Reading Habit 
அறிவோம்

வாசிப்பின்பம்! #Reading

நம்மில் பலர் வீடுகளில் புத்தகங்களுக்கான இடமே கிடையாது. நம் வீட்டில் ஒரு சிறுவன் பள்ளிக்கூடம் செல்கிறான் என்றால், அவனது ஆண்டிறுதித் தேர்வு எப்போதடா முடிகிறது என்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அடுத்த நாளே புத்தகங்களை எடைக்குப் போட்டுவிடுகிறோம்.

ஆதி தாமிரா

கடந்த புத்தகக் காட்சியில் வாங்கியிருந்த ‘சதத் ஹசன் மண்டோ சிறுகதைகள்’, பெருமாள் முருகனின் ’பூனாச்சி’, நூலகத்திலிருந்து எடுத்து வந்த ‘மேடைப் பேச்சுக்கலை’, சென்ற வாரம் வெளியான பார்வை மாற்றுத்திறன் கொண்ட சாதனையாளர்கள் குறித்த கட்டுரைத் தொகுப்பான, ‘காண்பதெல்லாம் மறையுமென்றால்’, மற்றும் கடந்த சில மாதங்களில் வெளியான காமிக்ஸ் தொகுப்புகள் என படிக்க அத்தனைப் புத்தகங்கள் முன் வரிசையில் காத்திருந்த போதும், அதையெல்லாம் விட்டுவிட்டு பாரதிதாசனின் குடும்ப விளக்கை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன். உண்மையில் சிரித்துக்கொண்டிருந்தேன்.

நம்மில் பெரும்பாலான வீடுகளில் புத்தகங்களுக்கான இடமே கிடையாது. நம் வீட்டில் ஒரு சிறுவன் பள்ளிக்கூடம் செல்கிறான் என்றால், அவனது ஆண்டிறுதித் தேர்வு எப்போதடா முடிகிறது என்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அடுத்த நாளே புத்தகங்களை எடைக்குப் போட்டுவிடுகிறோம். அவை இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றனவாம். அவசியமற்ற பிளாஸ்டிக் குப்பைகளுக்கெல்லாம் இடமிருக்கும் நமது வீடுகளில், புத்தகங்களுக்கு மட்டும் இடமிருப்பதில்லை. பள்ளிப்புத்தகங்களுக்கே இந்த நிலைமை என்றால், கதை, கட்டுரை நூல்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! அதிகபட்சமாக சில வார இதழ்கள் வாங்கப்படும் வீடுகளில் கூட, அந்த வாரம் முடிவதற்குள்ளாகவே அவை எடைக்குப் போய்விடும்! ஆனால், புத்தகங்களை வாசிக்கிற, சேகரித்து வைத்திருக்கிற நண்பர்களையும் அரிதாகப் பார்க்கத்தான் செய்கிறோம். செல்வமணி எனும் எனது நண்பர் ஒருவர், அப்படி அவரது படுக்கையறை, வரவேற்பறை என வீட்டில் ஆங்காங்கே சுமார் 5 நூலக ரேக்குகளைப் போல போன்ற அலமாரிகளை உருவாக்கி, அவ்வளவு புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கிறார். அதுகூட பரவாயில்லை, 1980களில் வாங்கிப்படித்த வார இதழ்களைக் கூட எடைக்குப் போட மனமில்லாமல், வருட வாரியாக கட்டித்தூக்கி பரண்களில் போட்டுப் பத்திரமாக வைத்திருக்கிறார்.

