Comman Man Gemini AI
அறிவோம்

"ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்…" - இந்தப் போக்கு சரியா?

நாம் காலையில் வாங்கும் ஒரு பாக்கெட் பாலில் தொடங்கி, இரவில் படுக்கையில் விழும்போது போட்டுக்கொள்ளும் மின்விசிறி ஓடுவதற்குத் தேவையான மின்சாரம் வரை எல்லாவற்றிலும் அரசாங்கத்தின் கொள்கைகள் கலந்திருக்கின்றன.

ஆதி தாமிரா

’யாரு ஆண்டா நமக்கென்ன? நாம உழைச்சாதான் நமக்கு சோறு! போய்ப் பொழைப்பைப் பாருங்கடா’ — என்று சிலர் சொல்வதை எப்போதும் நாம் கேட்க முடியும். தேநீர்க் கடைகளிலும், பேருந்துப் பயணங்களிலும் பேசும் சாமானிய மக்கள் மட்டுமல்லாது, படித்த, பெரிய வேலைகளில் இருப்போரும் கூட இப்படிச் சொல்வதைக் கேட்கலாம். மேலோட்டமாகப் பார்த்தால் இது எதார்த்தமான, உழைப்பை மட்டுமே நம்பி வாழும் ஒரு மனிதனின் குரலாகத் தோன்றலாம். ஆனால், சற்று சிந்தித்துப் பார்த்தால், இந்த வரிகளுக்குப் பின்னால் இருக்கும் ஆபத்தான, அபத்தமான அரசியல் அறியாமையை உணரமுடியும்.

நமது உழைப்பு மட்டுமே நம் வயிற்றை நிரப்பிவிடுவதில்லை; நமது தேவைகளைப் பூர்த்தி செய்துவிடுவதில்லை. அந்த உழைப்பிற்கான சூழலையும், வாய்ப்பையும் உருவாக்கிக்கொடுத்து, அதன் பலனையும் வரையறை செய்வது வரை எல்லாமே நாம் தேர்ந்தெடுக்கும் ஆட்சிதான் செய்கிறது. நம்மை ஆள்பவர்தான் அவற்றையெல்லாம் தீர்மானிக்கிறார். ’நாம் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம், சாப்பிடுகிறோம்; இதில் அரசாங்கத்திற்கு என்ன பங்கு இருக்கிறது?’ என்பது கேள்வி. ஆனால், நாம் காலையில் வாங்கும் ஒரு பாக்கெட் பாலில் தொடங்கி, இரவில் படுக்கையில் விழும்போது போட்டுக்கொள்ளும் மின்விசிறி ஓடுவதற்குத் தேவையான மின்சாரம் வரை எல்லாவற்றிலும் அரசாங்கத்தின் கொள்கைகள் கலந்திருக்கின்றன.

நீங்கள் நாள் முழுவதும் கடுமையாக உழைத்து 1000 ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஒரு டீயின் விலை 10 ரூபாய். அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளாலோ அல்லது வரிகளாலோ பெட்ரோல், டீசல், கேஸ் போன்றவற்றின் விலையுயர்வு ஏற்படுகிறது. அதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தால், உங்களின் 1000 ரூபாயின் மதிப்பு தன்னாலேயே குறைந்து போய்விடும். அப்போது, ஒரு டீயின் விலை 12 ரூபாய் ஆகியிருக்கும். உங்களால் சமாளிக்க முடியாது. நீங்கள் ஒரு தினக்கூலியாக இருந்தால், நீங்களாகவே உங்கள் கூலியை 1100 என உயர்த்திக்கொள்ள முடியாது. ஏனென்றால், உங்களின் அதே வேலையை பழைய கூலியில் செய்ய இன்னொரு ஆள் தயாராக இருப்பான். வடக்கிலிருந்து வரும் நம் சகோதரனின் சிரமம் இன்னும் அதிகம், அதனால் அவன் அதை இன்னும் குறைவான கூலிக்கே செய்ய முன்வருவான். ஒரு கூட்டு மனநிலை உருவாகி, உங்கள் கூலி 1100 ஆக மாறும் வரை நீங்கள் காத்திருந்துதான் ஆகவேண்டும், அது உங்கள் கையில் இல்லை! 

