நான் எந்தத் தடங்கலுமின்றி வெளியே எங்கு வேண்டுமானாலும் போய் வருகிறேன். நான் வேலைக்குப் போகலாம், சினிமாவுக்குப் போகலாம், உறவினர்களை, நண்பர்களைப் பார்க்கப் போகலாம், கடைக்குப் போகலாம், மாலையில் வாக்கிங் செல்வதற்காகப் போகலாம்… லாம்… லாம்! ஆனால், நான் பணி முடித்து மாலையில் வீடு திரும்பும் போது என் மனைவி வீட்டிலிருந்தாக வேண்டும். அவர் வேலைக்குச் செல்பவரில்லை. அதனால் தன்னியல்பில் வீட்டிலிருக்கத்தானே வேண்டும்! ஆனால், இன்று அவர் வீட்டிலில்லை! அப்படி எங்கே போனார்? அப்படியே ஏதேனும் அவசரம் என்றாலும், என்னிடம் சொல்லிவிட்டுத்தானே போயிருக்க வேண்டும்? போனைக்கூட எடுக்காமல் அப்படி என்ன பொறுப்பற்றத் தன்மை? எனக்குக் கோபம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த நிலையில் என்னைப் பார்த்து நீங்கள், ’நீயொரு பாசிஸ்ட்’ என்பீர்களா?
‘நானென்ன அவரை என் முழுக் கட்டுப்பாட்டில் வைக்கவா இப்படிக் கோபப் படுகிறேன்? நான் அவரைக் காதலிக்கிறேன். அவர் இந்த வெயிலில், பேருந்தில் கூட்டநெரிசலில் சிரமப்பட்டுக்கொண்டு செல்வதை நான் விரும்பவில்லை. என்னிடம் சொல்லியிருந்தால் அலுவலகத்தில் அனுமதி போட்டுவிட்டுக்கூட வந்து கூட்டிக்கொண்டு போயிருப்பேனே... அவர் எனக்கு மிகவும் முக்கியம். இந்தச் சென்னைப் போக்குவரத்தில் அவரது பாதுகாப்பு குறித்து எனக்குக் கவலையாக இருக்கிறது. அந்த அக்கறையில் எனக்குக் கோபம் வருகிறது. எனது காதலையும், அக்கறையையும் பார்த்தால் உங்களுக்கு பாசிஸ்ட் மாதிரி தெரிகிறதா?’
சமூக ஊடகங்களில் இப்போது மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்று ‘பாசிசம்’ (Fascism). எதிர்க்கட்சிக்காரர்களெல்லாம் ஆளும் கட்சிக்காரர்களைப் பார்த்து பாசிஸ்ட்டுகள் என்கிறார்கள். ஆட்சி மாறினாலும், இந்த வாக்கியம் மட்டும் மாறுவதில்லை. அப்படியானால், உண்மையில் பாசிசம் என்றால் என்ன? பாசிசம் என்றால் வல்லாண்மை, கொடுந்தேசியம் என்கிறது கூகுள். அவ்வளவுதானா? அது சர்வாதிகார ஆட்சியை மட்டும்தான் குறிக்கிறதா?
பாசிசம் (Fascism) என்ற சொல், லத்தீன் மொழியின் பாசஸ் (Fasces) என்ற வார்த்தையிலிருந்து பிறக்கிறது. அதற்கு ‘மரக்குச்சிகளின் கட்டு’ என்று பொருள். தனித்தனிக் குச்சிகளை எளிதாக உடைத்துவிடலாம், ஆனால் ஒன்றாகக் கட்டப்பட்ட கட்டை உடைக்க முடியாது என்ற தத்துவம் அதன் அடிப்படை. மக்களை ‘ஒற்றுமை’ எனும் பெயரில் ஒன்று திரட்ட, ஆனால், ’அதிகாரம்’ எனும் மறைமுக நோக்கத்தைக் கொண்டிருந்த இத்தாலியின் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இந்தச் சொல்லைப் பயன்படுத்தினார். அவரின் வழியிலேயே, ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் அதன் உச்சக்கட்டப் பொருளை வடிவமைத்தார்.