உண்மையில் வாசிப்பு என்பது நமது முழுக் கவனத்தையும் கோரக்கூடிய உழைப்பு, ஒரு வேலை! ஒரு வேலையைச் செய்வதில் நமக்கு எப்போதும் விருப்பமிருப்பதில்லை. நாம் எப்போதும் ஓய்வையும், கேளிக்கையையும் மட்டுமே நாடுகிறோம். மனிதனுக்கு மட்டும் பசியில்லை எனில், இந்தப் பொருளாதார அவசியமில்லை எனில் யாராவது வேலைக்குப் போவார்களா என்ன? அப்படி எந்தப் பொருளாதார பலனுமில்லாத இந்த வாசிக்கிற வேலையை நாம் ஏன் செய்ய வேண்டும்? ஏன் செல்வமணி போன்ற ஒருசிலர் மட்டும் இப்படிச் செய்துகொண்டிருக்கிறார்கள்?

வாசிப்பினால் ஆவதென்ன?


1. வாசிப்பின்பம்


தமிழ்ச் சமூகமாக நாம் யாரையும் விட நம் மொழியைக் காதலிக்கிறோம், அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், காதலித்தால் மட்டும் போதுமா? காதலின் உண்மையான உணர்வை உவத்திட வேண்டாமா? நம் மொழிச்சிறப்பை அறிந்திட வேண்டாமா? வாசிக்காமல் அது எப்படி சாத்தியமாகும்? நான் ஏன் பாரதிதாசனைப் படித்துச் சிரித்துக் கொண்டிருந்தேன்? சில மூத்தோர் ஏன் கவியரங்க, பட்டிமன்ற மேடைகளில் கம்பரசத்தைப் பற்றிப் பேசிப் பேசி மாய்கிறார்கள்? அதுவே வாசிப்பின்பம்! மது சிலரை மயக்குகிறது, போலவே மொழி நம்மெல்லோருக்கும் மயக்கம் தருகிறது. ஒரு சின்னக் குழந்தையோடு செலவிடும் நேரத்தை எண்ணிப்பாருங்கள். பொம்மைகளை மோதிக்கொள்வது, பேப்பர்களை கிழித்துப்போடுவது, விதிகளை மீறி விளையாடுவது என அர்த்தமற்ற செயல்களோடும், பேச்சுக்களோடும் அந்தப் பொழுதை வாழ்கிறோம். மதி மயங்கிப் போகிறோம். அப்படியானதுதான் வாசிப்பும்! புற உலகை விட, நமது அக உலகத்திற்குள் அதிக பயணங்களுக்கு நம்மை இழுத்துச் செல்கின்றன புத்தகங்கள். பயணங்கள் குதூகலமானவை, நம் மனதை விசாலப்படுத்துபவை, சோர்ந்திருக்கும் உணர்வுகளை மீட்டெடுப்பவை! அதனால்தான் அந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

2. மொழியாளுமை


பாடப் புத்தகங்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நடையிலான (Academic style) தகவல்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. ஆனால், இலக்கியப் படைப்புகளையும், நாவல்களையும் வாசிக்கும்போது, மொழி எவ்வாறு உயிர்ப்புடன் கையாளப்படுகிறது என்பதை நம்மால் உணர முடியும். பன்முகத்தன்மை கொண்ட வாசிப்பு, புதிய சொற்களையும், அவற்றைச் சரியான இடத்தில் பயன்படுத்தும் நுணுக்கத்தையும் நமக்குக் கற்றுத் தருகிறது. ஒரு சூழல் அமைகையில் நம் கருத்தை அழகாகவும், ஆழமாகவும் வெளிப்படுத்தும் திறன் தானாகவே வந்து சேருகிறது.

