Competitive Exams Gemini AI Image
அறிவோம்

அரசுப்பணித் தேர்வுகள் எனும் பெரிய இலக்குகள்!

தமிழ்நாட்டின் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) முதல் தேசிய அளவிலான UPSC வரை, போட்டித் தேர்வுகள் என்பன, கல்வியறிவைச் சோதிக்கும் களமாக மட்டுமல்ல, அது இளைஞர்களின் உளவியல் வலிமையைச் சோதிக்கும் களமாகவும் இருக்கிறது.

ஆதி தாமிரா

சமீபத்தில் TNUSRB எனும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்காக, உறவுக்கார இளைஞர் ஒருவருக்காக, வழிகாட்டும் பணியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவர் இரண்டாவது முறையாக முயற்சிக்கிறார், அதனால் இந்த முறை தவறவிட்டு விடக்கூடாது எனும் தீவிரம் அவரிடமிருந்தது. ஆனால், அந்தத் தீவிரமே ஒரு பயத்தையும் அவரிடம் ஏற்படுத்தியிருந்தது. பாடங்களைக் கற்றுக்கொடுப்பதை விடவும், அவருக்கிருந்த பயத்தைப் போக்கவே அதிக மெனக்கெட வேண்டியிருந்தது. அதற்குக் காரணமில்லாமலில்லை. இந்தத் தேர்வு வடிவத்தைக் கொஞ்சம் கவனியுங்கள்.

1. தமிழ் தகுதித் தேர்வு. 80 கேள்விகள், 80 மதிப்பெண்கள், 32 மதிப்பெண்கள் அதாவது 40% எடுத்தால் தகுதி பெற்றுவிடலாம்.


2. முதன்மைக் கேள்வித்தாள். 70 கேள்விகள், 70 மதிப்பெண்கள். இதுவே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

3. உடற்தேர்வு (24) மற்றும் சிறப்புச் சான்றிதழ் (6) மதிப்பெண்கள் மொத்தம் 30.

முதல், மற்றும் மூன்றாவதை, சீருடைப்பணிக்கான அடிப்படைத் தேவையில் சேர்த்துவிடலாம். குறிப்பாக என் உறவுக்கார இளைஞர் உடற்தேர்வில் முழு மதிப்பெண்கள் பெறுகிறார் என்ற கணிப்புடன் இரண்டாம் பகுதியான 70 மதிப்பெண்களுக்கு வாருங்கள். அவரிடம் சிறப்புச் சான்றிதழ் இல்லை என்று கொண்டால், அவர் முன்னாலிருப்பது மொத்தம் 94 மதிப்பெண்கள். OBC  இளைஞராக இருப்பதால் அவர் எடுக்க வேண்டியது சுமார் 85 முதல் 90 மதிப்பெண்கள். இதுவே, அவர் OC  இளைஞராக இருந்தால், எடுத்தாக வேண்டிய மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? சுமார் 90 முதல் 95 மதிப்பெண்கள்! SC/ST  இளைஞராக இருந்தால், எடுக்க வேண்டியது சுமார் 80 முதல் 85. உடற்தேர்வில் முழுமையாக 24 எடுத்த, ஒரு OBC இளைஞர், எழுத்துத் தேர்வில் மிகக் குறைந்தபட்சமாக 70க்கு 61 மதிபெண்கள் எடுத்தாக வேண்டும். 1 இருக்கைக்காக சுமாராக 100 பேர் போட்டியிடும் நிலையில் இது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அந்த 70 மதிப்பெண்ணுக்கான சிலபஸ் என்னவென்பதைப் பார்க்கும் போது போட்டியாளர்ளின் சிரமத்தைப் புரிந்துகொள்ளலாம். 6 முதல் 10 வகுப்புகள் வரையிலான (மொழிப்பாடங்கள் தவிர்த்த) பள்ளிப் பாடங்கள் அனைத்தையும், அதன் ஆழ, அகலத்தோடு, தற்போதைய உலகளாவிய அரசியல், பொருளாதார, விளையாட்டுப் பொது அறிவையும் அவர் சேகரித்தாக வேண்டும். கிராமப்புறப் பள்ளிகளிலிருந்து வெளிவரும்  இளைஞர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாவது இந்தக் காரணத்தால்தான்!


தமிழ்நாட்டின் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) முதல் தேசிய அளவிலான UPSC வரை, போட்டித் தேர்வுகள் என்பன, கல்வியறிவைச் சோதிக்கும் களமாக மட்டுமல்ல, அது இளைஞர்களின் உளவியல் வலிமையைச் சோதிக்கும் களமாகவும் இருக்கிறது. பல ஆண்டுகள் உழைப்பு, சமூக அழுத்தம் மற்றும் தோல்வி பயம் ஆகியவற்றிற்கு இடையே இளைஞர்கள் பல சவால்களை, எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

மாணவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்:


தேர்வு அறிவிப்பு வருவதிலிருந்து, தேர்வு முடிந்து பணி நியமனம் கிடைக்கும் வரை மாதக்கணக்கில், சிலநேரம் ஆண்டுகணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இது ஒருவித சலிப்பையும், நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்குகிறது. ’எப்போது வேலை கிடைக்கும்?’, ’இன்னும் எவ்வளவு நாட்கள்தான் படித்துக்கொண்டேயிருப்பாய்?’ என்ற உறவினர்களின் கேள்விகள் சமூக அழுத்தமாக மாறி மாணவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைக்கின்றன. பாடத்திட்டம் கடல் போல இருப்பதால், எதைப் படிப்பது, எதை விடுவது என்ற குழப்பம் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. சமூக வலைதளங்களில் மற்றவர்கள் வேலைக்குச் செல்வதையும், வாழ்க்கையில் முன்னேறுவதையும் பார்த்து, நாம் மட்டும் ஓரிடத்தில் தேங்கி நிற்கிறோமோ, "இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் வேலை கிடைக்காவிட்டால்?" என்ற பயம் அவர்களை வாட்டுகிறது.

Challenges in Exam preparations

இவற்றை எப்படி எதிர்கொள்வது?


மன அழுத்தம் ஒரு சுமையாக மாறிவிடாத வண்ணம், அதைத் திட்டமிடுதல் மூலம் சரியாகக் கையாள வேண்டும். கடல் போன்ற பாடத்திட்டத்தை ஒரு பெரிய மலையாகப் பார்த்துப் பிரமிக்காதீர்கள். முதலில் அதைச் சிறிய இலக்குகளாகப் (Micro-Planning) பிரியுங்கள். ஒரு மாத இலக்கு, ஒரு வார இலக்கு, ஒரு நாள் இலக்கு எனப் பிரித்து, அந்த ஒரு நாளை மட்டும் வெற்றிகரமாக முடிக்கப் பழகுங்கள். ஒவ்வொரு சிறிய வெற்றியும், அடுத்த நாள் படிப்பதற்கான உற்சாகத்தைத் தரும். தொடர்ந்து பல மணிநேரம் படிப்பது மூளையைச் சோர்வடையச் செய்கிறது. அதனால், இப்படித் தயாராகும் நாட்களில், தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடம் நடைப்பயிற்சி அல்லது யோகா செய்வது ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, நினைவாற்றலை (Memory Retention) அதிகரிக்கும். தொடர்ந்து படிப்பதற்கான மனநிலையைத் தரும். படிப்புக்காக ஒருபோதும் உறக்கத்தைக் குறைக்காதீர்கள். அது உங்களை மேலும் பலவீனப்படுத்திவிடும், 7 மணிநேர உறக்கம் என்பது அவசியம். செல்போன் சார்ஜ் செய்யப்படுவதைப்போல, நல்ல உறக்கம்தான் உங்கள் திறனை மீட்டெடுக்கிறது. தேர்வுக்காலங்களில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் 'வெற்றிகரமான' வாழ்க்கையோடு உங்களை ஒப்பிட்டு சஞ்சலப்படுவதை இது தடுக்கும்.

போட்டித் தேர்வுகள் என்பன கடுமையான தகுதிநீக்க நடவடிக்கை (Elimination Process) ஆகும். ஒரு தேர்வில் தோல்வி அடைந்தால், அது உங்கள் அறிவின், திறமையின் தோல்வி அல்ல, அந்தத் தருணத்திற்கான வாய்ப்பு நழுவியது என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். பொருளாதாரச் சிக்கல் இருக்குமானால், ஒரு தனியார் வேலை, பகுதி நேர வேலை, சிறுதொழில் போன்ற ஏதாவது ஒரு தற்காலிக மாற்றுவழியை (Back-up Plan) வைத்திருப்பது உங்களின் தீவிரமான பயத்தைக் குறைத்து, தேர்வை இன்னும் நிதானமாக எழுத உதவும்.

பெற்றோர்களுக்கான பங்கு:


மாணவர்களை விடப் பெற்றோர்கள் நிதானமாக இருக்க வேண்டியது மிக அவசியம். ’நீ கண்டிப்பாக வென்றே ஆகவேண்டும்’ என்ற அழுத்தத்தைத் தராமல், ’உன்னால் முடிந்தவரை முயற்சி செய், நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்’ என்ற ஆதரவான வார்த்தைகளே ஒரு மாணவனுக்கு மிகப்பெரிய ஊக்கத்தையும், பொறுப்பையும் தரும்.

விடாமுயற்சியும் (Consistency), திட்டமிடலும் (Planning), மன உறுதியும் (Resilience) இருந்தால் எந்தத் தேர்வையும் வெல்ல முடியும். ஆனாலும், போட்டித் தேர்வுகள் வாழ்க்கையின் ஒரு பகுதிதான், அது மட்டுமே உங்கள் வாழ்க்கையைத் தீர்மானித்துவிட முடியாது. இந்தத் தேர்வுகளில் வெற்றி வசப்படாவிட்டால், உங்களுக்கான பெருவெற்றி வேறெங்கோ காத்திருக்கிறது என்று பொருள். நீங்கள் படிக்கும் ஒவ்வொரு பக்கமும் உங்கள் அறிவை மேம்படுத்துகிறது, அது ஒருபோதும் வீண் போகாது.