போலவே, நீங்கள் அலுவலகம் செல்பவராக இருந்தால், உங்களது அடுத்த சம்பள உயர்வுக்கு அடுத்த மார்ச் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை உங்களுக்கான டீயின் விலை 12 ரூபாய்தான். பல்லைக் கடித்துக்கொண்டு அடுத்த மார்ச்சில் 10% சம்பள உயர்வை அடைகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த இடத்தில், 10% உயர்வு என்றால் நீங்கள் அந்த ஆண்டு முழுதும் எத்தனைக் கடினமாக உழைத்து அதை அடைந்திருக்க வேண்டும் என்று சற்றே சிந்தித்துக் கொள்ளுங்கள். சரி அடைந்தாயிற்று என்று மகிழ்ச்சியாக டீ குடிக்க வந்தால், அப்போது அதன் விலை 15 ரூபாயாக மாறியிருக்கும். உங்கள் உழைப்புக்கான பலன் அவ்வளவுதான். எவ்வளவுதான் உழைத்தாலும், 'யார் ஆள்கிறார்கள்' என்பதுதான் உங்கள் தட்டில் இருக்கும் உணவின் அளவைத் தீர்மானிக்கிறது.

Impact of Politics in our daily life

அடுத்தது உரிமைகள்! ஒரு தொழிலாளிக்கு எட்டு மணி நேர வேலை, குறைந்த பட்ச ஊதியம், வார விடுமுறை, மருத்துவக் காப்பீடு போன்ற உரிமைகளுக்குப் பின்னாலிருக்கும் வரலாறு எல்லாம் இந்த, ‘ராமன் ஆண்டாலும்…’ ஆட்களுக்கு நிச்சயம் தெரியாது. இதெல்லாம் இயல்பாகவே எப்படி இருந்திருக்க வேண்டுமோ, அப்படித்தானே இருக்கிறது, அதிலென்ன வரலாறு என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அது எதுவுமே இயல்புமில்லை, அவை நமக்குச் சும்மாவும் கிடைத்துவிடவில்லை. நூறாண்டுகளுக்கு முன்னால் கூட ஒரு வேளை உணவுக்காகவும், சொற்ப ஊதியத்துக்காகவும் நேரம், காலமில்லாமல் வயல்வெளிகளிலும், தொழிற்சாலைகளிலும் 14-16 மணி நேரக் கூலிகளாக, அடிமைகளாக மக்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அதையெல்லாம் மாற்றிட ஒரு கார்ல் மார்க்ஸ்தான் பிறந்து வர வேண்டியிருந்தது. அதன்பின் எத்தனையோ பேர் தம் ரத்தத்தையும், உயிரையும் ஈந்து, இந்தக் குறைந்தபட்ச உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். இப்போதும், நாம் அமைக்கும் சட்ட மன்றங்களும், நாடாளுமன்றங்களும், அங்கே இயற்றப்பட்ட சட்டங்களும்தான் அவற்றையெல்லாம் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர் நலனைப் புறக்கணிக்கும் ஒரு ஆட்சி அமைந்துவிட்டால், அவையெல்லாம் என்னவாகும் என்று சொல்லமுடியாது. அவற்றுக்கு எதிராக உழைப்பால் மட்டுமே நம்மை நம்மால் பாதுகாத்துக் கொள்ளவெல்லாம் முடியாது.

