Husband and Wife Chat GPT
அறிவோம்

ஆபத்துடனேயே வாழக் கற்றுக் கொள்கிறோமா? #GradualAcceptance

இதைப் படித்து, உங்களுக்குள் நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். விடையையும் உங்கள் சுற்றுவட்டாரத்தில் விவாதியுங்கள்!

ஆதி தாமிரா

ஒரு மனைவி அவரது கணவரின் சட்டைப் பையிலிருந்து ஒரே நாளில் ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டால் அது பிரச்சினையாகி பெரிய சண்டையில்தான் முடியும். அதன் சிக்கல் வெளிப்படையானது. ஆனால், அதே மனைவி, கணவரின் சட்டைப்பையிலிருந்து தினமும் பத்து ரூபாயை எடுத்தால் பல நாட்களுக்கு அது கணவருக்குத் தெரியாமலே கூட போகலாம், அது தெரியவந்தாலும் கூட கணவர் எதுவும் சொல்லப்போவதுமில்லை. இது கணவன் மனைவி என்றில்லை, இப்படி மெல்ல மெல்ல நிகழ்த்தப்படும் மாற்றங்களின் நிஜமான தாக்கத்தை எந்த மனிதரும் உணர்வதே இல்லை. 

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை ஒரே நாளில் 20% குறைத்துவிட்டால் பெரிய கிளர்ச்சி வெடிக்கும். ஆனால் சிறுசிறு சலுகைகளாக வெட்டிக்கொண்டே வந்தால், அது அவர்களுக்கு உரைக்கபோவதே இல்லை. ஒரு வருடத்துக்குப் பிறகு, அவர்கள் இழந்திருந்த உரிமைகளைப் பணமாக கணக்கிட்டுப் பார்த்தால் 25%-க்கும் அதிகமாக இருந்தாலும், அதை இயல்பாக அனைவரும் ஏற்றுக்கொண்டிருந்திருப்பார்கள். சிலர் அந்தக் கணக்கீட்டைப் பார்த்து இழப்பை உணர்ந்து கொண்டாலுமே, போராடத் தோன்றாது. இதற்குப் பெயர்தான் ’மெல்ல நிகழும் ஏற்பு’ (Gradual Acceptance) என்கிறார்கள். ஒரு பெரிய இழப்பை மனித மனம் எதிர்க்கும். ஆனால், அதே இழப்பு சிறு சிறு பகுதிகளாக வந்தால் அதற்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்கிறது.

இழப்பு மட்டுமல்ல, வெற்றிக்கும் இதே கருத்து பொருந்திப்போகிறது. மாதம் 50000 ரூபாய் விற்பனை இலக்கு என்று நிர்ணயித்து வேலை செய்யும் ஒரு சிறு வியாபாரி, 51000, 51500 என கொஞ்சம் கொஞ்சமாக விற்பனையைக் கூட்டிக்கொண்டே வந்தால், அதில் அவர் மகிழ்வதே இல்லை. ஒரு வருடத்தில், அவரது மாத விற்பனை இலக்கு 60000 ஆக மாறியிருந்தாலும், அதை அவர் வெற்றியாகக் கருதாமல், அதை இயல்பாக எடுத்துக்கொண்டு அடுத்தும் இயங்கத் தொடங்கிவிடுவார். யாரோ ஒரு புதிய பெரிய வாடிக்கையாளர் கிடைத்து 50000-லிருந்து 55000 ஆக திடுமென விற்பனை உயர்ந்தால் மட்டுமே அது அவருக்கு பெரும் வெற்றியாகத் தெரிந்திருக்கும், பெரிதும் மகிழ்ந்திருப்பார்.

