socotra island 
அறிவோம்

சோகோட்ரா: பூமியில் மறைந்திருக்கும் வேற்று கிரகம்!

பூமியில் ’அதிகபட்ச வேற்று கிரக உணர்வை ஏற்படுத்தும் இடம்’ என்று இதனை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தத் தீவில் மட்டுமே இருக்கக்கூடிய சில விநோதமான தாவரங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

ஆதி தாமிரா

யேமன் நாட்டிற்குச் சொந்தமான, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சோகோட்ரா தீவு (Socotra Island), பார்ப்பதற்குப் பூமிக்குரிய இடத்தைப் போலவே இருக்காது. ஏதோ ஒரு வேற்று கிரகத்திற்கு வந்துவிட்டது போன்ற உணர்வைத் தரும் இந்தத் தீவு, அதன் தாவரங்களுக்காகவே உலகப்புகழ் பெற்றது. நமது பூமியில் எத்தனையோ அழகான இடங்கள் உள்ளன. ஆனால், சோகோட்ரா தீவு இந்த விதத்தில் தனித்துவமானதாக இருக்கிறது. பூமியில் ’அதிகபட்ச வேற்று கிரக உணர்வை ஏற்படுத்தும் இடம்’ என்று இதனை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தத் தீவில் மட்டுமே இருக்கக்கூடிய சில விநோதமான தாவரங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

1. டிராகன் ரத்த மரம் (Dragon's Blood Tree)

இந்தத் தீவின் அடையாளமே இந்த மரங்கள்தான். விரித்து வைத்த குடை அல்லது ஒரு ராட்சதக் காளான் போலத் தோற்றமளிக்கும் இந்த மரங்கள், பார்ப்பதற்கே பிரமிப்பூட்டுகின்றன. இம்மரத்தின் பட்டையைச் சீவினால், அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பிசின் வழியும். இது பார்ப்பதற்கு ரத்தம் போலவே இருப்பதால், இதற்கு இப்படி ஒரு பெயர் வழங்கப்படுகிறது. பழங்காலத்தில் இம்மரத்தின் சிவப்புப் பிசின் மருந்துப் பொருளாகவும், சாயமாகவும், சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றும் இது மருத்துவ குணங்கள் கொண்டதாகக் கருதப்படுகிறது.

2. பாட்டில் மரம் (Desert Rose / Bottle Tree)


பார்ப்பதற்கு ஒரு பெரிய பாட்டில் போலத் தடித்த தண்டுடன், உச்சியில் மட்டும் சில பூக்களைக் கொண்டுள்ள வினோதமான வடிவம் கொண்ட மரம் இது. வறட்சியான சூழலில் வாழ்வதற்காக, இந்த மரங்கள் தங்களின் தடித்த தண்டுப் பகுதியில் அதிகப்படியான நீரைச் சேமித்து வைத்துக் கொள்கின்றன. இவை பாறைகளின் இடுக்கில்கூட வேரூன்றி வளரும் தன்மை கொண்டவை. இதன் பூக்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் மிகவும் அழகாக இருக்கின்றன.

3. வெள்ளரி மரம் (Cucumber Tree)


நாம் உண்ணும் வெள்ளரிக்காய், செடி வகையைச் சேர்ந்தது. ஆனால், சோகோட்ராவில் மட்டும் வெள்ளரிக்காய் இப்படி பிரம்மாண்டமான மரம் போல வளர்கிறது. உலகில் வெள்ளரி குடும்பத்தில் மரம் போல வளரும் ஒரே இனம் இதுதான்.

socotra island

Socotra தீவு இந்தத் தனித்தன்மையை எப்படி அடைந்திருக்கலாம்?

சுமார் 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து பிரிந்த இந்தத் தீவு, முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் இங்குள்ள தாவரங்கள் வேறெங்கும் காண முடியாத வகையில் பரிணாமம் அடைந்திருக்கின்றன. சோகோட்ரா தீவு கடும் வறட்சியும், வெப்பமும் கொண்ட பகுதி. இந்தச் சூழலில் உயிர் பிழைக்க, தாவரங்கள் தங்களின் வடிவத்தை மாற்றிக்கொண்டன. டிராகன் ரத்த மரத்தின் குடை போன்ற வடிவம், அதன் வேர்ப் பகுதிக்கு நிழல் தந்து, ஈரப்பதம் ஆவியாகாமல் தடுக்கிறது.

இந்தத் தீவில் உள்ள தாவர இனங்களில், சுமார் 40% தாவரங்கள் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கிடையாது. இந்த அபூர்வ உயிரினங்களைக் காக்க, யுனெஸ்கோ (UNESCO) இந்தத் தீவை உலகின் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. சோகோட்ரா தீவு மனித நடமாட்டம் குறைவாக இருந்ததாலேயே, இன்றும் ஒரு வேற்று கிரக அதிசயம் போலத் தப்பிப் பிழைத்திருக்கிறதோ என்னவோ? இந்தத் தீவு, நமக்கு இன்னொரு தத்துவத்தையும் நினைவூட்டுகிறது. ’தனிமை என்பது எப்போதும் விரும்பத் தகாததாக மட்டுமல்ல, நம்மில் ஒரு புதிய பரிணாமத்திற்கான வாய்ப்பாகவும் அமையலாம்’ என்பதே அது!