Horse Trading ChatGPT
அறிவோம்

குதிரை பேரம் #HorseTrading

குதிரை பேரம் என்ற சொல்லாடல் எப்படி, எங்கிருந்து வந்தது தெரியுமா?

ஆதி தாமிரா

சமீபத்தில், தவெகவின் மைனாரிட்டி அரசு அமைந்ததிலிருந்து 'குதிரை பேரம்' (Horse Trading) என்ற சொல்லாடலை தமிழ்நாட்டில் அடிக்கடிக் கேட்கமுடிகிறது. அதென்ன குதிரை பேரம்? 

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அதிக இடங்கள் பெற்ற கட்சி, தங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, பிற கட்சியினரின் எம்எல்ஏக்களைத் தங்கள் பக்கம் இழுக்கச் செய்யப்படும் திரைமறைவு வேலைகள்தான் இப்படிக் குதிரை பேரம் என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த நிலை ஏற்படுவதைத் தடுக்கத்தான் கட்சித் தாவல் தடைச்சட்டம் இருக்கிறது. அதன்படி இன்றைய நிலைமையில் திமுகவிலிருந்தோ, அதிமுகவிலிருந்தோ தவெகவிற்கு, யாரோ ஒரு எம்எல்ஏ தாவினால் அவரது பதவி பறிபோய்விடும். அதே நேரம், ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்களை ஒரே நேரத்தில் தூக்கினால், அந்தத் தடைச்சட்டம் பொருந்தாது. போலவே, ஒன்றிரண்டு எம்எல்ஏக்களை வைத்திருக்கும் குட்டிக் கட்சிகளின் எம்எம்ஏக்களைத் அப்படியே தூக்குவதையும் இந்த சட்டத்தால் தடுக்க முடியாமல் போகிறது.

சரிதான், ஆனால் 'குதிரை பேரம்' என்ற சொல்லாடல் எங்கிருந்து வந்தது?

20ம் நூற்றாண்டின் தொடக்கம் என்பது இன்றைய Fixed Rate, MRP விலை போன்ற அமைப்புகள் இல்லாத சந்தைக் கலாச்சாரம் நிலவிய காலம். பொருட்களையும், விலங்குகளையும் பேரம் பேசித்தான் நாம் வாங்க வேண்டும். பேரம் பேசுவது என்பதே ஒரு தனி கலைதான் இல்லையா? ஏதாவது சுற்றுலாத்தலங்களில் நாமே அதை அனுபவித்திருப்போம். இது காணக்கிடைக்காத அற்புதமான சிப்பிகளால் செய்யப்பட்ட கைவினைப்பொருள் என்பார்கள். நாமும் அதை ஆசையாக நூறு ரூபாய் கொடுத்து வாங்கி வருவோம். ஆனால், இன்னொரு தெரு வழியாகச் சுற்றிக்கொண்டு வந்த நம் நண்பர் அதே பொருளைப் பத்து ரூபாய்க்கு வாங்கி வந்து நம்மை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பார். பேரம் என்பது விற்பவர், பொருளின் உண்மையான தகுதிக்கு மீறிய சிறப்புகளை அடுக்கிச்சொல்லி அதிக விலை கேட்பதும், வாங்குபவர் அந்தப் பொருளின் தகுதியைக் குறைத்து மதிப்பிட்டு, குறைவான விலைக்கு வாங்க முயலுவதுமான ஒரு செயல்முறை. கார்களும், ரயில்களும் தாராளமாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வரை, குதிரைகள்தான் மனிதனின் மிகவும் மதிப்பு வாய்ந்த சொத்தாகக் கருதப்பட்டன. குதிரையின் வயது, பற்கள், அதன் ஓட்டம் ஆகியவற்றை வைத்து அதன் மதிப்பைத் தீர்மானிப்பார்கள். இந்த வணிகத்தில் தந்திரமும், ஏமாற்று வேலைகளும், ரகசிய பேரங்களும் அதிகமாக இருக்கும்.  அது அப்படியே அரசியலின் இந்தச் சூழலுக்குப் பொருத்திப்போகிறது.

1900-களுக்குப் பிறகு, அமெரிக்க அரசியலில் சட்ட மசோதாக்களை நிறைவேற்ற அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் ரகசியமாகச் செய்துகொண்ட ஒப்பந்தங்களை, கொடுக்கல் வாங்கல்களைப் பார்த்து, பத்திரிகையாளர்கள் இதை 'Horse Trading' என்று கிண்டலாக எழுதத் தொடங்கினர். அதுவே பின்னர் நிலைத்துவிட்டது.

சந்தையில் குதிரையை எப்படி அதன் உரிமையாளரும், வாங்குபவரும் ஒரு பொருளாகப் பார்த்துப் பேரம் பேசுகிறாரோ, அதேபோல ஓரிரு எம்எல்ஏக்களை வைத்திருக்கும் கட்சித் தலைவர்களோ, அல்லது தனித்த எம்எல்ஏக்கள் தங்களைத் தாங்களோ விற்க, பேரம் பேசுகிறார்கள். எங்களுக்கு ஆதரவளித்தால், உங்களுக்கு அமைச்சர் பதவி தருகிறோம் அல்லது கோடிகளில் பணம் தருகிறோம் என்று ஆசை காட்டப்படுகிறார்கள். இவையெல்லாம் பொதுவெளிக்குத் தெரியாமல் திரைக்குப் பின்னால் நடக்கின்றன. குதிரைகள் திருடு போய்விடாமல் பாதுகாப்பதைப்போல, வியாபாரம் முடிகிற வரையில், எம்எல்ஏக்கள் சொகுசு விடுதிகளில் (Resort Politics) தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள்.

ஜனநாயகத்தில் மக்கள் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் பார்த்து வாக்களிக்கிறார்கள். ஆனால், 'குதிரை பேரத்தின்' போது அந்த மக்களின் தீர்ப்பு மதிக்கப்படாமல், அது தனிமனித லாபங்களாக மாறிவிடுகிறது. இது ஜனநாயகத்தின் மாண்பைச் சிதைப்பதாகக் கருதப்படுவதால், இச்சொல்லாடல் ஒரு எதிர்மறையான அர்த்தத்தில் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. எம்எல்ஏ எனும் தகுதியை, தங்களுக்குப் பணியாற்ற ஒரு வாய்ப்பாகத்தான் மக்கள் ஒருவருக்கு அளிக்கிறார்களே தவிர, தன்னைத் தானே கோடிகளில் விற்றுக்கொள்வதற்காக அல்ல!