நடிகர் விஜய்யின் சமீபத்திய தேர்தல் பரப்புரை ஒன்றில், அவரது காரைச் சுற்றி ஆணும், பெண்ணுமாய் இளைஞர்கள் ஒரு கூட்டமாய் நெருக்கியடிக்கும் ஒரு விடியோ வைரலாகியுள்ளது. அந்த ஆபத்தான நெருக்கடியும், அப்போது அவர்களிடம் வெளிப்பட்ட பரவசமான முகபாவங்களும் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றன.
ஒரு புகழ்பெற்ற நடிகரோ அல்லது மக்களிடம் அதிகமாக சென்றடைந்திருக்கும் ஒரு விஐபியோ அரசியலுக்கு வருவதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஒரு ஜனநாயக நாட்டில் நீங்கள், நான் என அத்தனை பேருக்கும் அரசியலுக்கு வருவதற்கும், மக்களிடம் சென்று நமது கருத்துக்களை, சிந்தனைகளை, செயல்திட்டங்களை எடுத்துச் சொல்வதற்கும், மக்கள் பணியாற்றிட வாய்ப்புக் கேட்டு நிற்பதற்கும் உரிமை இருக்கிறது. ஆனால், விஐபிக்கள் ஒரு பொதுவெளிக்கு வரும்போது மட்டும், ரசிகர்கள் ஏன் இத்தனை போதை மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியதிருக்கிறது.
இது போன்ற நிகழ்வுகள் இங்கு மட்டுமல்ல, உலகளாவிய அளவில், அரசியல், கலை, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் எப்போதும் நடப்பவைதான். குறிப்பாக, தி பீட்டில்ஸ் (The Beatles), மைக்கேல் ஜாக்ஸன் (Michael Jackson), கொரிய இசைக்குழுக்களின் (K-Pop) நிகழ்ச்சிகளிலும், ரசிகர் சந்திப்புகளிலும் கூட்ட நெரிசல் மட்டுமல்ல, மனதளவிலேயே அந்த ரசிக மனநிலையின் எக்ஸ்டஸியைத் தாள முடியாமல் மயங்கி விழுபவர்களும் இருக்கிறார்கள். அது ஒரு போதைப்பொருள் தரும் மனமயக்கத்தை விட மிகவும் வீரியமானதாக இருக்கிறது.
ஆனால், இந்த மனநிலை, எப்படி உருவாகிறது? இந்த ரசிக உளவியல் (Psychology of Fandom) நிலையை உளவியலாளர்கள் பல கோணங்களில் அணுகுகிறார்கள்.
பாரா-சோஷியல் தொடர்பு (Parasocial Interaction): ரசிகர்களுக்கும் அந்த நட்சத்திரத்திற்கும் இடையே எவ்வித நேரடித்தொடர்பு இல்லாதபோதும், அந்த நட்சத்திரத்தை மனதளவில் மிக நெருக்கமானவராகக் கருதும் மனநிலையே பாரா-சோஷியல் தொடர்பு எனப்படுகிறது. இது அந்த நட்சத்திரத்தின் வெற்றியை அவர்களின் வெற்றியாகவும், சோகத்தை அவர்களின் சோகமாகவும் மாற்றுகிறது. யாரோ ஒரு நடிகருக்கு, இப்படியான முதிர்ச்சியற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று இதை நாம் கடந்துபோய்விட முடியாது. ஆழ்ந்து சிந்தித்தால், நம் எல்லோருக்குமே இப்படியான ஒரு போதை, ஏதோ ஒரு விசயத்தில் இருப்பதைக் கண்டுகொள்ள முடியும். எனக்கு பிரபலமான விடியோ கேம் கதாபாத்திரமான ‘லாரா கிராஃப்ட்’ மீது கிட்டத்தட்ட இப்படியானதொரு ஈடுபாடு இருக்கிறது. லாராவின் ஒரு புதிய கேம் வெளியானால், அது இதுவரையிலான கேம் விற்பனையின் சாதனைகளையெல்லாம் அடித்து வீழ்த்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பாருங்கள், இதை எழுதும்போது கூட நடுநிலையோடு, ‘விடியோ கேம் கதாபாத்திரம்’ என்று குறிப்பிடாமல், ‘பிரபலமான விடியோ கேம் கதாபாத்திரம்’ என்று அதை உங்கள் மீதும் வலியுறுத்த முனைகிறேன். நாஞ்சில்நாடன் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர். ஆனால், நாஞ்சில் மட்டுமே அனைவரிலும் தலைசிறந்தவர் என்று ஒவ்வொரு முறை பேசும் போதும், நிலைநிறுத்தப் போராடும் ஒரு நண்பரை நான் அறிவேன்.
