நண்பர்களுடன் வளவளவென பேசிக்கொண்டே வந்து லிப்டில் ஏறினாலும், அதனுள் நுழைந்ததும் சட்டென நமது பேச்சை நிறுத்திக்கொள்கிறோம். மீண்டும், அதிலிருந்து வெளியேறிய பின்னர்தான் பேச்சைத் தொடர முடிகிறது. லிப்டுக்குள் நம்மை இயல்பாக பேச விடாமல் தடுப்பது எது? அதன் பின்னணி உளவியல் என்ன? உலகின் விசித்திரமான மௌனங்களில் ஒன்றாக இந்த ’லிப்ட் மௌனம்’ (Elevator Silence) குறிப்பிடப்படுகிறது. நவீன நகரமயமாக்கப்பட்ட உலகில் ‘லிப்ட்’ (Elevator) என்பது நம் வாழ்க்கையின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், விடுதிகள், வணிக வளாகங்கள் என எங்கு சென்றாலும் லிப்டை நாம் பயன்படுத்துகிறோம். லிப்டோடு நாம் இத்தனைப் பழகிய பின்னரும் இது தொடர்வது ஏன்?
தனிப்பட்ட எல்லைமீறல்
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ‘தனிப்பட்ட எல்லை’ (Personal Space) என்று ஒன்று இருக்கிறது. பொதுவாக அறிமுகமில்லாதவர்கள் நமக்கு மிக அருகில் வருவதையோ, தொடுவதையோ நம் மனம் விரும்புவதில்லை. ஒரு சிறிய சதுர வடிவ லிப்டுக்குள் செல்லும்போது, வேறு வழியின்றி நாம் அடுத்தவருக்கு மிக அருகில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அங்கே அந்த இருவரின் ‘தனிப்பட்ட எல்லை’களும் மீறப்படும்போது, நம் மூளை அதை ஒரு லேசான அச்சுறுத்தலாகவோ அல்லது சங்கடமாகவோ உணர்கிறது. அந்த அசௌகரியத்தைத் தவிர்ப்பதற்காகவும், பிறருக்கு நாம் அச்சுறுத்தலாக இல்லை என்பதைக் காட்டுவதற்காகவும் மனிதர்கள் மௌனமாகிவிடுகிறார்கள். போலவே, அறிமுகமில்லாத ஒருவரை லிப்ட் போன்ற சிறிய இடத்தில் உற்றுப் பார்ப்பது நாகரிகமற்றதொரு செயல். இதனால்தான் லிப்டுக்குள் நுழைந்தவுடன் எங்கே பார்ப்பது என்று புரியாமல், நம் கைகளில் இருக்கும் வாட்சையோ, லிப்டின் கண்ட்ரோல் பேனலையோ, நமது காலணிகளையோ அல்லது கையில் இருக்கும் மொபைல் போனையோ தீவிரமாகவும், அர்த்தமற்றும் பார்க்கத் தொடங்கிவிடுகிறோம்.
நாகரிகத் தவிர்ப்பு
சமூகவியலில் ‘நாகரிக தவிர்ப்பு’ (Civil Inattention) என்றொரு கோட்பாடு உண்டு. அதாவது, ’நான் உங்களுக்கு அருகில் உள்ளேன், ஆனால் உங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளித்து உங்களைத் தொந்தரவு செய்யாமல் விலகி இருக்கிறேன்’ என்பதைச் சொல்லாமல் சொல்வது. லிப்டில் இருக்கும் அனைவரும் இந்த விதியைக் கடைப்பிடிப்பதால், அங்கு ஒரு பொதுவான மௌனம் நிலவுகிறது. லிப்ட் பயணம் என்பது சில நொடிகள் அல்லது அதிகபட்சம் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நீடிக்கக்கூடியது. இவ்வளவு குறுகிய நேரத்தில் ஒரு புதிய உரையாடலைத் தொடங்கி, அதை எங்கு முடிப்பது என்ற தயக்கம் எல்லோருக்கும் இருக்கும். ’ஹலோ’ என்று சொல்லி முடிப்பதற்குள் நம் தளம் வந்துவிட்டால், எனும் சந்தேகத்தில், பேசாமல் இருப்பதே உத்தமம் எனப் பலரும் நினைக்கிறார்கள்.
ஒட்டுக்கேட்புத் தயக்கம்
லிப்ட் ஒரு மூடிய சிறிய அறை என்பதால், நாம் மிக மெதுவாகப் பேசினால் கூட அது அங்குள்ள அனைவருக்கும் தெளிவாகக் கேட்கும். நம்முடைய தனிப்பட்ட விஷயங்களை அல்லது அலுவலகக் கதைகளை அடுத்தவர்கள் கேட்பதை நாம் விரும்புவதில்லை. அதேபோல, அடுத்தவர்கள் பேசுவதைக் கேட்கும் கட்டாயத்திற்கு நாம் உள்ளாவதையும் விரும்புவதில்லை. இந்த ‘ஒட்டுக் கேட்கும்’ சூழலைத் தவிர்க்கவே அனைவரும் அமைதியைக் கடைப்பிடிக்கின்றனர்.
லிப்டில் நிலவும் மௌனம் என்பது வெறுமனே பயமோ அல்லது ஈகோவோ அல்ல; அது மனிதர்கள் தங்களுக்குள்ளும், சமூகத்தோடும் ஏற்படுத்திக்கொண்ட ஒரு நுட்பமான தற்காப்புப் பழக்கம். அதில் எந்தத் தவறுமில்லை. அடுத்த முறை நீங்கள் லிப்டில் ஏறும்போது, உடனிருப்பவரைப் பார்த்து ஒரு சிறிய புன்னகையை உதிர்த்துப் பாருங்களேன்... அந்த மௌன அறை சற்றே இதமாக மாறலாம்!