Map  Gemini AI
அறிவோம்

கூகுளுக்கு முன், கூகுளுக்குப் பின்!

கூகுள் இல்லாமல் நமது ஒரு நாள் கூட கடந்து போவதில்லை. ஆனால், கூகுளே இல்லாத காலம் ஒன்று இருந்தது என்பதை இன்றைய தலைமுறையினரால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது போலிருக்கிறது.

ஆதி தாமிரா

இன்றைக்கு என் மேஜையின் கீழ் டிராயரில், இடம் சம்பந்தமான ஓர் ஆவணத்தைத் தேடிக்கொண்டிருந்த போது 20 வருடங்களுக்கு முன்னால் வாங்கிய ஓர் இந்தியா மேப் வெளியே வந்தது. அதைக் கண்ட பையன்,

‘என்னதுப்பா இது?’

‘என்ன கேள்வி இது? இந்தியா மேப்’

‘அது தெரியுது. இதெல்லாம் ஸ்கூல்லதானே வைச்சிருப்பாங்க, நம்மள மாதிரி பப்ளிக் வாங்குறதுக்கு இதெல்லாம் கிடைக்குமா என்ன?’ என்று கேட்டான். அடப்பாவிகளா! 20 வருடங்களுக்கு முன்னால் வட இந்தியாவில் சர்வீஸ் சைட்டுகளைச் சுற்றி வருவதற்கு ரயில் ரயிலாக ஏறி இறங்கிக் கொண்டிருந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. அப்போதெல்லாம் இப்படியான ஒரு மேப் இல்லாமல் பயணம் சாத்தியமே இல்லை. இன்று, மேப்பையெல்லாம் பொதுமக்கள் பயன்படுத்துவார்களா என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

’உருளைக்கிழங்கே இல்லாமல் உருளைக்கிழங்கு சீஸ் உருண்டை செய்வது எப்படி?’ என்ற கேள்வியில் ஆரம்பித்து, ’ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற, அமெரிக்க அதிபர் பிளேனையே பைபாஸ் செய்து, ஏஏ73 என்ற பிளேனை ஒரு பைலட் தரையிறக்கினாராமே, உண்மையா?’ என்ற உலகளாவிய கேள்விகள் வரை கூகுள் இல்லாமல் நமது ஒரு நாள் கூட கடந்து போவதில்லை. ஆனால், கூகுளே இல்லாத காலம் ஒன்று இருந்தது என்பதை இன்றைய தலைமுறையினரால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது போலிருக்கிறது. 

கூகுளுக்கு முன்னால்…

அட்ரஸ் தேடும் சாகசங்கள்

 பக்கத்து ஊரிலுள்ள ஒரு கல்யாண மண்டபத்திற்கு போக வேண்டும் என்றால் கூட, அந்த ஊருக்குப் போய் பைக் அல்லது காரை ஓரங்கட்டிவிட்டு, ரோட்டோர டீக்கடையில்தான் விசாரித்தாக வேண்டும். டீ மாஸ்டர் நல்ல மூடில் இருந்தால் உடனே பதில் சொல்வார். சிலரோ ரெண்டு டீ ஆர்டர் கொடுத்த பிறகுதான் வாயையே திறப்பார்கள், ’அப்படியே நேரா போனா... பெரிய வேப்பமரம் வரும், அங்கருந்து ரெண்டாவது லெப்ட் திரும்பி, அதுல மூணாவது ரைட்டு எடுங்க" என்று கையை நீட்டி காற்றில் படம் வரைந்து வழி சொல்வார். நாமும் டீயைக் குடித்துவிட்டு போய் சரியாக மூணாவது லெப்டில், ரெண்டாவது ரைட்டு திரும்பி மண்டபத்தைத் தேடிக்கொண்டிருப்போம். இப்போதெல்லாம் ஹெட்போனை மாட்டிக்கொண்டு, ’இன்னும் இருநூறு மீட்டரில் இடதுபுறம் திரும்பவும்’ எனும் கூகுள் அக்காவின் குரலை நம்பித்தான் போகிறோம், வருகிறோம். என்றைக்காவது அதன் பேச்சைக் கேட்டு, சுடுகாட்டுப் பாதையில் வண்டியை விட்டுக்கொண்டு லோல் பட்டால் ஒழிய மனிதர்களை நாம் தேடுவதே இல்லை.