3. ஆளுமைத்திறன்

அரசியல் கட்டுரைகள், சுயசரிதைகள் மற்றும் சமூக ஆய்வுக் கட்டுரைகளை வாசிப்பது, உலக நடப்புகளைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையை அளிக்கிறது. பாடப்புத்தகங்கள் தரவுகளைத் தருகின்றன. ஆனால், கட்டுரைகள் அந்த வரலாற்றின் பின்னால் உள்ள அரசியலையும், சமூக மாற்றங்களையும் புரியவைக்கின்றன. ஒரு நாவலை வாசிக்கும்போது, அதில் வரும் கதாபாத்திரங்களையும், சூழலையும் நம் மனக்கண்ணில் விரித்து உருவாக்கிக் கொள்கிறோம். இது நமது படைப்பாற்றல் திறனைத் (Creative thinking) தீவிரமாகத் தூண்டுகிறது. சிக்கலான சூழல்களில் கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளைப் படிக்கும்போது, நிஜ வாழ்க்கையிலும் புதிய தீர்வுகளைக் காணும் திறன் (Interpretation) வளர்கிறது. வாசிப்பின் மூலமே நாம் விரிவான கண்ணோட்டங்களைப் பெறுகிறோம். ஒரு தத்துவவாதியின் பார்வையை, ஒரு சாமானியனின் வலியை, ஒரு வீரனின் தியாகத்தை, ஒரு காதலியின் துயரை நாமும் அனுபவிக்கிறோம். இவை அனைத்தும் சக மனிதர்களோடு உணர்வுப்பூர்வமான ஒன்றுதலை (Affective Empathy) மேம்படுத்துகின்றன. நாம் செல்ல முடியாத இடங்களையும், உணர முடியாத அனுபவங்களையும் வாசிப்பு நமக்குக் காட்டுகிறது. 

பாடப்புத்தகங்கள் ஒரு மாணவனின் அறிவார்ந்த உலகை தொடங்கிவைக்கின்றன என்றால், பிற வாசிப்புகளே அந்த அறிவைச் செழுமைப்படுத்தி அவனை மேம்படுத்துகின்றன. அனைவரும் தங்களுக்குப் பிடித்தமான துறைகளில் ஆழமான வாசிப்பை மேற்கொள்ள வேண்டும். வாசிப்பு என்பதே இந்தச் சிறிய வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கான மற்றும் நேசிப்பதற்கான மிகச் சிறந்த வழி!

Bharathidasan

கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே!
குகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!

  
என்று நம் ரத்தத்தில் திராவிட நெருப்பைச் சேர்த்த பாரதிதாசன் சிரிக்கவும் வைத்தாரா என்று உங்களுக்கு தோன்றியிருக்கலாம். அதற்கான விடை வேண்டுமல்லவா, உங்களுக்கு? இதோ, குடும்ப விளக்கின் அந்தப்பகுதி.

வெளியூரிலிருக்கும் நாத்தனார் வீடு சென்ற ’தங்கத்தி’ன் மாமனும், மாமியும் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். அவர்களை வரவேற்று வாங்கிவந்திருக்கும் பொருள்களை வண்டியிலிருந்து இறக்குகிறாள் தங்கம். பொருள்களின் குவியலைப் பார்த்து மலைத்த தங்கம், மாமியாரைப் பார்த்து எப்படி இவ்வளவு பொருட்களைக் கொண்டு வந்தீர்கள் என்று கேட்கிறாள். அதற்கு இருவரும் பதிலளிக்கிறார்கள். என்ன பதில் என்பதை சற்றே பொறுமையாகக் கீழே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்!


நாத்தியார் வீடு சென்ற
நன்மாமன், மாமி வந்தார்.
பார்த்தனள்; உளம் மகிழ்ந்தாள்.
பறந்துபோய்த் தெருவில் நின்று
வாழ்த்திநல் வரவு கூறி
வணக்கத்தைக் கூறி, "என்றன்
நாத்தியார், தங்கள் பேரர்
நலந்தானா மாமி" என்றாள்.
வண்டிவிட் டிறங்கி வந்த
மாமியும், மாமனும், கற்
கண்டொத்த மரும கட்குக்
கனியொத்த பதிலுங் கூறிக்
கொண்டுவந் திட்ட பண்டம்
குறையாமல் இறக்கச் சொன்னார்.
வண்டியில் இருந்த வற்றை
இறக்கிடு கின்றாள் மங்கை.


