world biggest railway station  
அறிவோம்

உலகின் மிகப் பெரிய ரயில் நிலையம் எது தெரியுமா?

உலகின் மிகப்பெரிய ரயில் நிலையத்தை 38 மாதங்களில் சீனா கட்டி முடித்து விட்டது. சீனாவின் பிரமாண்டமான இந்தக் கட்டுமானம்தான் இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

எம். குமரேசன்

சோங்கிங்... (Chongqing) சீனாவின் மிக முக்கியமான செல்வச் செழிப்புமிக்க ஒரு பெருநகரம். ஷாங்காய் , பெய்ஜிங் போன்ற சீனாவின் பெருநகரங்களைப் போலவே, சோங்கிங் நகரமும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புராதன நகரமாகும். இரண்டாம் உலகப் போரின் போது, ​​1937ம் ஆண்டு சீனாவின் தலைநகரான நாங்கிங் (Nanking) ஜப்பானியப் படைகளிடம் வீழ்ந்தது. இந்த சமயத்தில், சீன தேசியவாத (KMT) அரசின் தலைநகராக சோங்கிங் விளங்கியது.

1960-களுக்குப் பிறகு, சீனாவின் மிக மிக முக்கியமான நகரமாக மாறத் தொடங்கியது. மாவோ சேதுங்-குவால் ஏற்படுத்தப்பட்ட மாபெரும் தொழில் புரட்சி காரணமாக சீனாவின் மிகப் பெரும் தொழில் நகரமாக சோங்கிங் முன்னேறத் தொடங்கியது. அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களிலிருந்து தொழில்துறை மற்றும் ராணுவ உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக, சீனா திட்டமிட்டது. இதனால், செழிப்புமிக்க கடலோர நகரங்களில் இருந்து நாட்டு பாதுகாப்புக்கு தேவையான ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் மையங்களை உள்நாட்டுப் பகுதிகளுக்கு மாற்ற தொடங்கியது.

இதன் காரணமாக, சீன அரசுக்கு சொந்தமான பாதுகாப்புத்துறை தொடர்பான தொழிற்சாலைகள், கனரகத் தொழில், தொழில்நுட்பம் , உள்கட்டமைப்பு மேம்பாட்டு தொடர்பான நிறுவனங்கள் தனியார் துறையில் ஆட்டோமொபைல், மோட்டார் சைக்கிள் உற்பத்தி, மின்னணுவியல் மற்றும் மடிக்கணினி நிறுவனங்கள் இந்த நகரத்தில் தொடங்கப்பட்டன. யாங்ஷே (Yangtze) ஆற்றில் பிரமாண்டமான துறைமுகமும் இங்கு உருவாக்கப்பட்டது. கடற்கரையில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும், இந்தத் துறைமுகம் நேரடியாக வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட முடியும்.

தற்போது, சோங்கிங் நகரம் மேற்கு சீனாவின் மிக வலிமையான பணக்கார நகரமாக மாறியுள்ளது. ஆண்டுக்கு 440 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. தொழிற்வளர்ச்சி காரணமாக மக்கள் தொகை அடர்த்தியும் இந்த நகரத்தில் அதிகம். சீனாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரம் இதுதான். சோங்கிங்கில் மட்டும் 3.1 கோடி மக்கள் வசிக்கின்றனர். சரி ... இப்போது ஏன் சோங்கிங் நகரம் பற்றி பேசுகிறோம்... அதற்கான காரணம்தான் என்ன?

A train of Chongqing Rail Transit Line coming through a residential building at

தற்போது, உலகிலேயே மிகப் பெரிய ரயில் நிலையம் இந்த நகரத்தில்தான் அமைந்துள்ளது.Chongqing East Railway Station என்ற பெயர் கொண்ட இந்த ரயில் நிலையம், 15 பிளாட்பாரங்களுடன், 29 டிராக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 16 ஆயிரம் பயணிகளை கையாள முடியும். 122 மில்லியன் சதுர அடி பரப்பளவுக் கொண்ட இந்த ரயில் நிலையத்தை 38 மாதங்களில் சீனா கட்டமைத்து விட்டது. கிட்டத்தட்ட 65 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் இந்த ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

ரயில் நிலையத்தை உருவாக்க, சீன ராணுவத்தினர் ரோபோட்டுகளை பயன்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சோங்கிங் நகரமும் அதன் புதிய ரயில் நிலையமும், சீனாவின் அசாத்தியமான பொறியியல் திறனுக்கும் பிரம்மாண்டமான பொருளாதார வலிமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது. இந்த நகரத்தில்தான், அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடங்களுக்குள்ளேயே புகுந்து மெட்ரோ ரயில்கள் செல்வதையும் காண முடியும்.

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமெரிக்க தொழிலதிபர்கள் குழு, சீனாவுக்குச் சென்றிருந்தபோது, ​​சோங்கிங் கிழக்கு ரயில் நிலையத்தின் கட்டுமானம் குறித்த ஒரு காணொளியை எலான் மஸ்க் 'X' தளத்தில் மறுபதிவு செய்தார். எலான் மஸ்க் அந்தப் பதிவில் ரயில் நிலையம் பற்றி எதுவும் குறிப்பிட்டு எழுதவில்லை. ஆனால், அவரின் பதிவுக்கு பிறகு, லட்சக்கணக்கானோர் சோங்கிங் ரயில் நிலையத்தை இணையத்தில் தேடத் தொடங்கினர்.