யாரந்த வில்லன்?

முதல் நாளிரவு கோவில் வாசலில் திரைகட்டிப் போடப்பட்ட படத்தில் சிவாஜியைப் போட்டு புரட்டி எடுத்த வில்லன் யார், பிஎஸ் வீரப்பாவா, ஆர்எஸ் மனோகரா, என்பதில் நண்பர்களுக்குள் பெரிய விவாதம் நடக்கும். அப்போது உடனடியாக உண்மையைக் கண்டுபிடிக்க எந்த கூகுளும் கிடையாது. சண்டை போட்டு, அடிதடி வரை போய், கடைசியில் தீர்ப்பு சொல்ல ஊரில் இருக்கும் யாராவது 'விவரமான' பெரியவரைத்தான் தேடிப் போக வேண்டும். அவரோ யாரும் எதிர்பாரா வண்ணம், ’அவர்தாண்டா எஸ்வி ராமதாஸ்! நம்ம கோயில்ல கூட ஒரு தடவை பக்த குசலா நாடகம் போட்டாரே’ என்று தீர்ப்பு சொல்லுவார். அது உண்மையா என்பதை நாம் தெரிந்துகொள்ள அடுத்த ஆண்டு கோவில்கொடை வரை காத்திருக்க வேண்டும். நிச்சயம் அடுத்த ஆண்டும் அதே படத்தைப் போடுவார்கள் என்று வேண்டுமானால் உறுதியாக நம்பலாம்.

Library

கட்டுரைப்போட்டி

பள்ளி, கல்லூரிகளில் இப்போது போல பெரிய ப்ராஜெக்ட் வேலைகளெல்லாம் இருக்காது. அதிக பட்சமாக ‘பசுமைப் புரட்சி பற்றி பத்து பக்கங்களுக்கு கட்டுரை வரை’யச் சொல்லுவார்கள். அப்பாவிடம் கேட்கப்பயந்து, சித்தப்பாவைக் கேட்டால், பசுமைப் புரட்சி என்றால் பச்சையாக இருக்குமா என்று கேட்பார் அவர். அன்றைக்கு சட்டுப்புட்டென 'காப்பி-பேஸ்ட்' செய்ய விக்கிப்பீடியாவெல்லாம் கிடையாது. ஊர் நூலகத்திற்கு சென்று, இருக்கும் 6 ரேக்குகளையும் புரட்டிப்போட்டு தடித்தடியானப் புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்து, நாக்குத்தள்ள கையால் எழுதிக்கொள்ள வேண்டும். அந்தப் புத்தகத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு படம் தேவைப்பட்டால், அதை நூலகருக்குத் தெரியாமல் பிளேடால் வெட்டி எடுத்துப்போகும் 'திருட்டு' வேலைகளைச் செய்யவும் தெரியவேண்டும். நூலகர்கள் இதில் அனுபவப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதால், சிக்கினால் சின்னாபின்னமாக்கி விடுவார்கள், அது தனி.

நினைவாற்றல்

அம்மா, அப்பா, நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என குறைந்தது 20 போன் நம்பர்களாவது நம் மூளையிலேயே 'சேவ்' ஆகியிருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் டெலிபோனுக்கு பக்கத்தில் ஒரு குட்டி டைரி இருக்கும். அதில் எந்த ஒழுங்கிலுமில்லாமல் குறுக்கெழுத்துப்போட்டி மாதிரி ஆயிரம் நம்பர்கள் எழுதப்பட்டிருக்கும். பெயரும் இருக்காது. எது யாருடைய நம்பர் என்று அம்மா மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். சமீபத்தில் ஒருநாள் நண்பரோடு ஒரு விடுதி அறையில் தங்க வேண்டிவந்தபோது, பதிந்துகொள்வதற்காக ரிசப்ஷனிஸ்ட் எனது போன் நம்பர் கேட்டார். பக்கத்திலிருந்த நண்பரிடம்தான் என் நம்பரைக் கேட்டுச் சொன்னேன். நல்ல முன்னேற்றம்தான் அல்லவா? 

