Obession Gemini AI Image
அறிவோம்

பீரோவில் இருக்கும் நூறு சேலைகளின் கதை!

இந்த விசயத்தில் பெண்களின் அணுகுமுறை வேறாக இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பொருள் என்பது பயன்பாட்டைப் பொருத்தது மட்டுமல்ல, அது ஒரு 'அடையாளம்' மற்றும் 'உணர்வின்’ (Symbolic and Aesthetic) வெளிப்பாடு.

ஆதி தாமிரா

கொஞ்ச நாட்களாக, தினம் தவறாது நடைப்பயிற்சிக்குப் போவதால், எனது காலணிகள் தேய்ந்துபோய், அவற்றுக்கான மாற்றம் நிச்சயம் தேவைதான் எனும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்காகக் கடைக்குப் போய், நான் ஒன்றைத் தேர்வு செய்தால், என்னுடன் வந்திருந்த மனைவி, அவருக்கான ஒன்றைத் தேர்வு செய்யும் முனைப்பிலிருந்தார். யாருக்காக செருப்பு வாங்க கடைக்கு வந்தோம் என்பது அவருக்கு முக்கியமான விசயமாகப் படவில்லை போலிருக்கிறது. அவரிடம் ஏற்கனவே ஐந்து ஜோடி செருப்புகள் இருக்கின்றன. கேட்டால் ஒவ்வொரு ஜோடி செருப்புக்கும் ஒவ்வொரு காரணம் சொல்வார். அந்த விளக்கத்துக்குள், நாம் இப்போது போக வேண்டாம். ஆனால், பெண்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்?

காலணிகள், நகைகள், ஆடைகள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பெண்கள் ஏன் அவசியத்தையும் மீறி, பொருட்களால் இப்படி ஈர்க்கப்படுகிறார்கள்? ஆண்களால் ஒரு காலணியை வைத்துக்கொண்டு எந்தத் தொல்லையும் இல்லாமல் வாழ முடிகிறது. பெண்களிடம் ஐந்து இருக்கும் போதும், ஒன்று பழசாகிக் கொண்டிருக்கிறது, ஆறாவதை வாங்கியாக வேண்டும் எனும் பதற்றம் ஏற்பட்டுவிடுகிறது. 4 சட்டைகள், 4 பேண்டுகள் என வைத்திருக்கும் ஆண்கள் நிம்மதியாக வேலைக்கோ, ஒரு விசேஷத்துக்கோ கிளம்பிவிட முடிகிறது. ஆனால், ஏராளமான உடைகள் வைத்திருக்கும் பெண்களால், சட்டென ஓர் இடத்துக்குக் கிளம்பிவிட முடிவதில்லை. என்னிடம் போட்டுக்கொள்ள ஒரு நல்ல உடை இல்லை என்றே பரிதவிக்கிறார்கள். இந்தத் தீவிரத்தன்மை அவர்களுக்கு எப்படி ஏற்படுகிறது?

ஆண்கள் ஒரு பொருளை, அதன் 'பயன்பாட்டை' (Function) வைத்து மட்டுமே பார்க்கிறார்கள். ’செருப்பு எதற்காக? நடப்பதற்காக! ஒரு சமயத்தில் ஒரு செருப்பைத்தான் அணிய முடியும். இப்போது இருப்பது செயல்படுகிறதா? ஆம். என்றால், இன்னொன்று எதற்காக?’- இதுதான் ஆண்களின் தர்க்கம்.

இந்த விசயத்தில் பெண்களின் அணுகுமுறை வேறாக இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பொருள் என்பது பயன்பாட்டைப் பொருத்தது மட்டுமல்ல, அது ஒரு 'அடையாளம்' மற்றும் 'உணர்வின்’ (Symbolic and Aesthetic) வெளிப்பாடு. செருப்பு என்பதை வெறுமனே நடப்பதற்கான கருவியாக மட்டுமல்ல, அது அணியும் உடைக்குப் பொருத்தமானதாக உள்ளதா, போகும் நிகழ்ச்சிக்குச் சரியானதாக இருக்குமா, அந்த நாளில் அவர்களின் மனநிலைக்கு ஒத்துப்போகிறதா எனப் பல பரிமாணங்களில் அவர்கள் யோசிக்கிறார்கள். இது அவர்களின் உள்ளுணர்வு, இயல்பு! இதைத்தான் இந்த ஆண்களின் சமூகம், பொறுப்பற்றத் தீவிரம் (Obsession) என்று முத்திரைக் குத்தி வைத்திருக்கிறது. 

அப்படியானால், ஆண்களுக்கு இப்படியாக பொருட்களின் மீதான அப்சஷன் கிடையாதா? அதுதான் இல்லை! அவர்களுக்கும் அந்த குணம் உண்டு!

