Henry Beecher 
அறிவோம்

எண்ணம் போல் வாழ்வு #Placebo Effect

’எண்ணம் போல் வாழ்வு’ என்பது வெறும் தத்துவம் மட்டுமே அல்ல. நாம் ஒரு நம்பிக்கையை முழுமையாக ஏற்கும்போது, நமது மூளையில் உண்டாகும் ரசாயன மாற்றங்களே உடலையும், மனதையும் செம்மைப்படுத்துகின்றன.

ஆதி தாமிரா

நண்பன் ஒருவன் சற்று குறும்புக்காரன். ஒருமுறை அவனது வீட்டுக்குச் சென்றிருந்தபோது பிரபலமான, பிரபு ஹோட்டலில் வாங்கி வந்திருந்த பிரியாணியைக் கொடுத்து சாப்பிடச் சொல்லிவிட்டு எப்படி இருக்கிறது என்று கேட்டான். அதென்ன கேள்வி? பிரமாதமாகத்தான் இருந்தது. ’நன்றாகத்தான் இருக்கிறது’ என்று சொன்னேன். அதன் பின்னர்தான் சிரித்தபடியே சொன்னான், ’அது என் மனைவி செய்த பிரியாணி. அந்தப் பாக்ஸ்தான், பிரபு கடையினுடையது’ என்று. அவன் மனைவி வேறு சிரித்துக் கோண்டிருந்தார். சற்று வெட்கமாகத்தான் போயிற்று. மீண்டும் யோசித்துப் பார்த்தால், அந்த பிரியாணி பிரபு கடை அளவுக்கானதாக இல்லையோ என்று தோன்றத்தான் செய்தது. ஆனாலும், ’உன் மனைவி செய்த பிரியாணியோடு, பிரபு கடை பிரியாணி தோற்றுப்போயிற்று, அத்தனைச் சிறப்புடா’ என்று சொல்லி சமாளித்துவிட்டேன். ஆனால், நான் எங்கு ஏமாந்தேன்? பிரபு கடையின் அந்த பாக்ஸ்! 

இரண்டாம் உலகப் போரின் போது நடந்த ஒரு நிகழ்வு இது. அமெரிக்க ராணுவ மருத்துவமனையில் படுகாயமடைந்த ஒரு வீரருக்குக் கொடுக்க மயக்க மருந்துகள் (Morphine) தீர்ந்துவிட்டன. தாங்க முடியாத வலியால் அந்த வீரர் துடித்துக் கொண்டிருந்தார். மருத்துவர் ஹென்றி (Henry Beecher) வேறு வழியின்றி, சாதாரண நீர்க்குறைபாட்டுக்கு நரம்புகள் வழி ஏற்றப்படும் சலைன் நீரை (Normal Saline- NS) ஒரு ஊசி மூலம் அவருக்குச் செலுத்திவிட்டு, ‘இது உங்களின் வலியைக் குறைக்கும் வலிமையான மருந்து’ என்று பொய் சொல்லிவிடுகிறார். சில நிமிடங்களிலேயே அந்த வீரரின் வலி குறைந்து, அவர் நிம்மதியாக உறங்கிப் போனார்! இங்கு அந்த சலைன் நீருக்கு எந்த மருத்துவக் குணமும் இல்லை, ஆனால் அந்த வீரரின் மூளை அதை உண்மை என்று நம்பியது. இதுதான் நிஜ வாழ்க்கையில் பிளேசிபோ விளைவு (Placebo Effect) எனப்படுகிறது. நான் பிரியாணியில் ஏமாந்ததும் இதனால்தான்!

பிளேசிபோ என்றால் என்ன?