பாசிசம் என்பது சிக்கலான ஒரு மனநிலை. உள்ளொன்றும் புறமொன்றுமாகச் செயல்படும் கயமை. சுயநலமான, மறைமுகத் திட்டங்கள் கொண்ட சதி. சிந்தனைக்கு எதிரான, அறிவியலுக்கு எதிரான ஆதிக்க அரசியல்! ஒரு சமூகத்தின் பயம், கோபம், பாதுகாப்பின்மை, அடையாளம், வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு இவையெல்லாம் ஒன்றுசேரும் போது உருவாகும் ஒரு கூட்டு மனநிலை. வரலாற்றில் கோடிக்கணக்கான மனிதர்களைப் பாதித்த, ஓர் ஆபத்தான உளவியல் கட்டமைப்பு.
புகழ்பெற்ற தத்துவஞானி உம்பர்ட்டோ எகோ (Umberto Eco) பாசிசத்தின் தன்மைகளைப் பற்றி விரிவாகச் சொல்கிறார். ஒரு சமூகத்தில் பாசிசம் தலைதூக்குகிறது என்பதை அதன் ஐந்து முக்கியக் கூறுகளை (The Anatomy of Fascism) வைத்து நாம் அடையாளம் காண முடியும்.
முதலாவது அதீத தேசியம் மற்றும் குழுவாதம் (Hyper-Nationalism).
தேசபக்தி எனும் பெயரில் நம்முடைய இனம், நம்முடைய மொழி, நம்முடைய நாடு மட்டும்தான் உலகிலேயே உயர்ந்தது, சிறந்தது. மற்றவர்கள் அனைவரும் நமக்குக் கீழானவர்கள் அல்லது நமது எதிரிகள் என்ற வெறித்தனமான கூட்டு மனநிலையை உருவாக்குவது இதன் முதல் படி. இங்கே ஆரோக்கியமான தேசபக்திக்குப் பதிலாக, மாற்றுத் தரப்பினர் மீதான வெறுப்புதான் பெரிய அளவில் இருக்கும்.
அடுத்து தனிநபர் வழிபாடு (Cult of Personality).
’நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் இவர்தான் தீர்வு, இவரால் மட்டும்தான் நம்மைக் காப்பாற்ற முடியும்’ என்று ஒரு தனிமனிதனை கதாநாயகனாகவோ, கடவுளாகவோ அல்லது மாபெரும் மீட்பராகவோ சித்தரிப்பது பாசிசத்தின் அடுத்த கூறு. அந்தத் தலைவனின் முடிவுகளைக் கேள்வி கேட்பதே நாட்டில் பெரிய துரோகமாகக் கருதப்படும். அவனது தவறுகள் அனைத்துமே முதல் கட்டத்தில் செயல்பாடுகளாகச் சித்தரிக்கப்படும். அதன் விளைவுகளை நாட்டின் எதிர்கால நலன், தேசபக்தியைக் காரணம் காட்டிப் பொறுத்துக்கொள்ளச் சொல்வார்கள்.
மூன்றாவதாக ஒரு பொதுவான எதிரியைக் கட்டமைத்தல் (Creation of a Common Enemy).
பாசிசத்தால் எப்போதும் ஓர் ‘எதிரி’ இல்லாமல் செயல்பட முடியாது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, வறுமை என அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஏதோ ஒரு குறிப்பிட்ட சிறுபான்மைப் பிரிவினரோ, பக்கத்து நாடோ, இன்னொரு கட்சியோ அல்லது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தவாதிகளோதான் காரணம் என்று தொடர்ந்து பழி சுமத்தப்படும் (Scapegoating). ’அவர்களை நாம் ஒடுக்காவிட்டால் நாம் அழிக்கப்பட்டு விடுவோம்’ என்ற பயம் மக்கள் மத்தியில் தொடர்ந்து விதைக்கப்படும். பாசிசம் எப்போதும் ஒரு பொன்னான கடந்தகாலத்தைப் பற்றியே பேசும். ’நாம் ஒருகாலத்தில் மகத்தான வாழ்வு வாழ்ந்தோம். நமது பெருமையை எல்லாம் இவர்கள் கெடுத்துவிட்டார்கள். அதை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்பதே அதன் மையக் கருத்தாக இருக்கும். ஒரு சமூகத்தின் கோபத்தையும், ஏமாற்றத்தையும், பாதுகாப்பின்மையையும் கிளறிவிட்டு, அதை ஒரு குறிப்பிட்ட குழுவின் மீது திருப்பிவிடும் அரசியல்தான் பாசிசத்தின் முக்கியமான கட்டம்.