ஸ்பெல்லிங் சிக்கல்

அலுவலகக் கடிதம் எழுதும் போது ஸ்பெல்லிங் செக் செய்ய கூகுள் கிடையாது. ஒரு கடினமான ஆங்கில வார்த்தைக்கு ஸ்பெல்லிங் தெரியவில்லை என்றால், அலுவலக ஷெல்ஃபில் இருக்கும் டிக்‌ஷனரியைத்தான் புரட்ட வேண்டும். அல்லது ஒரு அலுவலகத்துக்கு ஒரு ஆங்கில எக்ஸ்பர்ட்டாவது இருப்பார்கள். அவரிடம் போய்த்தான் தொங்க வேண்டும். அவரில்லாத ஒரு நாளில் ஒபீடியண்ட்லிக்கு ஸ்பெல்லிங் சந்தேகம் வந்து அவசரத்துக்கு பக்கத்தில் இருப்பவனிடம் கேட்டால், அவன் Obeediently என்று ஒரு ஸ்பெல்லிங்கைச் சொல்லுவான். பயந்து போய், அதை ட்ரூலி என்று எளிமைப் படுத்தி, கடிதத்தை முடிக்க வேண்டியிருக்கும். இன்றைக்கெல்லாம் ஸ்பெல்லிங் மட்டுமல்ல, கடிதம் குறித்தே எந்தக் கவலையும் நமக்குக் கிடையாது. ‘அறைநால் leave வேணும். என் மேனேஜருக்கு oru letter eluthu’ என்று சொன்னால் கூட... //I have aligned my urgent tasks for the day, and [Colleague's Name] has kindly agreed to cover for me if anything urgent comes up while I am away. I will also be reachable on my mobile if needed.// என்று காரண காரியங்களோடு சிறப்பாக எழுதிக் கொடுத்துவிடுகிறது ஜெமினி. 

இப்படி இன்னும் நூறு சுவாரசியங்களை அடுக்கிக்கொண்டே போகமுடியும். கூகுள் நம் வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. உலகத்தையே நம் உள்ளங்கைக்குள் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. ஆனால், இவற்றுக்காகவெல்லாம் அன்று நாம் சக மனிதர்களோடு போராடிக் கொண்டிருந்ததில் இருந்த உயிரோட்டத்தையும், சுவாரசியத்தையும் கேட்டால், கூகுளால் அதைத் தேடிக் கொண்டுவந்து நம்மிடம் தந்துவிட முடியாது! இப்படி கூகுள் மிச்சப்படுத்தித் தந்த நேரத்தையும், ஆற்றலையும் நாம் எங்கே முதலீடு செய்கிறோம் என்பதுதான் அடுத்தக் கேள்வி. கூகுள் உலகின் அத்தனைத் தகவல்களையும் தரும் நேரத்தில், அதற்குத் தெரியாத நம் குடும்பத்தின் கதையை, தாத்தனின், பாட்டியின் கதையை, நம் தனித்துவத்தைத் தெரிந்துகொள்ள தந்தை, தாயோடு பேசலாம். அத்தையோடும், சித்தப்பனோடும் பேசலாம். நண்பர்களை, அவர்களின் சுக துக்கங்களைப் புரிந்துகொள்ள நேரம் செலவிடலாம். உள்ளூர் சமூகச் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாம். தகவல்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் வேலையை தொழில்நுட்பத்திடம் ஒப்படைத்துவிட்டு, மனிதர்களோடு உறவை மேம்படுத்தும் வேலையை நாமே தொடர்ந்தால், அதுதான் இந்த தொழில்நுட்ப யுகத்தின் மிகப்பெரிய சமநிலையாக இருக்கும்.