Jeremy Wade River Monsters Youtube Page
அறிவோம்

இயற்கையான தன்மையை இழக்கும் கங்கை நதி! – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு! #JeremyWade

Mighty Rivers நிகழ்ச்சிக்காக சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து கங்கையை ஆய்வு செய்த வேடின் அனுபவங்கள்தான் இன்று உலகெங்கும் பேசுபொருளாகியிருக்கிறது.

ஆதி தாமிரா

ஜெரிமி வேட் (Jeremy Wade) என்பவர், ஒரு பிரிட்டிஷ் உயிரியல் விஞ்ஞானி. நதிகள் மற்றும் மீன்கள் பற்றிய ஆராய்ச்சியாளர் மற்றும் டிவி தொகுப்பாளர். டிஸ்கவரி சேனலின் River Monsters நிகழ்ச்சியில் வரும், ஆபத்தான மற்றும் அரிய மீன் இனங்களை ஆய்வுக்குட்படுத்தும் டாக்குமெண்டரிகள் மூலம் உலகப்புகழ் பெற்றவர். 35 வருடங்களாக இந்த ஆய்வே பணியென்று உலகமெங்கும் சுற்றிக்கொண்டிருக்கிறார். இல்லாத அளவு இப்போதெல்லாம் பெரிய நீரினங்கள் காணாமல் போய்க்கொண்டே இருக்கின்றன என்பது அவரது கவலை. அவரது Mighty Rivers நிகழ்ச்சிக்காக சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து கங்கையை ஆய்வு செய்த வேடின் அனுபவங்கள்தான் இன்று உலகெங்கும் பேசுபொருளாகியிருக்கிறது. 

இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றாகக் கருதப்படும் கங்கை நதி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆன்மீக நம்பிக்கையின் மையமாகவும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. அது கலாச்சார அடிப்படையாகவும், ஆன்மீகச் சின்னமாகவும் பலராலும் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தப் புனிதத்தின் பின்னால் மறைந்து கிடக்கும் சுற்றுச்சூழல் உண்மை என்ன? இந்த கேள்விக்கான பதிலைத் தேடுவதுதான் ஜெரிமியின் நோக்கம். 

ஜெரிமி வேடின் ஆய்வு கங்கை நதியை வழக்கமான நம்பிக்கையின் கோணத்தில் அல்லாமல், உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் கோணத்தில் அணுகியிருக்கிறது. ஒரு நதியின் உண்மையான நிலை, அதன் நீரின் தரம், அதில் வாழும் உயிரினங்கள், மற்றும் மனித செயல்பாடுகளின் தாக்கம் ஆகியவற்றை அறிய வேண்டும் என்பது அவரது ஆய்வின் நோக்கம்.

Jeremy Wade

கங்கை நீரில் அவர் மேற்கொண்ட ரசாயனச் சோதனை, தூய நீருடன் ஒப்பிடும்போது முற்றிலும் வேறுபட்டதாக இருந்திருக்கிறது. அந்த நீரில் மனிதக் கழிவுகளுடன் தொடர்புடைய பாக்டீரியாக்கள் மிக அதிகம் இருந்திருக்கின்றன. இது ஒரு நதியின் அடிப்படைச் சுகாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான நேரடி சான்றாகும்.

இதற்கும் மேலாக, வேட் கண்டுபிடித்த இன்னொரு உண்மை ’Dead zones’ எனப்படும் கங்கையின் உயிரற்றப் பகுதிகள். சில இடங்களில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தாலும், அதில் உயிரியல் இயக்கமே இல்லை எனும் உண்மையை, அதாவது மீன்கள் உள்ளிட்ட சிற்றுயிர்கள் இல்லாத நிலை, நீரில் ஆக்சிஜனின் மிகக் குறைவான அளவு போன்றவற்றையும் கண்டறிந்திருக்கிறார். மக்களுடன் பேசி, சிறப்பு கேமரா மூலம் ஹெலிகாப்டரிலிருந்து புகைப்படங்கள் எடுத்து, ஆய்வுகள் மேற்கொண்டு ஒரு விஷயத்தைச் சொல்கிறார். நதி இயற்கையான தனது செயல்பாட்டை இழந்து வருகிறது என்பதே அது.

Jeremy Wade's Mighty Rivers


இந்த நிலைக்கு முக்கியக் காரணமாக மனிதர்களையே சுட்டிக் காட்டுகிறார் வேட். குறிப்பாகத் தொழிற்சாலைகள் மற்றும் நகரக் கழிவுகள், சுத்திகரிக்காத கழிவு நீர், மனிதக்கழிவுகள், இறந்த உடல்கள், குப்பைகள் போன்றவை நேரடியாக கங்கை நதியில் சேர்க்கப்படுகின்றன. கான்பூர் போன்ற தொழிற்சாலை மையங்களில் இந்தத் தாக்கம் இன்னும் தீவிரமாக உள்ளது. இதன் விளைவாக, நீரின் தரம் பாதிக்கப்படுகிறது. அதனால், நீர்வாழ் உயிரிங்களுக்கும், அதில் குளிக்கும் மனிதர்களுக்கும் கங்கை ஆபத்தானதாக மாறி நிற்கிறது.

இந்த பிரச்சினைக்கு, ஆன்மீக நம்பிக்கைக்கும், அறிவியல் உண்மைக்கும் இடைப்பட்ட சிக்கலை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பதே அடிப்படைக் காரணம். கங்கை ஒரு புனித நதி, அது மனிதர்களின் பாவத்தைச் சுத்திகரிக்கும் சக்தி கொண்டது என்பது நம்பிக்கை. ஆனால், அதன் புறத்தூய்மையைச் சுத்திகரித்துக் கொள்ளும் சக்தி அதற்கில்லை. அதை மனிதர்களான நாமே செய்தாக வேண்டும். இந்த முரண்பாடான உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள மறுத்தால், இயற்கை, நமக்குப் புரியும்படி அந்தப் பாடத்தை ஒருநாள் நடத்திக் காண்பிக்கும்!

ஜெரிமி வேடின் இந்த ஆய்வு உலகளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதே நேரத்தில், அவர் காட்டிய கங்கையின் நிலை எல்லா பகுதிகளுக்கும் பொருந்தாது என்றும், அவரது ஆய்வு இந்தியர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது, உண்மை நாம் விரும்புவது போலவே எல்லா சமயமும் அமைந்துவிடுவதில்லை என்பதைத்தான். புனிதம் என்பது ஒரு நம்பிக்கை, ஆனால் பாதுகாப்பு என்பது ஒரு பொறுப்பு. கங்கை நதியை நாம் வழிபடலாம், அதே நேரத்தில் அதைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்கு உண்டு என்பதை உணர வேண்டும். ஒரு நதியின் மீதான நமது நேசம் என்பது அதைச் சாக்கடையாக்கி, அதில் மூழ்கி எழுவதில் இல்லை, மாறாக அதை மாசுபடாமல் காப்பதில்தான் இருக்கிறது.