Obession

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தயாரான பழமையான கார்களை, இன்றளவும் மிகச்சிறப்பான முறையில் பராமரித்து வருவோரைப் பற்றிப் பல கட்டுரைகளைப் படித்திருக்கிறோம். அவர்களின் கார்கள்தான் ‘பீரியட்’ சினிமாக்களிலும் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் அறிவோம். அவர்கள் வரலாற்று வாகனப் பாதுகாவலர்கள் (Automotive Preservationists) எனப்படுகிறார்கள். இது பெரும் பணக்கார்களின் பொழுதுபோக்கு. அதோடு இவர்கள் கார்களை வெறும் பொருளாகப் பார்க்காமல், ஒரு காலத்தின் வரலாற்றைப் பாதுகாக்கும் ஆவணங்களாக, அந்தந்தக் காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றும் சாட்சிகளாக இவர்கள் கார்களைப் பராமரிக்கிறார்கள், அதனால் இவற்றை பெண்களின் அப்சஷனோடு ஒப்பிட முடியாது என்றும் சொல்ல முடியும்.

ஆனால், எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். மாதம் 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு சாதாரண நபர்தான். அவரது வீட்டுக்கு ஒரு நாள் போயிருந்தபோதுதான் அந்த விசயத்தை அறிந்து வியந்து போய்விட்டேன். உலகெங்கிலுமிருந்து 42 வித்தியாசமான கைக்கடிகாரங்களைச் சேர்த்து வைத்திருந்தார். ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த, வெவ்வேறு விலைகள், தரங்களிலான கைக்கடிகாரங்கள். ஆச்சரியமாகிப்போய் கேட்டபோது, ‘நான் ஒரு வாட்ச் கலெக்டர்’ என்றார். அவரால் இது எப்படி முடிந்தது? ஒருமுறை ஒரு அரிய கடிகாரம் சந்தைக்கு வந்தபோது வங்கியிலிருந்த லட்சங்களிலான சேமிப்போடு, அந்த மாதத்தின் முழு சம்பளத்தையும் கூடுதலாகப் போட்டால்தான் அதை வாங்க முடியும் எனும் நிலை. எந்தத் தயக்கமும் இல்லாமல் அவர் அதை வாங்கிவிட்டார் என்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.  

இப்படியே பேனாக்களின் மீது காதல் கொண்டவர்கள், விடியோ கேம்கள் மீது பித்துப் பிடித்து அலைபவர்கள், சின்னச்சின்ன தொழில்நுட்பக் கருவிகள் (Gadgets) மீது ஆர்வம் கொண்டவர்கள் என எத்தனையோ ஆண்கள், எவ்வளவோ பொருட்கள் மீதான அப்சஷனில்தான் இருக்கிறார்கள். அதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

உண்மை இப்படியிருக்க, பெண்களின் இந்த இயல்பை மட்டும் 'தேவையற்றது', ’அலட்சியமான செலவு’ மற்றும் ‘தீவிர விருப்பம்’ (Obsession) என்ற முத்திரையைக் குத்துகிறது இந்தச் சமூகம். ஆண்கள் என்று வருகையில், வாகனப்பாதுகாவலர் (Automotive Preservationists), பழம்பொருள் சேகரிப்பாளர் (Antique Collector), பேனா ஆர்வலர் (Pen Enthusiast), டெக் பொருட்கள் நிபுணர் (Gadget Freak), இசைக் காதலர் (Audiophile), டிஜிடல் கேமர் (Hardcore Gamer) என்று விதவிதமான பெயர்களையும், அவற்றுக்குக் கூடுதலான பொருளாதார, உளவியல் காரணங்களையும் சொல்லி அழகு பார்க்கிறது. அவற்றின் மீது ஒரு கண்ணியமான பார்வையைக் கட்டமைக்கிறது.

உண்மையில், ஆண், பெண் பாகுபாடில்லாமல் மனிதர்கள் எல்லோருமே பொருட்களின் மீது ஒருவித ஈர்ப்பைக் கொண்டுள்ளனர். அவர்கள் தேர்வு செய்யும் பொருட்களில் ஒரு மனநிறைவைத் தேடுகிறார்கள். ஆண்களால் அவர்களின் இந்தக் குணத்தை மிக எளிதில்  அறிவுசார் ஆர்வம் (Intellectual Pursuit) என்று நியாயப்படுத்திக் (Rationalization) கொள்ள முடிகிறது. பெண்களால் அது முடிவதில்லை, அல்லது அவர்களை நாம் அப்படிச் செய்ய விடுவதில்லை!