கொஞ்சநாள் முன்வாங் கிட்ட
கும்ப கோணத்துக் கூசா,
மஞ்சள், குங்குமம், கண்ணாடி,
மைவைத்த தகரப் பெட்டி,
செஞ்சாந்தின் சீசா,சொம்பு,
வெற்றிலைச் சீவற் பெட்டி,
இஞ்சியின் மூட்டை ஒன்றே,
எலுமிச்சைச் சிறிய கோணி,

புதியஓர் தவலை நாலு,
பொம்மைகள், இரும்புப் பெட்டி
மிதியடிக் கட்டை, பிள்ளை
விளையாட மரச்சா மான்கள்;
எதற்கும்ஒன் றுக்கி ரண்டாய்
இருக்கட்டும் வீட்டில் என்று
குதிரினில் இருக்கும் நெல்லைக்
குத்திட மரக்குந் தாணி;

தலையணை, மெத்தைக் கட்டு,
சல்லடை, புதுமு றங்கள்,
எலிப்பொறி, தாழம் பாய்கள்;
இப்பக்கம் அகப்ப டாத
இலுப்பெண்ணெய், கொடுவாய்க் கத்தி,
இட்டலித் தட்டு, குண்டான்,
கலப்பட மிலாநல் லெண்ணெய்;
கைத்தடி,செந்தா ழம்பூ;

திருமணம் வந்தால் வேண்டும்
செம்மரத் தினில்முக் காலி;
ஒருகாசுக் கொன்று வீதம்
கிடைத்த பச்சரிசி மாங்காய்;
வரும்மாதம் பொங்கல் மாதம்
ஆதலால் விளக்கு மாறு;
பரிசாய்ச் சம்பந்தி தந்த
பாதாளச் சுரடு, தேங்காய்;

மூலைக்கு வட்டம் போட்டு
முடித்தமே லுறையும், மற்றும்
மேலுக்கோர் சுருக்குப் பையும்
விளங்கிடும் குடை, கறுப்புத்
தோலுக்குள் காயிதத்தில்
தூங்கும்மூக் குக்கண் ணாடி,


சேலொத்த விழியாள் யாவும்
கண்டனள் செப்ப லுற்றாள்:
"இவையெல்லாம் வண்டிக் குள்ளே
இருந்தன என்றால் அந்த
அவைக்களம் தனிலே நீவிர்
எங்குதான் அமர்ந்திருந்தீர்?
சுவைப்புளி அடைத்து வைத்த
தோண்டியின் உட்பு றத்தில்
கவர்ந்துண்ணும் பூச்சி கட்கும்
கால்வைக்க இடமிராதே?"

என்றனள்; மாமி சொல்வாள்:
"இவைகளின் உச்சி மீதில்
குன்றுமேல் குரங்கு போல
என்றனைக் குந்த வைத்தார்!
என்தலை நிமிர, வண்டி
மூடிமேல் பொத்த லிட்டார்;
உன்மாமன் நடந்து வந்தார்.
ஊரெல்லாம் சிரித்த" தென்றாள்!


"ஊரெல்லாம் சிரிக்க வைத்தேன்
என்றாளே உன்றன் மாமி!
யாரெல்லாம் சிரித்து விட்டார்?
எனஉன்றன் மாமியைக் கேள்;
பாரம்மா பழுத்த நல்ல
பச்சைவா ழைப்ப ழங்கள்!
நேரிலே இதனை யும்பார்
பசுமாட்டு நெய்யின் மொந்தை!

வண்டியில் எவ்வி டத்தில்
வைப்பது? மேன்மை யான
பண்டத்தைக் காப்ப தற்குப்
பக்குவம் தெரிந்தி ருந்தால்
முண்டம்இப் படிச் சொல்வாளா?
என்னதான் முழுகிப் போகும்
அண்டையில் நடந்து வந்தால்?"
என்றனன், அருமை மாமன்.

- பாவேந்தர் பாரதிதாசன்