Guest Gemini AI Image
அறிவோம்

நோக்கக் குழையும் விருந்து!

அதே நேரம் உங்கள் வீட்டுக்கு ஒரு வெளிநாட்டு விருந்தினர் வந்தால், இப்படிக் கணக்கு போட்டுவிடாதீர்கள். அவர்களுக்கு ’நோ என்றால் நோ, எஸ் என்றால் எஸ்’ என்று மட்டும்தான் தெரியும்.

ஆதி தாமிரா

உங்கள் வீட்டுக்கொரு நண்பர் வந்திருக்கிறார். அவரை வரவேற்று நாற்காலியில் அமர வைத்து வந்த காரியம் குறித்துப் பேச ஆரம்பிக்கிறீர்கள். கிச்சனிலிருந்த உங்கள் மனைவி வந்து அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, 

"காபி கொண்டுவர்றேன் சார்" என்று சொன்னதுக்கு,

"வேண்டாம்ங்க" என்கிறார் நண்பர்.

’நல்லதாகப் போச்சு’ என்று நினைத்தபடி உங்கள் மனைவி அவரது வேலையைப் பார்க்கப் போயிருந்தால் எப்படி இருந்திருக்கும்?

நல்லவேளையாக அவர், “பரவாயில்ல, கொண்டு வர்றேன் சார்” என்றதும்,
“இப்பதான் குடிச்சிட்டு வர்றேன் சிஸ்டர், வேண்டாம்” என்கிறார் மீண்டும்.
“அட, இன்னொண்ணுதான் குடிங்களேன்” என்று நீங்களும் களத்தில் இறங்குகிறீர்கள்.

“எதுக்குங்க அவங்களுக்கு சிரமம்?”

அவ்வளவுதான், இப்போது அவர் இறங்கி வந்துவிட்டார். அதாவது அவருக்கு காபி குடிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அது எங்கே உங்கள் மனைவியாருக்கு ஒரு சிரமத்தைத் தந்துவிடுமோ என்ற கவலையில்தான் இவ்வளவு நேரம் வேண்டாம் என்றிருக்கிறார். இப்படியான சூழலில் முதலிலேயே சரி என்று சொல்லாமல், அவர் மட்டுமல்ல நாமெல்லோருமே ஏனிப்படி கொஞ்ச நேரம் பிகு செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகிறது? 

தமிழ்ச் சமூகத்தின் விருந்தோம்பலில் ‘வேண்டாம்’ என்பது மறுப்பு அல்ல. அது ஒரு சடங்கின் தொடக்கம். நாம் உபசரித்ததும், முதலில் மறுப்பார்கள். அதற்கான காரணம், நான் ஒன்றும் பட்டினியாகச் சுற்றிக்கொண்டிருக்கும் வக்கற்றவன் இல்லை. எங்கள் வீட்டிலும் காபி இருக்கிறது அல்லது கடை,கண்ணியில் வடை, காபி சாப்பிடும் அளவுக்கு எனது பொருளாதாரம் வலுவாக இருக்கிறது என்ற அவரது கௌரவத்தை நிலை நாட்டும் செயல். நாம் இரண்டாவது முறை கேட்க வேண்டும். அப்போது அவர், ‘இப்போதான் குடிச்சேன்’, ‘பொதுவாக நான் டீ, காபி குடிப்பதில்லை’ என்று சமாதானம் சொல்லுவார். இதற்கான காரணம், அவரது கௌரவத்தை முதலில் நிலைநாட்டிவிட்டார். இப்போது உங்களது கௌரவத்தை நிலைநாட்டிட ஒரு வாய்ப்பு தருகிறார். அதாவது உங்கள் வீட்டில் காபி, பால், சர்க்கரை எல்லாம் இருக்கிறதா, உங்கள் பொருளாதார நிலைக்கு இதெல்லாம் கட்டுப்படியாகுமா? அது முடியாதென்றால், இப்போதாவது உபசரிப்பை முடித்துக்கொண்டு தப்பித்துக் கொள்ளுங்கள் என்று வாய்ப்புக் கொடுக்கிறார். அடுத்து மூன்றாவது முறையும் வற்புறுத்தியதும், ’எதுக்குங்க சிரமம், அரைக் கப் போதும்’ என்று சம்மதிக்கிறார். அரை கப்புக்கும், ஒரு கப்புக்கும் இடையே, காபி தயாரிக்கும் சிரமமும் பாதியாகக் குறைந்துவிடும் என்பது அவர் புரிந்து வைத்திருக்கும் எஞ்சினியரிங் கணக்கு. அதோடு இம்முறை, அவர் கௌரவம், உங்கள் கௌரவம் எல்லாம் காப்பாற்றப்பட்டு இருபுறமும் பரஸ்பர பொருளாதாரநிலை எல்லாம் சரிபார்க்கப்பட்டு இந்த காபி உபசரிப்பை நீங்கள் வழங்கவும், அவர் ஏற்கவும் ஒரு சுமுகமான நிலை ஏற்பட்டுவிட்டது.