மருத்துவக் குணம் இல்லாத ஒரு மருந்தை அல்லது சிகிச்சையை, உண்மையான மருந்து என்று ஏமாற்றி நோயாளிகளுக்குக் கொடுக்கும்போது, அது அவர்களுக்குக் குணமாகும் விளைவைத் தருவதே பிளேசிபோ விளைவு. லத்தீன் கிறித்துவ சமூகத்து மக்களின் இறுதிச் சடங்கில் ’Placebo’ எனும் துக்கப் பாடல்களை வாடகைக்குப் பாடுபவர்கள் இருந்திருக்கிறார்கள். அதிலிருந்து இந்தச் சொல் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. போலவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பண்டைய எகிப்தில், இறுதி ஊர்வலங்களில் அழுது புலம்புவதற்காக ஆட்களை வாடகைக்கு அமர்த்தியிருக்கிறார்கள். நாம் அந்த அளவுக்கெல்லாம் போகத் தேவையில்லை. இன்றளவும் நமது கிராமங்களில் இந்த வழக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஒப்பாரியில் தேர்ந்த கிழவிகளை நாம் அழைத்துவந்து பாடவைத்தோம். அவர்களும் வாடகைக்காக அல்லாது, அன்புக்காக அதைச் செய்தார்கள். அதாவது, நமக்கான சோகத்தை இன்னொருவரின் அழுகையின் மூலமாக தேற்றிக்கொள்ளும் செயல். உண்மையில்லாத ஒன்றைக் கொண்டு மனதைத் திருப்திப்படுத்துவது என்பது இதன் பொருள்.

Placebo Effect

ஹென்றி பீச்சர் அதன்பிறகும் இதுகுறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். ஆய்வுகளில், நோயாளிகளுக்கு வெறும் சர்க்கரை மாத்திரைகளைக் கொடுத்து, இது வலி நிவாரணி என்று கூறப்பட்டபோது, பலரின் மூளை அதை உண்மையாக ஏற்றுக்கொண்டு எண்டோர்பின் (Endorphins) போன்ற இயற்கை வலி நிவாரணிகளைச் சுரக்கச் செய்தது. எல்லோரிடமும் இது ஒரே அளவில் செயல்படாது என்றாலும், கணிசமான அளவு நோயாளிகளில் நல்ல மாற்றம் காணப்பட்டது என்பது ஆய்வுகள் காட்டும் முக்கியமான விஷயம்.

மேலும், இந்த விளைவில் நமது எதிர்பார்ப்புகளும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு மருந்து விலையுயர்ந்தது, தரமானது, சக்திவாய்ந்தது என்று நாம் முன்கூட்டியே நம்பினால், அதன் விளைவை அதிகமாக உணரக்கூடும் என சில ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, மாத்திரையின் உள்ளடக்கம் மட்டுமல்ல, அதை நாம் எப்படி நம்புகிறோம் என்பதும் அதன் விளைவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம், நமது மனமும், உடலும் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது என்பதும், அதற்குத் தேவை ஒரு நம்பிக்கையான தூண்டுதல் மட்டுமே என்பதும் நிரூபிக்கப்பட்டது.

’எண்ணம் போல் வாழ்வு’ என்பது வெறும் தத்துவம் மட்டுமே அல்ல. நாம் ஒரு நம்பிக்கையை முழுமையாக ஏற்கும்போது, நமது மூளையில் உண்டாகும் ரசாயன மாற்றங்களே உடலையும், மனதையும் செம்மைப்படுத்துகின்றன. நம்பிக்கையின் பாற்பட்டு இயல்பாக நடக்கும் விசயங்களை, நாம் நமக்குச் சாதகமாகப் புரிந்துகொள்கிறோம். புற உலகம் எதை உண்மை என்று சொல்கிறதோ அதை விட, நம் அக உலகம் எதை நம்புகிறதோ அதுவே நமது நிஜமாக மாறுகிறது. இத்தனைப் பிரம்மாண்டமான கடவுள், கோவில், பக்தி எனும் சிந்தனைகளும், கட்டமைப்புகளும் எப்படி உலகையே ஆள்கின்றன என்று யோசித்தால், அதன் பின்னால், பிளேசிபோ விளைவு ஒளிந்து கொண்டிருக்கக்கூடும்.