அடுத்து ஜனநாயக அமைப்புகளை முடக்குவது (Anti-Democratic).
மக்களாட்சியின் தூண்களாகக் கருதப்படும் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், மற்றும் ஊடகங்களை ஒடுக்குவது அல்லது தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது. மாற்றுக்கருத்துகளைப் பேசும் ஊடகங்களை முடக்குவது, பயமுறுத்துவது அல்லது பொய்யர்கள் என்று முத்திரை குத்துவது. தங்களின் பிரச்சாரங்களை மட்டுமே உண்மை என நம்ப வைப்பது.
இறுதியாக அறிவுக் கூர்மைக்கு எதிரான போக்கு (Anti-Intellectualism).
இந்த நிலையைக் கேள்வி கேட்கும் அறிவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் போன்ற சிந்தனையாளர்களை பாசிசம் எப்போதும் வெறுக்கும். ஏனெனில், சிந்திக்கும் மனிதன் கேள்விகளைக் கேட்பான். கேள்விகள் பாசிசத்துக்கு எதிரானவை. கேள்வி கேட்பவர்களை நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ‘சதிகாரர்கள்’ என்று சித்தரிப்பார்கள். அவர்களைப் பேசவிடாமல் செய்ய எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
ஆயின், இப்படியான பாசிசத் தாக்குதல்களிலிருந்து எப்படி நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது?
பாசிசம் எப்போதும் ’நாம் vs அவர்கள்’ எனும் இருதுருவ மனநிலையை உருவாக்கிக்கொண்டே இருக்கும். ’நாம் நல்லவர்கள்; அவர்கள் ஆபத்தானவர்கள்’ என்ற எளிமையான பிரிவை அது உருவாக்குகிறது. மனிதர்களின் சிக்கலான பிரச்சனைகளுக்கு மிக எளிமையான பதில்களைத் தருகிறது. பொருளாதார நெருக்கடி இருக்கிறதா? அதற்குக் காரணம் ‘அவர்கள்’. வேலைவாய்ப்பு குறைகிறதா? அதற்குக் காரணம் ‘அவர்கள்’. நாட்டின் கலாச்சாரம் அழிகிறதா? அதற்கும் காரணம் ‘அவர்கள்’. இப்படியாக ஒரு சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு முகத்தைத் தேடித்தருகிறது பாசிசம். இந்தச் சுட்டிக்காட்டலால், உண்மையில் நாம் என்று சொல்லப்படும் குழுவிலிருப்போர் அனைவரும் நல்லவர்களுமில்லை, அவர்கள் என்று குறிக்கப்படும் குழுவிலிருப்போர் அனைவரும் ஆபத்தானவர்களும் இல்லை எனும் உண்மையை நாம் உணர்வதில்லை.
The line dividing good and evil cuts through the heart of every human being.Aleksandr Solzhenitsyn
எல்லா மனிதனும் முழுக்கக் கெட்டவனும் இல்லை, முழுக்க நல்லவனும் இல்லை. ’அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்’ என்று நட்பு கொள்ளும் முன்பாக மனிதர்களை ஆராய்ந்து கொள்ளச் சொல்கிறார் வள்ளுவர். நட்புக்கே அப்படி ஆராய வேண்டுமெனில், நம்மை ஆளும் தலைவனைத் தேர்ந்தெடுப்பதில் எத்தனை ஆய்வுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்? மிகையான நற்குணங்கள் கொண்டவனை நாம் தேர்ந்தெடுத்தாலும் அவனிடம் இருக்கும் சில சின்னப் பிரச்சினைகளைப் பூதாகரமாக்கிப் பிரச்சாரம் செய்வார்கள் பாசிஸ்ட்டுகள். அப்படிச் செய்பவர்களை ஆராய்ந்தால்தான் தெரியும், அவர்களிடம் மிகையாக இருப்பது என்னவென்று!