அதே நேரம் உங்கள் வீட்டுக்கு ஒரு வெளிநாட்டு விருந்தினர் வந்தால், இப்படிக் கணக்கு போட்டுவிடாதீர்கள். அவர்களுக்கு ’நோ என்றால் நோ, எஸ் என்றால் எஸ்’ என்று மட்டும்தான் தெரியும். காபி குடிக்கமாட்டேன் எனும் ஒரு அமெரிக்கரை நீங்கள் மூன்று சுற்று வற்புறுத்தி, காபியைக் கையில் கொடுத்தால், அவர் அதைக் குடிப்பதற்கு முன்பே மனித உரிமை ஆணையத்திற்குப் புகார் கொடுக்கத் தயாராகிவிடுவார். 

இதைப் பார்த்து சிலர், "ஏனிந்தப் போலித்தனம்?" என்றும் கேட்கலாம். இதை முழுக்க போலித்தனம் என்றும் சொல்லிவிட முடியாது. நமது சமூகம் நேரடியான மறுப்புகளை விரும்புவதில்லை. உடனடியாக ஒப்புக்கொள்வதை நாம் நாகரிகமாகக் கருதுவதில்லை. போலவே விருந்தினர் தீர்க்கமாக கடைசிவரை மறுத்தால் அதுவும் நாகரிகமாக இருக்காது. அதனால்தான் யார் வீட்டுக்கும் வெறுங்கையோடு நாம் போவதில்லை. இந்தச் சடங்குகளுக்குப் பின்னால் ஒரு சின்ன அழகு இருக்கத்தான் செய்கிறது. 

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.   (குறள் - 90)

2000 ஆண்டுகளுக்கு முன்பே சக மனிதர்களின் உணர்வுகளை இத்தனை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு வாழ்ந்த நாகரிக சமூகம் நம்முடையது. அது உறவுகளைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை கொண்டது. உண்மையைச் சொல்வதை விட, யாருடைய மனமும் புண்படக்கூடாது என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. ‘வேண்டாம்’, ‘போதும்’ என்ற சொற்களுக்குள் இருக்கும் அமைதியும், தயக்கமும் சேர்த்துப் புரிந்துகொள்ளப்படுகிறது. இன்றைய இளைஞர்கள், ‘வேண்டாம் என்றால் வேண்டாம்தான்’ என்று நேரடியாகச் சொல்கிறார்கள். அல்லது சட்டென ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்கள். இதெல்லாம் மெல்லுணர்வுகளைத் தொலைக்கும் வழியாகவும் மாறிப்போய்விடலாம். அதோடு, சற்றே கண்களைப் பார்த்தாலும் அசலான தேவையை நாம் உணர்ந்துகொள்ள முடியும். உண்மையில், நாம் காபியைப் பரிமாறுவதில்லை. அன்பைப் பரிமாறுகிறோம். அதன் மூலம் உறவைப் பேணுகிறோம்.