கூட்டு உற்சாகம் (Collective Effervescence): எமில் துர்கைம் (Émile Durkheim) எனும் சமூகவியலாளர் உருவாக்கிய சொல் இது. ஒரு பெரிய கூட்டமாக இணையும்போது, தனிமனித உணர்வுகள் அங்கே மறைந்து, கூட்டத்தின் ஒட்டுமொத்த உணர்வு, ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடுகிறது. அங்கே, தனிமனிதன் தனது சொந்த விருப்பத்தை இழந்து, கூட்டத்தின் துள்ளலுக்கும், உற்சாகத்திற்கும் தன்னை இழந்துவிடுகிறான். ஒரு சினிமாவை, உதாரணமாக கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ படத்தை எடுத்துக்கொள்வோம். அதை நாம் தியேட்டரில் காணும் போது அவ்வளவு அட்டகாசமாக இருந்தாக உணர்ந்தோம். ஆனால், அதே படத்தை நம்மால் ஓடிடியில் பார்க்கும் போது அந்த உணர்வு கிடைக்கவில்லை, தூக்கம்தான் வந்தது. ஒரு நடிகை ஒரு நகைக்கடைத் திறப்புவிழாவுக்கு வரும்போது, ஆயிரம் பேர் முண்டியடித்துக் கொண்டிருந்தால், நாமும் அந்தக் கூட்டத்தில் முண்டியடித்துப் போய் அவரைப் பார்ப்பதில் நமக்கு தயக்கமிருப்பதில்லை. ஆனால், அதே நடிகையை வரவேற்க அந்தக் கடை சார்பில் நான்கு பேர் மட்டுமே நின்றுகொண்டிருந்தார்கள் எனில், நாம் அவரைப் பார்ப்பதற்குக் கூட தயங்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுவோம். இதுவே கூட்டு உற்சாகம் (Collective Effervescence) எனப்படுகிறது. இது நமது தயக்கங்களையெல்லாம் உடைக்கிறது.
டோபமைன் மற்றும் அட்ரினலின் (Dopamine & Adrenaline): நமது வெற்றிகளிலும், உற்சாகத்திலும் மூளையில் சுரக்கும் 'டோபமைன்', இது போன்ற சந்திப்புகளிலும் பெருமளவில் உருவாகிறது. இது ஒரு போதைப் பொருளுக்கு இணையான உணர்வைத் தருகிறது. இதனால் வலி, அசதி, ஆபத்து போன்ற எதையும் நாம் உணர்வதில்லை. சிந்திக்கவியலாத அதீத உணர்ச்சிப் பெருக்கு நிலையை ஏற்படுத்துவது இதுதான்.
இதனால் ஏற்படும் சிக்கல்கள் என்ன?
இந்த அதீத உணர்ச்சிப் பெருக்கம் எனும் போதை நிலை நம்மைச் சுற்றி நிகழும் ஆபத்துகளை உணரவிடாத நிலைமைக்கு நம்மைக் கொண்டுபோய் விடுகிறது. மூச்சுவிட முடியாத அளவிலான நெரிசலில் சிக்கப் போகிறோம் எனும் முன்னுணரும் சென்ஸை இழக்கிறோம். கூட்டத்தின் உந்துதலால் எதையும் யோசிக்காமல் செயல்படும் மந்தை மனநிலைக்கு (Herd Mentality) உள்ளாகிறோம். ஒரு தனிமனிதன், சுயமாக சிந்திக்கும் திறனை, பகுத்தறியும் திறனை இழந்து, பதற்றத்தில், தமக்கும், தம்மைச் சுற்றியிருப்போருக்கும் பெரும் சேதத்தை விளைவிக்கிறான்.