அடுத்து வரிகள் (Taxes). தாங்கள்தான் மறைமுகமாக இந்த நாட்டின் மிகப்பெரிய முதலீட்டாளர்கள் என்பதையும் ’ராமன் ஆண்டாலும்’ ஆட்கள் உணர்வதில்லை. லட்சங்களில் சம்பளம் பெறும் தனிநபர்கள் கட்டும் வருமான வரியிலும், நிறுவனங்கள் கட்டும் வருமான வரியிலும்தான் இந்த நாடு நடப்பதாக ஒரு எண்ணம் நம்மில் பலருக்குமே கூட இருக்கிறது. ஆனால், இந்த நாட்டில் வாழும் ஒரு ஏழைத் தொழிலாளியும், தான் வாங்கும் ஒரு சோப்புக்கும், தீப்பெட்டிக்கும் கூட 'ஜிஎஸ்டி' (GST) என்ற பெயரில் வரி செலுத்துகிறான். நாட்டின் ஒட்டுமொத்த கஜானாவும் சாமானியர்களிடமிருந்து இப்படிப் பெறப்படும் மறைமுக வரியால் தான் நிரம்புகிறது. இப்படி நாம் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தில் அரசுக்கு வரி செலுத்தும் போது, பொறுப்பற்று விலகி நிற்பது, நம் பணத்தில் நடக்கும் நிர்வாகத்தை நாமே கவனிக்காமல் விடுவதைப் போன்றது. 

கடைசியாக உழைப்பு மட்டுமே எல்லாவற்றையும் தந்துவிடாது என்பதற்கு இன்னொரு மிகச்சிறந்த உதாரணம் கல்வி மற்றும் பொது மருத்துவம். ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தை அரசுப் பள்ளியிலோ, கல்லூரியிலோ படித்துப் பெரிய நிலைக்கு வருகிறதென்றால், அதற்குப் பின்னால் கல்விக்காகக் கொண்டுவரப்பட்ட அரசாங்கத் திட்டங்களும், உதவித்தொகைகளும் இருக்கின்றன. ஏழை எளிய மக்கள் தங்களின் உழைப்பைக் கொண்டு மட்டுமே தனியார் மருத்துவமனைகளின் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சிகிச்சைகளை எதிர்கொள்ள முடியாது. தரமான அரசு மருத்துவமனைகளும், இலவச மருத்துவக் காப்பீடுகளும் அங்கே அரணாக நின்று நம்மைக் காக்கின்றன. இவை அனைத்தும் ’யார் நம்மை ஆள வேண்டும்’ என்பதை மக்கள் சரியாகத் தீர்மானிக்கும் போது மட்டுமே தடையின்றிக் கிடைக்கும்.

’அரசியல் எனக்குப் பிடிக்காது, யார் வந்தா நமக்கென்ன?’ என்று சொல்வது ஒரு வகையான தப்பித்தல் மனப்பான்மை. நாம் அரசியலைத் தீர்மானிக்கத் தவறினால், தகுதியற்றவர்கள் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கத் தொடங்கிவிடுவார்கள். மன்னராட்சிக் காலத்தில் 'யார் ஆண்டா என்ன?' என்று மக்கள் இருந்திருக்கலாம்; ஏனெனில், அந்த அரசை அவர்கள் அமைக்கவும் இல்லை, அவர்களுக்கு வாக்குரிமையும் இல்லை. அது பலத்தால் தீர்மானிக்கப்பட்டு, பலவந்தமாக திணிக்கப்பட்டது. ஆனால், ஜனநாயகம் என்பது நம் தலைவிதியை மாற்றும் அதிகாரத்தை நமக்கே தந்திருக்கிறது. நாம் உழைக்கவும், உழைத்த காசில் நிம்மதியாக குடும்பமாக உண்டு, உறங்கிடவும் சரியான பாதுகாப்பையும், உரிமைகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரவேண்டியது நம் அரசாங்கம்தான். அப்படியான அரசை உருவாக்கும் போது இவற்றையெல்லாம் நாம் சற்றே சிந்தித்திட வேண்டும்.