முன்பெல்லாம், காற்றிலிருந்து குங்குமத்தையும், விபூதியையும் வரவழைக்கும் சாமியார்கள் நிறைய பேர் இருந்தார்கள். வாயிலிருந்து ஸ்படிக லிங்கத்தையெல்லாம் கூட வரவழைப்பார்கள். கொஞ்ச நாட்களுக்கு ஒரு தடவை செய்திகளில் அடிபடுவார்கள், பிரபலமாவார்கள். ஆனால், இப்போதெல்லாம் அப்படி யாரும் இல்லை. காரணம் நம் எல்லோர் கைகளிலும் கேமிரா, எந்த நிகழ்ச்சியும் உடனடியாக எல்லாக் கோணங்களிலும் படம் பிடிக்கப்பட்டுவிடும். ஒரு மேஜிக், எல்லாக் கோணங்களிலும் படம் பிடிக்கப்படக் கூடாத ஒரு நுட்பமாகும்.
சிறப்பான மேஜிக் கலைஞன் என்பவன், ஓர் உளவியல் அறிஞனாக, ஒரு நல்லப் பேச்சாளனாக, ஓர் எந்திரப் பொறியாளனாக, ஒரு வேதியியல் நிபுணராக, ஒரு நகைச்சுவைக் கலைஞனாக, ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வெவ்வேறு வேலைகளைத் துல்லியமாகவும், மிக வேகமாகவும் செய்யக்கூடிய பயிற்சி பெற்றவனாகவும் இருக்க வேண்டும்! அப்படித்தான் மேஜிக் கலைஞர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்.
மேஜிக் என்பது பல கூட்டுக் கலைகளின் சங்கமத்தால் உருவாகும், ஒரு தனித்துவமான கலை. இங்கே இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி எதுவுமில்லை. இது மனித உணர்வுகளை (senses) ஏமாற்றும் ஒரு நுட்பம். மனித மூளை என்பது அற்புதமான ஒரு விசயம். அது வரலாறெங்கும் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது, நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வரிசையில் சில புகைப்படங்களை (24 Frames per second) நகர்த்தும் போது அவற்றை புகைப்படங்கள் என்று உணரமுடியாமல் போய், அது ஒரு காட்சி என்று நமது மூளை தவறாக எண்ணிக்கொள்கிறது. அப்படியான நமது மூளையின் பலவீனங்களைப் பயன்படுத்தித்தான் மேஜிக் எனும் கலை நிகழ்த்தப்படுகிறது. அப்படிப் பிரதானமாக என்னவெல்லாம் நுட்பங்கள் அதில் பயன்படுத்தப்படுகின்றன?
1. தோற்றப்பிழை (Optical Illusion)
இது மேஜிக்கின் மிக அடிப்படையான ஒன்று. கண்ணுக்குத் தெரியும் ஒரு விஷயம் அல்லது பொருள் உண்மை இல்லை! காலியானதாகக் காட்டப்படும் ஒரு பெட்டி உண்மையில் காலியாக இல்லை. பந்து என நாம் நினைக்கும் ஒரு பொருள் பந்தே அல்ல! கோணம் (angle), ஒளி (lighting), பின்னணி (background) மூலம் உருவாக்கப்படும் மாயை இது.
2. வேகம் மற்றும் கவனச்சிதறல் (Speed & Misdirection)
இது ஒரு மிகவும் சக்திவாய்ந்த நுட்பம். மேஜிக் கலைஞர், அவரது வலது கையிலிருக்கும் பொருளைப் பயன்படுத்தி, நமது கவனத்தை அதன் மீது வசப்படுத்திவிட்டு, இடது கையால், அதிவேகமாக வேறொரு வேலையைச் செய்துவிடுகிறார். முக்கியச் செயல் நாம் பார்க்கும் இடத்திலல்லாது வேறு பக்கத்தில் நடக்கிறது.
