இந்த பூமி அனைத்து உயிர்களுக்குமானது என்று நாம் மேம்போக்காகச் சொல்லிக்கொண்டாலும், இது முழுக்க நமக்குச் சொந்தமானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். நிலத்தையும், கடலையும், வானையும் ஆளத்துடிக்கிறோம். நாம் உருவாக்கிய அனைத்தும் நம் அறிவாலானது. ஆனால், அதனால் மட்டுமே பூமி மொத்தமும் நம்முடையதாகிவிடாது. வாகனங்களுக்கு நோ எண்ட்ரி, விலங்குகளுக்கு நோ எண்ட்ரி என எச்சரிக்கைப் பலகைகளைப் பார்த்திருக்கிறோம். பூமி வைத்திருக்கும் ‘மனிதர்களுக்கான நோ எண்ட்ரி’ பகுதிகளும் இங்கே இருக்கின்றன. இயற்கையின் இந்த ‘தற்காப்பு மண்டலங்கள்’ (Defensive Zones), மனிதன் எல்லா இடங்களுக்கும் சொந்தக்காரன் அல்ல என்பதை உரக்கச் சொல்கின்றன. பூமியின் அத்தகைய விசித்திரமான, ஆபத்தான சில இடங்களைத் தெரிந்து கொள்வோம்!
1. டெத் வேலி (Death Valley) – கலிபோர்னியா, அமெரிக்கா
அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் நெவாடா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள இந்தப் பள்ளத்தாக்கு, உலகின் மிக வெப்பமான மற்றும் வறண்ட இடங்களில் ஒன்று. 1849-ஆம் ஆண்டு ‘கோல்ட் ரஷ்’ (Gold Rush) காலத்தில், தங்கத்தைத் தேடிச் சென்ற குழுவினர் இப்பகுதியைக் கடக்க முயன்றபோது, கடுமையான வெப்பத்தாலும் நீரிழப்பாலும் பெரும் துயரத்திற்கு உள்ளாகினர். அங்கிருந்து தப்பித்தவர்கள் இதற்கு 'டெத் வேலி' என்று பெயரிட்டனர்.
இது ஏன் மனிதர்களுக்கு ஆபத்தானது என்றால், கடல் மட்டத்திற்கும் கீழே அமைந்துள்ள இதன் புவியியல் அமைப்பு, வெப்பத்தைச் சிறைப்பிடித்து வைப்பதால், இந்த இடமே ஒரு பெரிய ‘அடுப்பு’ போலச் செயல்படுகிறது. இந்த சூழ்நிலை மனித உயிருக்கு மிக ஆபத்தானது. நாம் சராசரியாக 200C லிருந்து 350C வரை வாழக்கூடியவர்கள். கோடையில் நமது உச்சபட்ச வெப்பநிலையான 400C வரை, வீட்டுக்குள் ஒளிந்துகொண்டு நம்மால் தாக்குப்பிடிக்க முடியும். ஆனால், டெத்வேலியின் வெப்பநிலை 500Cக்கு மேலே இருக்கிறது. அதனால், ஒரு சில நிமிடங்களிலேயே நாம் ஹீட்ஸ்ட்ரோக்குக்கு ஆளாகி இறந்து போக நேரிடுகிறது.
ஆனால், வெப்பம் சற்றுக்குறைவான அதிகாலையும், அந்திமாலையும் இங்கே மனிதர்கள் சுற்றுலாவுக்காகவும், ஆய்வுப் பணிகளுக்காகவும், தகுந்த முன்னெச்சரிக்கையோடு வந்து போகத்தான் செய்கிறார்கள்.
2. லேக் நேட்ரான் (Lake Natron) – தான்சானியா
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் வடக்குப் பகுதியில், 'ஆல் டோனியோ லெங்காய்' எரிமலைக்கு அருகில் இந்த ஏரி அமைந்துள்ளது. நீண்ட காலமாகவே இயற்கையான எரிமலைத் தாதுக்களின் கலவையால் இந்த ஏரி உருவாகியுள்ளது.
இதன் நீரில் அதிகப்படியான சோடியம் கார்பனேட் மற்றும் தாதுக்கள் கலந்துள்ளன. இது ஏரியையே ஒரு ரசாயனப் பொறியாக மாற்றியிருக்கிறது. நாம் அருந்தும் குடிநீரை விட சுமாராக 3000ம் மடங்கு அதிக காரத்தன்மை உடையதாக இருக்கிறது இதன் நீர். இப்பகுதிக்கு வரும் உயிரினங்கள், இந்த அதிகப்படியான காரத்தன்மையால் (Alkaline) இறக்கும்போது, அவற்றின் உடல் சிதைவடையாமல் ‘கால்சிஃபிகேஷன்’ (Calcification) எனும் வேதியியல் மாற்றத்திற்கு உள்ளாகிச் சிலை போல உறைந்துவிடுகின்றன. இது இயற்கையின் ஒரு விசித்திரமான மற்றும் பயங்கரமான முகத்தைக் காட்டுகிறது.
ஆனால், வேட்டையாடிகளின் பாதிப்பில்லாததால், இதன் சுற்றுப்பகுதியை ஒருவகையான பிளமிங்கோ பறவைகள் மட்டும் இனப்பெருக்க காலத்தில் பயன்படுத்திக்கொள்கின்றன.
3. ஸ்னேக் ஐலாண்ட் (Snake Island) – பிரேசில்
பிரேசிலின் சாவ் பாலோ கடற்கரையிலிருந்து சுமார் 33 கி.மீ தொலைவில் உள்ள இந்தத் தீவு, ‘Ilha da Queimada Grande’ என்று அழைக்கப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டம் உயர்ந்தபோது இது பிரதான நிலப்பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. இத்தனிமை, இங்குள்ள பாம்புகளை மிகப்பெரிய அளவில் இனப்பெருக்கமும், பரிணாம வளர்ச்சியையும் அடைய வைத்துள்ளன.
உணவுக்காக இந்தப் பாம்புகள் மரத்திலேறி பறவைகளை வேட்டையாடுகின்றன. பாம்புகளால் முற்றிலுமாக சூழப்பட்டுள்ள இத்தீவில் மனிதர்கள் கால் வைக்கவும் முடியாது. இங்கு உலகின் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ‘கோல்டன் லான்ஸ்ஹெட்’(Golden Lancehead) வகை பாம்புகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.
இப்பகுதியின் அபாயத்தை உணர்ந்த பிரேசில் அரசு, மனிதர்கள் இங்கு செல்ல முற்றிலுமாகத் தடை விதித்துள்ளது.
இந்த மூன்று இடங்களும் நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றுதான். பூமி மனிதனுக்கானது மட்டுமேயல்ல. இயற்கை மனிதர்களின் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்டது. இங்கு எத்தனையோ உயிர்கள் தற்செயலாகத் தோன்றியிருக்கின்றன, மறைந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் மனிதர்களாகி நாமும்! நேற்று நாமில்லை, இன்றிருக்கிறோம், நாளை இருக்கமாட்டோம்! நாமில்லாமலும் பூமி பலகோடி ஆண்டுகள் சுழன்றுகொண்டுதான் இருக்கும்! சக மனிதர்களின் உரிமையை மதிப்பது போல, இயற்கையின் இந்தக் கட்டுப்பாடுகளையும், அதன் எல்லைகளையும் மதிப்பதுதான் சரியான புரிதலாக இருக்கமுடியும்.