Gold Vs Diamond 
அறிவோம்

22 கேரட் தங்கம் Vs 22 கேரட் வைரம்... என்ன வித்தியாசம் தெரியுமா?

அந்த வாசகத்தைப் பார்த்த என் மனைவி ஆச்சரியத்துடன் கேட்ட கேள்வி, ’என்னங்க, 22 கேரட் தங்கமே கிராம் 14,000-க்கு மேல விக்குது! வைரம் 1 கேரட்டே 1 லட்சம் அப்படின்னா, 22 கேரட் வைரம் என்ன விலையில இருக்கும்? நினைச்சுப் பார்த்தாலே தலை சுத்துதே!’ என்றார் அவர்.

ஆதி தாமிரா

இன்று காலை நாளிதழைப் புரட்டியபோது முதல் பக்கத்தில் வந்த, முழு பக்க ஜுவல்லரி விளம்பரம் ஒன்று, வசீகரமான ஒரு வாக்கியத்தோடு எங்கள் கவனத்தை ஈர்த்தது.

‘இப்போது 1 கேரட் வைரம், 1 லட்ச ரூபாய் முதல்! இனி உங்களின் தூயக் காதலை, தூய வைரத்தின் மூலமாக வெளிப்படுத்துங்கள்!’

என்ற அந்த வாசகத்தைப் பார்த்த என் மனைவி ஆச்சரியத்துடன் கேட்ட கேள்வி, ’என்னங்க, 22 கேரட் தங்கமே கிராம் 14,000-க்கு மேல விக்குது! வைரம் 1 கேரட்டே 1 லட்சம் அப்படின்னா, 22 கேரட் வைரம் என்ன விலையில இருக்கும்? நினைச்சுப் பார்த்தாலே தலை சுத்துதே!’ என்றார் அவர்.

22 கேரட் வைரம் இருக்கிறது. அது அவர் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விலையுயர்ந்தது -எல்லாமே சரிதான். ஆனால், அது அவர் நினைக்கும் காரணத்தால் அல்ல! நம்மில் பெரும்பாலோருக்குமே இந்தச் சின்னக் குழப்பம் இருக்கக்கூடும். நாமென்ன ஒரு கல்யாணம், காய்ச்சி என்றால் வைரத்தையா போய் வாங்கிக் கொண்டிருக்கிறோம், அதைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்வதற்கு? தங்கத்துக்கே நாக்கு தள்ளுகிறது நமக்கு. அவரது தவறான புரிதலுக்கான பதில் மிக எளிமையானதுதான். இரண்டு கேரட்டுகளுமே ஒன்றல்ல! ஒன்று Karat, இன்னொன்று Carat! இரண்டும் ஒரே ஒலியமைப்பைக் கொண்ட இருவேறு சொற்கள், இருவேறு அர்த்தங்கள், அவ்வளவுதான்!

தங்கத்தில் நாம் பார்க்கும் கேரட் (Karat) என்பது அதன் தூய்மையைக் (Purity) குறிக்கும் அலகு. தங்கம் என்பது ஒரு உலோகம். 24 karat என்பது 100% தூயத் தங்கம். இந்த 100% தங்கம் ஆபரணம் செய்யப் பயன்படாது, அது மிகவும் மென்மையானது. ஆபரணம் செய்யவேண்டுமானால் அது சற்று உறுதியானதாக இருக்கவேண்டும் என்பதால், அத்துடன் செம்பு கலந்து 22 karat (91.6% தங்கம்) ஆபரணத் தங்கமாக மாற்றுகிறோம். 916 கிரேட் தங்கம் என்பதும் இந்த 91.6 சதவீதம் என்பதன் மாற்றுச் சொல்தான். போலவே 24 karat தங்கத்தை விட மேலான தங்கம் என்ற ஒன்று கிடையாது.

Gold Vs Diamond

ஆனால், வைரத்தில் கேரட் (Carat) என்பது அதன் தூய்மையை அல்ல, மாறாக எடையைக் (Weight) குறிக்கிறது. இங்கே ஒரு Carat என்பது வெறும் 0.2 கிராம் எடையைக் குறிக்கிறது. அதாவது, என் மனைவி சொன்னது போல ’22 Carat வைரம்’ என்பது சுமார் 4.4 கிராம் எடையுள்ள ஒற்றை வைரக்கல்! அத்தகைய வைரம், நிஜத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையதாக இருக்கும். தங்கத்தை நமக்குத் தேவையான எடையில் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், வைரத்தின் எடையை இயற்கைதான் தீர்மானிக்கிறது. அதிலிருந்துதான் நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப நாம் தேர்ந்தெடுக்க முடியும். அதோடு வைரத்தின் விலை அதன் எடை மட்டுமல்லாது 4C (Cut, Color, Clarity, Carat) என்ற விதிகளால் தீர்மானிக்கப்படுகிறது. போலவே, 1 Carat, அதாவது 0.2 கிராம் எடையுள்ள வைரம் சுமார் 1 லட்சம் எனில், 2 Carat எடை கொண்ட வைரம் சுமார் 2 லட்சம் இருக்கும் என்று நேரடியாக அர்த்தம் செய்துகொள்ளவும் முடியாது. வைரத்தின் எடை கூடக்கூட அதன் அரிதான தன்மை கூடுகிறது. நமது பொதுவான ஜுவல்லரி மார்க்கெட்டில் அரை Carat, ஒரு Carat வைரங்கள்தான் கிடைக்கும். அதிகபட்சம் 5 Carat (1 கிராம்) வரை கிடைக்கலாம். அவையே தரத்தைப் பொறுத்து கோடிகளில் விலை பெறும். அதற்கும் மேலானவை மிக மிக அரிதானவை, பெரும் செல்வந்தர்களுக்கான தனிச்சந்தைகளுக்குப் போய்விடும்.

இப்போது இங்கிலாந்து மன்னரின் கிரீடத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும், இந்தியாவைச் சேர்ந்த, பல நூற்றாண்டுகள் வரலாற்றைத் தாண்டி வந்த கோஹினூர் வைரத்தின் எடை எவ்வளவு தெரியுமா? 105.6 Carat! (சுமார் 21 கிராம்). பொதுவாக 100 Carat எடை கொண்ட உயர் ரக வைரத்தின் விலை சுமார் 200 கோடி ரூபாய் இருக்கலாம். ஆனால், அதே எடை கொண்ட இந்தக் கோஹினூரின் இப்போதைய விலை மதிப்பைக் கணக்கிடவே முடியாது. ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்றொரு மதிப்பீடும் சொல்லப்படுகிறது. Cut, Color, Clarity, Carat மட்டுமல்லாது, அதற்கென ஒரு வரலாறும் இருப்பதால் அது இந்த உயரிய நிலையை அடைந்திருக்கிறது.

சில விஷயங்களை நாம் தவறாகப் புரிந்துகொள்வதில்லை; ஆனால், அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமே நமக்கு ஏற்படுவதில்லை. ‘கேரட் - Carat’ அதில் ஒன்று!