கற்றுக்கொள்ள வேண்டும். கதைகளை ரசிப்போம்; கதைகள் உலகை அழகூட்டுகின்றன, மனிதர்களின் சிந்தனையை மேம்படுத்துகின்றன, அனுபவங்களை அளிக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கதைகள் வேறு, கதை மயக்கம் வேறு! உண்மைகளைத் தரவுகள் மற்றும் ஆய்வுகளின் வழியே மட்டுமே நம்புவோம் என்ற விழிப்புணர்வே இந்தக் 'கதை மயக்கத்திலிருந்து' நம்மைப் பாதுகாக்கும்!