3. கையசைவு நுட்பம் (Sleight of Hand)
பெரும் பயிற்சியினால் வரக்கூடிய கைத்திறனின் உச்சம் இது. மிக வேகமான, துல்லியமான கைகளின் இயக்கத்தால் பொருள்களை மறைப்பது, இடம் மாற்றுவது போன்ற காரியங்களைச் செய்கிறார்கள். கார்டு மேஜிக், நாணய மேஜிக் போன்ற அனைத்தின் அடிப்படையும் இதில்தான் இருக்கிறது.
4. இயந்திர நுட்பங்கள் (Mechanical Tricks)
மேடைக்குப் பின்னால், மேடைக்குக்கீழே, கண்முன்னால் காண்பிக்கப்படும் மேஜைகள், நாற்காலிகள், பீரோக்கள், கூண்டுகள் என அனைத்திலும் கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும், வடிவம் மாறக்கூடிய எந்திரவியல் நுட்பங்கள் வைத்துச் சில மேஜிக் நிகழ்ச்சிகளை வடிவமைக்கிறார்கள்.
5. ஒளி மற்றும் நிழல் (Lighting & Shadow Control)
நாம் பார்க்கும் பல விஷயங்களை ஒளியும், நிழலும்தான் தீர்மானிக்கின்றன. எதைப் பார்வையாளர்களுக்குக் காட்ட வேண்டும், எதை மறைக்க வேண்டும் என்பதை ஒளி நிர்ணயிக்கிறது. நிழல்களில் நாம் எதிர்பாராத பல விஷயங்களும் மறைக்கப்படுகின்றன.
6. வேதியியல் நுட்பங்கள் (Chemistry-based Tricks)
திடீரென ஒரு பொருள் தீப்பற்றி எரிவது, சட்டென அதுவே அணைந்துபோவது, நிறம் மாறும் திரவங்கள், புகை, வெடிப்பு போன்ற தோற்றங்கள் அனைத்தும் பாதுகாப்பான ரசாயன வினைகளின் விளைவுகளாகும்.
7. உளவியல் நுட்பங்கள் (Psychological Techniques)
மனிதர்கள் எதைத் தேர்வு செய்வார்கள் என்பதை முன்கூட்டியே கணித்தல், ஒன்றைச் செய்ய வைக்க, வார்த்தைகளால் அவர்களை வழிநடத்துதல், அவர்களது நினைவில் குழப்பத்தை விளைவித்தல் (memory manipulation) போன்ற நுட்பங்கள் இந்த வகையில் வருகின்றன.
இப்படிப் பல நுட்பங்களைக் கலந்து, தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து, பல நூறு தடவைகள் துல்லியமாகப் பயிற்சி செய்து பார்த்துதான், ஒவ்வொரு மேஜிக் நிகழ்வையும் உருவாக்குகிறார்கள் மேஜிக் கலைஞர்கள். நமக்குச் ’சாதாரணமாக’ தோன்றும் ஒரு டிரிக் என்பது பல வருடப் பயிற்சியின் விளைவாகும். அறிவியலையும், கலையையும் இணைத்து, நம்மை ஆச்சரியப்படுத்தும் மேஜிக், நம்மைச் சிந்திக்க வைக்கும் அனுபவத்தையும் தருகிறது. ஒரு மேஜிக் நிகழ்ச்சிக்குச் சென்றால், இப்படியெல்லாம் அறிவியல் பூர்வமாக சிந்தித்து, அது எப்படி நடத்தப்படுகிறது என்று ஆராய்ந்து, அந்த அழகிய அனுபவத்தைச் சிதைத்துக் கொள்ளாமல், அனுபவித்திட வேண்டும். அதே நேரம் இப்படியான மேஜிக்குகள் ஆன்மீகம், கடவுள், பேய் போன்ற கருத்தாக்கங்களுடன் தொடர்பு படுத்தி நடத்தப்பட்டால், அவற்றை அப்படியே நம்பிவிடாமல், அவற்றுக்குப் பின்னாலிருக்கும் அறிவியல் நுட்பங்கள் என்னவென்பதை நாம் ஆய்ந்தறிய வேண்டும். இல்லாவிட்டால், சமூகத்தில் மூட நம்பிக்கையும், ஏமாற்று வேலைகளும் மலிந்து போய்விடக்கூடும்!