உறவினர் ஒருவரின் அழகான குழந்தைகள் இருவரையும், கொஞ்ச நாட்களுக்குப் பிறகு நேற்றொரு திருமண நிகழ்வில் சந்திக்க நேர்ந்தது. இரண்டு பேருமே புதிதாகக் கண்ணாடி அணிந்திருந்தார்கள். கண்ணாடி அணிவதில் எந்தத் தவறுமில்லைதான்; ஆனால், நமது அறியாமையால், கண்டிப்பின்மையால் நாம்தான் இந்தக் குறைகளை, நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்திவிடுகிறோம் என்பதுதான் துயருர வைக்கிறது. எந்நேரமும் ஆளுக்கொரு செல்போனை கண்களுக்கு அருகில் பிடித்துக்கொண்டு, அவற்றையே இந்தக் குழந்தைகள் பார்த்துக்கொண்டிருந்த நாட்கள் நினைவிலாடின. அந்தப் பிஞ்சுக் கைகளின் நீளம் எவ்வாறு வளர்ந்த மனிதர்களுக்காக உருவாக்கப்படும் செல்போனை போதுமான தூரத்தில் நீட்டிப்பிடிக்க முடியும்? செல்போன் திரைக்கும், நம் கண்களுக்கும் இடைப்பட்ட தூரம் குறைந்தபட்சம் 16 இஞ்ச் அளவு இருக்க வேண்டுமென சொல்லப்படுகிறது. ஆனால், அப்படியா குழந்தைகள் போனைப் பயன்படுத்துகிறார்கள்? மனம் கனத்துப் போயிற்று.
குழந்தைகளின் மனம் ஒரு வெள்ளைத்தாளைப் போன்றது. அதில் சினிமாவும், யூட்யூப் காட்சிகளும் பதிக்கின்ற பிம்பங்கள் மிக அழுத்தமானவை. ஒரு குழந்தைக்கு நிஜத்துக்கும் நிழலுக்கும் (Fantasy vs Reality) இடையிலான வித்தியாசத்தை முழுமையாக உணரும் முதிர்ச்சி வரும் வரை, திரையில் காண்பவை அனைத்துமே அவர்களுக்குள் ஒரு தோற்றமயக்கத்தை (Illusion) ஏற்படுத்துகின்றன. பலரும் அவற்றை நிஜ வாழ்வோடு ஒன்றிணைத்துப் பார்க்கிறார்கள். குழந்தைகளின் மனதில் சினிமா ஏற்படுத்தும் தாக்கம், நன்மைகளும், தீமைகளுமாய்ப் பல பரிமாணங்களைக் கொண்டது.
கற்பனைத் திறனும் ஆக்கப்பூர்வமான சிந்தனையும் (Creativity)
சினிமா குழந்தைகளின் கற்பனை உலகத்தை விரிவுபடுத்துகிறது. குறிப்பாக அனிமேஷன் படங்கள் மற்றும் மாயாஜாலக் கதைகள், அவர்களுக்குப் புதிய உலகங்களை, கதாபாத்திரங்களை அறிமுகம் செய்கின்றன. இது அவர்களின் படைப்பாற்றலைத் தூண்டுகிறது. படம் பார்த்த பிறகு அதே போன்ற கதாபாத்திரங்களை வரைவது, அது போன்ற கதைகளை உருவாக்குவது அல்லது அதன் தொடர்ச்சியைக் கற்பனை செய்வது என பல வகைகளில் முயற்சிக்கிறார்கள். இதனால், அவர்களின் சிந்தனைத் திறன் வளர்கிறது.
நடத்தை மற்றும் முன்மாதிரிகள் (Role Models)
குழந்தைகள் தாங்கள் பார்க்கும் நாயகர்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு நாயகன் உண்மையை மட்டுமே பேசுபவராகவோ, பிறருக்கு உதவுபவராகவோ இருந்தால், குழந்தைகளும் அந்தப் பண்புகளைத் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற முயல்கிறார்கள்.
உணர்ச்சி மேலாண்மை (Emotional Intelligence)
உறவுகள், நட்பு மற்றும் அன்பு போன்ற உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள சினிமா ஒரு நல்ல ஊடகமாக அமைகிறது. கதையில் வரும் கதாபாத்திரங்கள் ஒரு சிக்கலை எப்படி எதிர்கொள்கிறார்கள், தோல்வியிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை கிடைக்கிறது. குறிப்பாகக் குழந்தைகளின் உலகைப் பேசும் படங்கள் (Children's Films) அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைத் தருகின்றன.
