அடிக்கடி இணையத்தில் கட்டுரைகளாகவும், ரீல்ஸ்களாகவும் பேசப்படும் இகிகாய் என்றால் என்னவென்பதைப் பற்றி நாம் தெரிந்திருப்போம். வாழ்வின் இலக்கை புரிந்துகொள்ள உதவும் ஒரு ஜப்பானியத் தத்துவம் அது. அது வைரலானதைத் தொடர்ந்து ஜப்பானிலிருந்து வாழ்வியல் குறித்த இன்னும் பல சிந்தனைகளை நமது ஆட்கள் இறக்குமதி செய்து இணையத்தில் உலவ விட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
முதலில், இதெல்லாம் இப்போது புதிதாக நடப்பவை அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பாக கணினியின் வரவால் நமது தொழிற்சாலைகள் நவீனமயமாகி, இந்திய வெளியுறவுக்கொள்கைகளால் உற்பத்திப் பெருக்கம் இங்கே வளர்ச்சியடைந்து கொண்டிருந்த காலகட்டங்களிலேயே ஆரம்பித்தவைதான்.
ஜப்பானியத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கைசென் (Kaizen - Continuous Improvement), போகா-யோகே (Poka-Yoke - Mistake Proofing), கான்பான் (Kanban - Visual Scheduling) போன்ற உற்பத்தியைப் பெருக்கி, அதே நேரம் தரமும் குறையாமல், செலவையும் குறைக்கும் பல நுட்பங்களை இந்தியத் தொழிற்சாலைகளும் பின்பற்றியாக வேண்டும் நிலை 1990களிலேயே ஏற்பட்டுவிட்டது. பிற நிறுவனங்களோடு போட்டி போடவும், வெளிநாட்டு கஸ்டமர்களை ஈர்க்கவும் இப்படியான ஏராளமான வழிமுறைகளைப் பின்பற்றின நமது தொழிற்சாலைகள். இப்போதும் இவை சற்று மேம்படுத்தப்பட்டும், புதிய பெயர்களிலும் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதன் தொடர்ச்சிதான் இன்றைய வாழ்வியல் தத்துவ இறக்குமதிகளும்! இதில் சில முக்கியமானவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.
வாபி-சாபி (Wabi-Sabi)
வாபி சாபி என்பதன் அடிப்படைப் பொருள், ’குறைபாடுகளில் உள்ள அழகைக் காண்பது’ மற்றும் ’இயற்கையான மாற்றங்களை அப்படியே ஏற்றுக்கொள்வது’. வாபி என்றால் ஆடம்பரங்கள் இல்லாத எளிய வாழ்க்கை. சாபி என்பது காலத்தால் கிடைக்கும் முதிர்ச்சி.
ஒரு பொருள் பயன்பாட்டிலிருந்தபடியே, மெல்ல மெல்ல பழமையடையும் போது, தேய்மானம் அடையும் போது அல்லது அதில் கீறல்கள், விரிசல்கள் விழும் போது அதற்கு ஒரு தனித்துவமான மதிப்பும், அழகும் கிடைக்கிறது. நம் வீடுகளில் நம் அம்மாக்கள் அனேக புதிய பொருட்களைப் பயன்ப்டுத்தினாலும், ஏதோ ஒரு பழைய பூஜைப்பொருளை, ஒரு பாத்திரத்தை, ஒரு பானையைப் பாதுகாத்துப் பயன்பாட்டிலும் வைத்திருப்பார்கள். அப்படியான புரிதல்தான் வாபி-சாபி என்பது.
வாபி-சாபியின் உட்பொருள் இங்கு எதுவும் நிரந்தரமில்லை (Nothing lasts). இயற்கையில் உள்ள அனைத்துமே ஒரு நாள் அழியக்கூடியவை அல்லது மாறக்கூடியவை. இந்த உலகத்தில் எந்த ஒரு விஷயமும் 100% முழுமையானது அல்ல (Nothing is finished). இங்கு எதுவும் குறையற்றதுமல்ல (Nothing is perfect), மனிதர்கள் உட்பட அனைத்திலும் ஏதோ ஒரு குறைபாடு இருக்கத்தான் செய்கிறது. இவையனைத்தையும் அப்படியப்படியே ஏற்றுக்கொள்வதுதான் முதிர்ச்சி!