பாசிசம் தனக்கான குழுவை ஒன்றிணைக்க, அது முதலில் தீய மனிதர்களைத் தேடுவதில்லை; பயந்த, பலவீனமான மனிதர்களைத்தான் தேடுகிறது. எதிர்காலம் பற்றிய அச்சத்தை உருவாக்கும் சதியில் வீழ்ந்துவிட்ட எளிய மக்கள், பாதுகாப்பைத் தேடும் மக்கள், அவமானப்பட்டதாக உணரும் மக்கள் — இவர்கள்தான் அதற்கு மிகவும் எளிதில் இரையாகிறார்கள். பாசிசம் வெறும் வன்முறையால் மட்டுமே வளர்வதில்லை, அது உணர்ச்சிகளால் குறிப்பாக, கோபத்தாலும், பயத்தாலும் வளர்கிறது. ஒரு மனிதனைச் சிந்திக்க வைப்பதை விட, கோபப்பட வைப்பது எளிது. ஒரு கூட்டத்தை விவாதிக்க வைப்பதை விட, பயமுறுத்துவது எளிது. பாசிசம் இந்த உளவியலை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறது. இத்தகைய நமது அச்சத்தையும், சந்தேகங்களையும் போக்கிக் கொள்ள நம் வரலாற்று அறிவை, சிந்தனையை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில், பாசிச மனநிலை என்பது எந்த ஒரு அரசியல் இயக்கத்துக்கோ, கட்சிக்கோ மட்டுமே சொந்தமானதல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். மிகை தேசியவாதம், தலைவரை கண்மூடித்தனமாக வழிபடுதல், எதிர்கருத்துக்களை வெறுத்தல் போன்றவை வலதுசாரி அரசியலில் மட்டும் அல்ல; இடதுசாரி இயக்கங்களிலும் கூட நம்மால் பார்க்க முடியும். எங்கே எதிர்க்கருத்தைப் பொறுமையாக அணுகமுடியாத மனநிலை உருவாகிறதோ, அங்கே பாசிசத்தின் நிழல் படியத் தொடங்கிவிடுகிறது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் என்னவென்றால், அது மக்களுக்குக் கேள்வி கேட்கும் உரிமையைக் கொடுக்கிறது. ஆனால், பாசிசம் கேள்விகளை விரும்புவதில்லை. அது விசுவாசத்தையே எதிர்பார்க்கிறது. ’நம்பு, பின்தொடர், கேள்வி கேட்காதே’ -என்பதே அதன் அடிப்படை அம்சம். அதனால், பாசிசத் தாக்குதலிலிருந்து நம்மைக் காக்கும் இன்னொரு ஆயுதம் எதிர்க்கேள்விகள். நாம் கேள்விகளைக் கேட்போம்.
இதில் ஒரு வியப்பான அம்சம் என்னவென்றால், பல நேரங்களில் மக்களின் ஒரு பகுதியினர் பாசிசத்தை வெறுப்பின் காரணமாக மட்டுமல்ல, நம்பிக்கையின் காரணமாகவும் ஆதரிக்கிறார்கள். ’இந்தக் குழப்பத்தை யாராவது வந்து சரிசெய்து நம்மைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற ஏக்கம்தான் அவர்களை அங்கே கொண்டு செல்கிறது. ஆனால், வரலாறு நமக்குச் சொல்வது என்னவென்றால், மனிதர்களின் பயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் அரசியல், இறுதியில் அவர்களின் சுதந்திரத்துக்கக்குதான் ஆபத்தாக முடியும். பாசிசம் எப்போதும் இராணுவச் சீருடையோடு மட்டுமே வருவதில்லை. அது தேசப்பற்று, பாதுகாப்பு, ஒழுங்கு, கலாச்சாரப் பெருமை, வளம் என்ற அழகான கருத்தாக்கங்களின் பின்னாலும் மறைந்து கொண்டு வரலாம். அதனால்தான், ஒரு ஜனநாயகச் சமூகத்தில் குடிமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். கேள்வி கேட்கும் உரிமையையும், எதிர்க்கருத்தைக் கேட்கும் பொறுமையையும், சக மனிதர்களை சக மனிதர்களாகப் பார்க்கும் தன்மையையும் இழக்கத் தொடங்கும் போது, ஒரு சமூகத்தின் ஜனநாயகம் அழிந்து அங்கே பாசிசம் தலைதூக்கிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
நான் என் மனைவியின் மீது செலுத்துவது அதிகாரம். அது அப்பட்டமான பாசிசம்! எனது உண்மையான பிரச்சினை வேலை முடிந்து திரும்பும்போது, எனக்குக் குளிக்க வெந்நீர் வைத்துத் தருவதற்கோ, காஃபி போட்டுக் கொடுப்பதற்கோ யாருமில்லாத கோபம். அதை மறைப்பதற்காகத்தான் காதல், பாதுகாப்பு என்றெல்லாம் உங்களைத் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறேன்!