Muhammad Ali VS Sonny Liston 
அறிவோம்

சொல்லியடித்த முகமது அலி! #What’s_my_name? #MuhammadAli

தொடரில் அந்த நிகழ்வு, ‘நான் யார்?’ (Who Am I?) என்று தவறாகக் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் அது என்ன நிகழ்வு, அதன் பின்னணி என்ன என்றொரு ஆர்வம் நமக்கெல்லாம் ஏற்படுகிறதல்லவா?

ஆதி தாமிரா

'வாரண்ட்' வெப்தொடரில், அவமானப்பட்டு நிற்கும் ஹீரோவைத் தேற்றுவதற்காக அவனது அப்பா, உலகப் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர் முகமது அலியின் (Muhammad Ali) வாழ்வில் நடந்த ’என் பெயர் என்ன?’ எனும் நிகழ்வு ஒன்றைச் சொல்கிறார். தொடரில் அந்த நிகழ்வு, ‘நான் யார்?’ (Who Am I?) என்று தவறாகக் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் அது என்ன நிகழ்வு, அதன் பின்னணி என்ன என்றொரு ஆர்வம் நமக்கெல்லாம் ஏற்படுகிறதல்லவா?

 1942-ல் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் ஒரு சாதாரண கறுப்பினக் குடும்பத்தில் பிறந்தார் முகமது அலி. அவருக்கு இடப்பட்ட இயற்பெயர்  ’கேசியஸ் மார்செலஸ் கிளே’ (Cassius Marcellus Clay). அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் நிலவிய கடுமையான இனவெறியும், நிறவெறியும் அவரது சிறுவயதிலேயே மனதை ஆழமாகக் காயப்படுத்தின. பன்னிரண்டு வயதில் அவரது சைக்கிள் திருடப்பட்டபோது, அந்தத் திருடனை உதைக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் குத்துச்சண்டை பழகத் தொடங்கியதாக ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார்.

 அந்தக் குத்துச்சண்டைப் பழக்கம்தான் அவரை, 1960 ரோம் ஒலிம்பிக் வரை கூட்டிச்சென்று தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தது. தங்கம் வென்று பெருமையோடு நாட்டிற்குத் திரும்பிய அவருக்குக் கிடைத்தது என்னவோ அவமரியாதைதான். அந்த நிலையிலும் கூட கறுப்பினத்தவர் என்ற காரணத்தால் அவருக்கு அமெரிக்க உணவகங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. அந்த இனவெறிக்கு எதிரான கோபமும், தன் சுயமரியாதையை மீட்கும் தேடலும் அவரை இஸ்லாம் மதத்தை நோக்கி ஈர்த்தன. அப்போது அடிமைத்தனத்தின் அடையாளமாக கருப்பர்களின் பெயர்களோடு, அவர்களின் வெள்ளை முதலாளிகளின் பெயர்கள் ஒட்டிக்கொண்டிருந்தன. இந்தத் தருணத்தில்தான் அந்த ஏற்பாட்டை வெறுத்து 'கேசியஸ் மார்செலஸ் கிளே' என்ற தனது பெயரைத் துறந்து, 'முகமது அலி' என்று தன் பெயரை உலகுக்கு அறிவித்தார்.

 ஒரு குத்துச்சண்டை வீரராக அவரது பாணி புதுமையாக இருந்தது. குத்துச் சண்டை வளையத்திற்குள் ஒரு பட்டாம்பூச்சியைப் போல நகர வேண்டும், தேனீயைப் போலக் கொட்ட வேண்டும் (Float like a Butterfly, Sting like a Bee) என்பது அவருடைய புகழ்பெற்ற வாக்கியம். அவரும் அப்படியே இருந்தார். அதுவரை குத்துச்சண்டை உலகம் பார்த்திராத வேகமும், தந்திரமும் அவரிடம் இருந்தன.  1964-ல் சோனி லிஸ்டனை வீழ்த்தி உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றார். அவரது ஆட்டம் எப்போதும் நேர்மையானதாகவும், எதிராளியின் பலத்தை மதித்துத் தன் திறமையால் மட்டுமே வெல்லக்கூடியதாகவும் இருந்தது.

 ஆனால், அலியின் வாழ்க்கையில் 'அரசியல்' நுழைந்த தருணம் 1967-ஏப்ரலில் வந்தது. அமெரிக்க அரசு, வியட்நாம் போருக்காக ஆட்களைத் திரட்டியபோது, ராணுவத்தில் சேர்ந்து அந்தப் போரில் பங்குகொள்ள முகமது அலி மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்தான் உலகப்புகழ் பெற்றது. ’வியட்நாமியர்கள் என்னை ஒருபோதும் 'கறுப்பனே' (Nigger) என்று இழிவாக அழைத்ததில்லை. எனக்கெதிரான உண்மையான எதிரிகள் என் சொந்த நாட்டில்தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில், எளிய மனிதர்களைக் கொல்ல நான் ஏன் அங்கு செல்ல வேண்டும்?’ – அலியின் இந்த அரசியல் முழக்கம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதன் விளைவாக, அமெரிக்க அரசு அவரது உலகச் சாம்பியன் பட்டத்தைப் பறித்தது; ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது; குத்துச்சண்டை விளையாடத் தடையும் விதித்தது. சிறைத்தண்டனை மேல்முறையீட்டால் தவிர்க்கப்பட்டது என்றாலும், பிறவற்றைத் தான் கொண்ட கொள்கைக்காக ஏற்றுக்கொண்டார் முகமது அலி.