Gradual Acceptance

இதுவேதான் அரசியலிலும் நடக்கிறது. மனிதர்களின் இந்த இயல்பான குணத்தைத்தான் உலகெங்கிலும், பிற்போக்குச் சக்திகளும், வல்லாதிக்கச் சக்திகளும், தங்களது அரசியல் நிலைப்பாடுகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் நிலை இருக்கிறது. ஒரு நாடு தம் மக்களுக்கான ஒரு ஜனநாயக உரிமையை ஒரே நாளில் ரத்து செய்தாலோ, ஒரு குறிப்பிட்ட வரியை பன்மடங்கு உயர்த்தினாலோ மக்கள் வீதிக்கு வந்துவிடுவார்கள். ஆனால், அதையே புதுமை, மாற்றம் எனும் பெயரில் வெவ்வேறு வடிவங்களில் மாற்றி மாற்றி இறுதியில் அவர்களது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டால் அது மக்களுக்கு உறைக்காது. உறைத்தாலும் ஒரு சாரார் புலம்பிக்கொண்டிருக்க, பெரும்பாலானோர் அந்தப் புதிய இழப்பையும் ஏற்றுக்கொண்டு வாழப் பழகிக் கொள்வார்கள். இன்னும் சொல்லப்போனால், அடுத்த தேர்தலில் இந்தக் காரியத்தைச் செய்தவர்களுக்கே வாக்களித்து மீண்டும் அதிகாரத்தை வழங்கவும் தயாராகிவிடுவார்கள். ஏனென்றால் மனித மனம் விசித்திரமானது. தான் ஏற்றுக்கொண்ட ஒரு அமைப்பு, தான் தேர்வு செய்த தலைவன், தான் ஆதரித்த கட்சி செய்த தவறுகளை ஒப்புக்கொள்வது, தன் தவறை ஒப்புக்கொள்வதாகிவிடும். மாறாக, ‘அவர் செய்ததற்குப் பின்னால் ஏதோ முக்கியமான காரணம் இருக்கும். தேசநலனுக்காக இதை நாம் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்’ என்று அந்தத் தவறுகளை நியாயப்படுத்துவதைத்தான் அது விரும்புகிறது. அதனால்தான் வரலாற்றில் பல மோசமான தலைவர்கள், தங்கள் ஆட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களிடம்கூட மீண்டும் மீண்டும் ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள். 

நல்ல ஆட்சியாளர்களுமே இங்கேதான் வீழ்கிறார்கள். எதிர்காலத்தைச் சிந்தித்து, ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தாலும்; உதாரணத்துக்கு ஒரு சாலைச்சந்திப்பில் போக்குவரத்து அதிகரிக்கலாம் எனும் கணிப்பில் ஒரு பெரும் பாலத்தை அமைக்க ஆவன செய்கிறார்கள் என்று கொள்வோம். அந்தப் பாலத்தைக் கட்டிமுடிக்க 2-3 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். கடைசியில் அது அவர்களின் சாதனையாக இருக்காது, அது அவர்களின் கடமையாகவே மாறியிருந்திருக்கும். ஒரே நாளில் ஒரு பாலத்தை அங்கே வைக்க  முடிந்தால் மட்டுமே அது மக்களின் பார்வையில் சாதனையாக ஏற்றுக்கொள்ளப்படும்! அதற்கு சூப்பர் மேனைத்தான் நாம் கூட்டிவர வேண்டியதிருக்கும்!

நல்லவர்களுக்கு தொடர்ந்து செயலாற்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும், மோசமானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடாது என்பது நம் விருப்பம். ஆனால், நமது இந்த கிராஜுவல் அக்செப்டன்ஸ் குணத்தினால், நல்லவர்களுக்கு வாய்ப்பு மறுக்கவும் படுகிறது. மோசமானவர்களுக்கு வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கவும் செய்கிறது. 

நம் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இது பொருந்துகிறது. நம் உடல்நலம் கெடுவது ஒரே நாளில் அல்ல, நம் உறவுகள் உடைவதும் ஒரே நாளில் அல்ல, நாம் தோல்விகளைத் தழுவுவதும் ஒரே நாளில் அல்ல. பெரும்பாலும் இவையெல்லாம் மெதுவாகவே நிகழ்கின்றன. அதனால்தான் திடீரென வரும் ஆபத்துகளைக் காட்டிலும், மெல்ல மெல்ல பழக்கப்படும் ஆபத்துகள் மிகவும் அபாயகரமானவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும், ஏனென்றால் முதல் வகையில் ஆபத்தை எதிர்க்கிறோம். இரண்டாவது வகையில் ஆபத்துடனேயே நாம் வாழக் கற்றுக்கொள்கிறோம். நாம் இழப்பதை விட, இழந்துவிட்டோம் என்பதையே உணராமல் இருப்பதுதான் பெரிய ஆபத்து!