சமூகப் பார்வையும் கலாச்சாரப் புரிதலும் (Social Awareness)
உலக சினிமாக்கள் மற்றும் பல்வேறு பிராந்தியப் படங்கள் மூலம் மற்ற ஊர் மக்களின் வாழ்க்கை முறை, மொழி மற்றும் உணவுப் பழக்கங்கள் குழந்தைகளுக்கு அறிமுகமாகின்றன. இது சக மனிதர்கள் மீதான புரிதலையும் (Empathy), பன்முகத்தன்மையை மதிக்கும் பண்பையும் வளர்க்கிறது.
இத்தனைச் சிறப்புகளைத் தரும் சினிமாவும், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும் குழந்தைகள் மீது எதிர்மறையான தாக்கத்தையும் பெருமளவில் ஏற்படுத்தத்தான் செய்கின்றன.
எதிர்மறைத் தாக்கங்கள்
அதில் முதலாவது டிஜிட்டல் அடிமைத்தனம் மற்றும் உடல்நலப் பாதிப்பு. காட்சி ஊடகங்கள் என்பன அட்ரினலின் மற்றும் டோபமைன் சுரப்பை ஏற்படுத்துகிற போதை வஸ்துக்களுக்கு ஒப்பானவை. பெரியவர்களே எளிதில் அதற்கு அடிமையாகும் சூழலில், குழந்தைகளை அவை என்ன செய்யும் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. செல்போன்களுக்கு அடிமையான குழந்தைகளின் கைகளிலிருந்து அவற்றைப் பிடுங்கும் போது, அவர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை தேடிப் பாருங்கள். பதற வைக்கும் காட்சிகள் காணக்கிடைக்கும். மேலும், அதிக நேரம் திரையைப் பார்ப்பது அவர்களின் கண்களைப் பாதிக்கிறது. அவர்களின் வளர்ச்சிக்கு முக்கியமான, அவசியமான உடல் உழைப்பான விளையாடும் நேரத்தையும் குறைக்கிறது. எப்போதும் துரிதமான காட்சிகளைப் (Fast-paced visuals) பார்த்துப் பழகிய குழந்தைகளுக்கு, நிஜ வாழ்க்கையின் நிதானமான வேகம் சலிப்பைத் தரலாம். இது அவர்களின் கவனிப்புத் திறனைக் (Attention span) குறைக்கும். வன்முறையான காட்சிகள், ஆக்ரோஷமான வசனங்கள் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை ஒரு ’மாஸ்’ விஷயமாகத் திரையில் பார்க்கும்போது, அது இயல்பானதுதான் என்ற எண்ணம் அவர்களுக்குள் விதைக்கப்பட்டுவிடுகிறது.
இவற்றிலிருந்து குழந்தைகளைக் காத்திட, அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது அவசியம். அவர்களின் வயதுக்கும் மனதுக்குமேற்ற சரியான படங்களை, நிகழ்ச்சிகளைத்தான் பார்க்கிறார்களா என்பதையும், எவ்வளவு நேரம் அதற்கென செலவிடுகிறார்கள் என்பதையும் அவர்கள் உறுதி செய்திட வேண்டும். அதிலும் குறிப்பாக செல்போன் பயன்பாட்டினைக் குறைத்து, குறைந்தபட்சம் டிவியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை ஊக்குவிக்க வேண்டும். நிகழ்ச்சி உள்ளடக்கங்களைப் பொறுத்தவரை, சினிமாக்களில் குறிக்கப்படும் 'Parental Guidance' என்பது வெறும் குறியீடு மட்டுமல்ல, அது ஒரு எச்சரிக்கை வாசகம். அவற்றை மதித்திட வேண்டும்.
குழந்தைகளுக்கான ஒரு படத்தை உருவாக்கும்போது, அது வெறும் வண்ணமயமாக இருந்தால் மட்டும் போதாது; அதில் ஒரு நேர்மையும், அறமும் (Ethics) இருக்க வேண்டும் என்பதை படைப்பாளிகளும் உணர்ந்திட வேண்டும். குழந்தைகளின் உலகம் படக்காட்சிகளின் மூலமாகவும், இசையின் மூலமாகவும் விரைந்து பாதிக்கப்படும் எனும் உண்மையை உணர்ந்த பொறுப்புணர்வோடு அவர்கள் செயல்பட வேண்டும். சினிமா ஒரு சிறந்த கருவி. குழந்தைகளுக்கான காட்சிகளை உருவாக்குவது என்பது வெறும் பொழுதுபோக்கை உருவாக்குவது அல்ல; எதிர்கால மனிதர்களின் குணங்களையும், பழக்கங்களையும், கனவுகளையும் வடிவமைத்திடும் முக்கியமான செயலாகும். குழந்தைகளின் மனதில் நற்பண்புகளை விதைக்கவும், அவர்களின் கனவுகளுக்குச் சிறகு கொடுக்கவும் சினிமா பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, அவற்றைச் சிதைத்துவிடுவதாக அமைந்திடக்கூடாது.