இதை எப்படிச் சரி செய்ய முடியும்?
தனி மனிதர்களாக மட்டுமல்ல, ஒரு சமூகமாகவும் இந்த மனநிலையை நாம் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
ரசிகர்களின் விழிப்புணர்வு: ’அவர் என் விருப்பத்திற்குரிய கலைஞர்தான், ஆனால் அவர் எனது வாழ்க்கையின் ஆதாரம் அல்ல’ என்ற தெளிவு ஒவ்வொரு ரசிகனுக்கும் அவசியம். ரசிகனாக இருப்பது மகிழ்ச்சி தர வேண்டும், ஆனால், அது நமது உடல்நலத்தையோ, பாதுகாப்பையோ பணயம் வைப்பதாக இருக்கக்கூடாது. சினிமா, கலை, மதம் என்பன தனிமனிதத் தேர்வுகள் மட்டுமே. அதையும் தாண்டி சிந்தனை முதிர்ச்சி, சுயமரியாதை, சுயமுன்னேற்றம், கல்வி மற்றும் தனிப்பட்ட இலக்குகள் ஆகியன மிக முக்கியமானவை எனும் புரிதல் வர வேண்டும். நாம் தக்காளி வாங்க காய்கறிக் கடையில் நிற்கும்போது, பக்கத்தில் நயன்தாரா வந்து நின்று வெங்காயம் வாங்க முற்பட்டாலும், அவரைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை பூத்துவிட்டு, நாம் நமது தக்காளியில் கவனம் செலுத்துவதுதான் நிஜமான முதிர்ச்சி, சுய மரியாதை!
ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பு: இது போன்ற கூட்டங்களைக் கையாளும்போது, கூட்ட ஒருங்கிணைப்பு (crowd management) உத்திகளை, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு அரண்கள், முதலுதவி வசதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்களிடம் பாதுகாப்பு குறித்து அடிக்கடி வலியுறுத்த வேண்டும். ’உங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்கள் எனக்கு ஒருபோதும் மகிழ்ச்சி தராது’ என்ற செய்தியை அவர்கள் முன்னெடுப்பது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.
சமூக மாற்றம்: சினிமா மோகத்தை விட, அறிவு சார்ந்த தேடல்கள் மற்றும் சமூகப் பொறுப்புகளை முன்னிலைப்படுத்தும் கலாச்சாரத்தை ஒரு சமூகமாக நாம் உருவாக்கிட வேண்டும். பொழுதுபோக்குகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வைத்துக்கொள்ளும் பக்குவத்தை இளைய தலைமுறைக்குக் கற்பிக்க வேண்டும். இதற்கு, டிவி, பத்திரிகைகள், இணையதளங்கள் என மீடியாக்களுக்கு முக்கியப் பொறுப்பு இருக்கிறது. ஆனால், சொந்த விருப்பு வெறுப்புகள், லாப நோக்கங்கள் சார்ந்து இத்தகைய மனநிலையை ஊக்குவிக்கும் வண்ணமே, அவர்களுள் பெரும்பாலானோரின் செயல்பாடுகள் இருக்கின்றன என்பது நமது துர்பாக்கியம்!
ஒருவர் மீது அன்பு செலுத்துவதும், அவரைக் கொண்டாடுவதும் மனித இயல்பு. ஒரு கலைஞரையோ அல்லது தலைவரையோ நேசிப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், அந்த அன்பு நம்முடைய சுயத்தையும், பாதுகாப்பையும், பகுத்தறிவையும் இழக்கச் செய்யவதாக இருக்கக்கூடாது. ஒரு ரசிகனின் அடையாளம் என்பது அவன் எவ்வளவு தீவிரமாக அவரைப் பின் தொடர்கிறான் என்பதில் இல்லை, அவன் எவ்வளவு முதிர்ச்சியுடன் அந்த அன்பை வெளிப்படுத்துகிறான் என்பதில்தான் இருக்கிறது.