 முன்னதாக, 1967 பிப்ரவரியில்தான், அவரது வாழ்க்கையில் மறக்கமுடியாத அந்த குத்துச் சண்டை ஆட்டம் நடந்தது. எர்னி டெர்ரல் (Ernie Terrell) எனும் குத்துச்சண்டை வீரருடன் நடைபெற்ற ஆட்டம்தான் ‘What’s my name?’ என்று அலி கொதித்தெழுந்த ஆட்டம். ஆட்டத்துக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் டெர்ரல், அலியை, ’கேசியஸ் கிளே’ எனும் அவரது முந்தைய பெயரில் குறிப்பிடுகிறார். மறதியால் அல்ல, வேண்டுமென்றே - என்ன இருந்தாலும் ஒரு அடிமையாக இருந்தவர்தானே என்று குறிப்பிடும்விதமாக - அவரை இழிவு படுத்துவதற்காக!

முகமது அலி, கோபமாகக் குறுக்கிட்டு "என்னை எல்லாரும் முகமது அலி என்றே குறிப்பிடுகிறார்கள். நீ மட்டும் ஏன் கேசியஸ் க்ளே என்ற பழைய பெயரைச் சொல்கிறாய்?" என்று சொல்லியும் டெர்ரல் அதை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே குறிப்பிட்டார். ’உனக்கு என் பெயர் என்னவென்று இன்றைய ஆட்டத்தில் தெரியவைக்கிறேன்’ என்று சூளுரைத்துவிட்டு வளையத்துக்குள் சென்றார் அலி. வழக்கமாக 2-3 ரவுண்டுகளில் எதிராளிகளை நாக் அவுட் செய்து வீழ்த்திவிடும் அலி, அன்று அந்த ஆட்டத்தை 15 ரவுண்ட் வரை கொண்டு சென்றார். டெர்ரலை அவர் தாக்கினார், ஆனால் வீழ்த்தவில்லை. ஒவ்வொரு ரவுண்டிலும், டெர்ரலிடம் ‘What’s My Name?’ என்று கேட்டுக் கேட்டுத் தாக்கினார். அது நிறவெறிக்கு எதிரான வலியை, அடையாளத்தைத் தாங்கி நிற்கும் சொற்களாக இன்றும் நம்மிடையே ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

 நீண்ட தடைக்குப் பிறகு மீண்டும் களம் திரும்பிய அலி, 1974-ல் ஜைர் நாட்டில் (Zaire) நடந்த 'Rumble in the Jungle' என்ற வரலாற்றுப் புகழ்பெற்ற ஆட்டத்தில், தன்னை விட இளம் வயதான, அசுர பலம் கொண்ட ஜார்ஜ் ஃபோர்மேனை (George Foreman) எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அலி ஃபோர்மேனைத் திருப்பித் தாக்காமல், வளையத்தின் கயிறுகளில் சாய்ந்து கொண்டு, எதிராளியின் அத்தனை குத்துகளையும் தன் உடலால் வாங்கிக் கொண்டார். ஃபோர்மேனின் அசுர பலத்தை நேரடியாக எதிர்கொள்வது தற்கொலைக்குச் சமம் என்பதை அலி அறிந்திருந்தார். எனவே, எதிராளியைத் தொடர்ந்து குத்தவிட்டு, அவரது ஆற்றலை முழுமையாக வற்றச் செய்வதே அலியின் தந்திரமாக இருந்தது. 8-வது சுற்றில் ஃபோர்மேன் முற்றிலும் களைப்படைந்து போன சமயம் பார்த்து, அலி மின்னல் வேகத்தில் தாக்கி அவரை 'நாக்-அவுட்' செய்தார். இதில் அலி கையாண்ட 'Rope-a-Dope' என்ற டெக்னிக்கை சிலர் சரியானதல்ல என்று விமர்சித்தார்கள். ஆனால், பின்னாளில் அதே ஜார்ஜ் ஃபோர்மேன் சொன்னது இது:

 ‘அந்த ஆட்டத்தில், முகமது அலியின் சிறந்த குத்து கடைசி வரை விழவே இல்லை’ (Probably the best punch of the match was never landed)

அவர்தான் முகமது அலி!

பொதுவாக விளையாட்டு வீரர்கள் பலரும், கடைசி வரை வீரர்களாக மட்டுமே இருந்துவிடுகிறார்கள், ஒரு சிலரால்தான் சம காலத்தின் மனசாட்சியாக மாற முடிகிறது. அலி அப்படியான ஒருவர்!