செய்ரி- செய்டன் (Seiri - Sort / Seiton - Set in Order)
உங்கள் மேஜையில் 5 பேனாக்கள் இருக்கின்றன. அதில் 2 பேனாக்கள் எழுதுவதில்லை. ஒரு அவசரக் கையெழுத்துப் போட வேண்டும் எனும்போது, இந்த இரண்டு பேனாக்களும் ஊடாக வந்து, மாற்றி மாற்றி எடுத்து எழுதிப் பார்த்து நேரத்தை வீணடிப்பீர்கள். எழுதாத அந்த 2 பேனாக்கள் அங்கே எதற்காக இருக்கின்றன? அவற்றை அகற்றுவதுதான் செய்ரி. அவற்றை அகற்றிவிட்டீர்கள் என்று கொள்வோம். எழுதக்கூடிய பேனாக்களை வைக்க ஒரு பென்ஸ்டாண்ட் இல்லாமல் போனால், ஒவ்வொரு முறையும் அந்த 3 நல்ல பேனாக்களையும் மேஜையில் உள்ள புத்தகம் மற்றும் பிற பொருட்களுக்கு நடுவே, டிராயருக்குள்ளே என தேடித்தேடி எடுத்து எழுதிக்கொண்டிருப்பீர்களா? நேற்று கூட டிவி ரிமோட்டின் பேட்டரிகள் தீர்ந்துபோய்விட்டன. இந்த சந்தர்ப்பத்துக்காகத்தான் எக்ஸ்ட்ராவாக பேட்டரிகளை நாம் வாங்கி வைத்திருக்கிறோம். ஆனால், அவை எங்கே இருக்கின்றன என்றுதான் தெரியவில்லை! எங்கள் வீட்டிலிருக்கும் இரண்டு மேஜைகள், இரண்டு அலமாரிகளிலும் இதைப்போன்ற பொருட்களை வைப்பதற்கெனவே இடங்கள் இருக்கின்றன. அனைத்திலும் தேடி, எரிச்சலைடைந்த பின்னர்தான் அவை கிடைக்கின்றன. ஏனிந்தத் தேடல்? ஏனிந்த எரிச்சல்? இவற்றுக்கான விடைதான் இந்த செய்டன்.
இதன் அடிப்படை: ’எல்லாப் பொருட்களுக்கும் ஒரு இடம்; எல்லாப் பொருட்களும் அதனதன் இடத்தில்’ (A place for everything, and everything in its place). அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களைக் கைக்கு எட்டும் தூரத்திலும், எப்போதாவது பயன்படுத்தும் பொருட்களைக் கொஞ்சம் தள்ளியும் வைக்க வேண்டும். பொருட்களை வைக்கும் இடங்களுக்குத் துல்லியமாகப் பெயரிட வேண்டும், அடையாளப்படுத்த வேண்டும். இது நம் நேரத்தை சேமிக்கும். மனவுளைச்சலிலிருந்தும் நம்மைக் காக்கும்.
கைசென் (Kaizen- Continuous Improvement)
இதன் அடிப்படை, நாமும் நம் செயல்பாடுகளும், ’நேற்று இருந்ததை விட இன்று சிறிதளவாவது சிறப்பானதாக இருக்க வேண்டும்; இன்று இருப்பதை விட நாளை சற்று மேம்பட வேண்டும், சிறிய அளவிலான தொடர் மாற்றம், முன்னேற்றம் (Small, Incremental Changes)’ என்பதுதான். ஒரே நாளில் ஒரு பெரிய காரியத்தைச் செய்யத் திட்டமிடக்கூடாது, இறங்கவும் கூடாது. அது நம் உழைப்பு, நேரம், துல்லியம் என அனைத்தையும் வீணாக்கும். கூடவே அது நம்மை தோல்வியடையவும் வைக்கலாம். பதிலாக, தினமும் மிகச் சிறிய அளவில் வேலைகளைப் பகுத்துக்கொண்டு, எளிமையாகச் செய்ய வேண்டும்.
நாம் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஒரே மூச்சில் உட்கார்ந்துதான் எழுதுவேன் என்று உட்கார்ந்தால் உங்களுடைய ஒரு மாத இயல்பு வாழ்க்கை பாதிக்கும். வீட்டுக் காரியங்களில் மனைவிக்கு, பெற்றோருக்கு, பிள்ளைகளுக்கு ஒத்துழைக்க மாட்டீர்கள். நண்பர்கள், உறவினர்களின் சந்திப்புகள், விசேஷங்கள் தவிர்க்கப்படலாம். மனம் ஆரோக்கியமாக இருக்க அவசியப்படும் உணவு, உடற்பயிற்சி, உறக்கம் பாதிக்கப்படலாம். அதற்குப் பதிலாக, கைசென் முறைப்படி ’தினமும் இத்தனைப் பக்கங்கள் அல்லது தினமும் இத்தனை நிமிடங்கள் மட்டும் எழுதுவேன்’ என்று தொடங்க வேண்டும். இந்தச் சிறிய தொடர் பழக்கம் சற்று தாமதமானாலும் எந்த மன அழுத்தமுமின்றி, ஒரு தரமான பெரிய புத்தகமாக விரைவாகவே உருவெடுக்கும். ஒரே மூச்சில் உட்கார்ந்து எழுதப்படும் புத்தகத்தை விட நிச்சயமாக உள்ளடக்கத்திலும், தெளிவிலும் நிச்சம் அது மேம்பட்டிருக்கும்.
இறுதியாக, இவற்றையெல்லாம் நாம் ஜப்பானிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும்தான் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. நம் திருக்குறளில் இதே கருத்துகள் இன்னும் மேம்பட்ட சிந்தனை வடிவில் கிடைக்கின்றனதான். ஆனாலும், எப்போதும் சுயபெருமை, பழம்பெருமை பேசிக்கொண்டிருக்காமல், அறிவு எப்போது, எங்கிருந்து, எவ்வடிவில் வந்தாலும் அத்துடன் பொருதி, நம் ஆற்றலை மேம்படுத்திக்கொள்வதில் தவறில்லை.