Baljek Airport 
பயணம்

இந்தியாவின் மிகச்சிறிய விமான நிலையத்தில், இப்போது என்ன நடக்கிறது?

மேகாலயாவின் தோட்ட விளைபொருட்களை நாட்டின் பிற பகுதிகளுக்கு மிக விரைவாகக் கொண்டு செல்ல உதவுவதற்காகவும், இந்த விமான நிலையம் கட்டப்பட்டது.

எம். குமரேசன்

விமான நிலையம் என்றாலே நீண்ட ஓடுபாதைகள், பயணிகள் கூட்டம் நிறைந்த டெர்மினல்கள், நிமிடத்துக்கு ஒருமுறை வானில் எழும் விமானங்கள்தான் நினைவுக்கு வரும். இதுவெல்லாம் சென்னை, மும்பை போன்ற பிரமாண்ட விமான நிலையங்களுக்குத்தான் பொருந்தும். ஆனால், இந்தியாவின் மிகச்சிறிய விமான நிலையம் அப்படிk காட்சியளிக்காது.

மேகாலயாவின் மேற்கு காரோ மலைப்பகுதியில் (West Garo Hills) அமைந்துள்ள பால்ஜெக் விமான நிலையம் (Baljek Airport) (இதனை'துரா - Tura- விமான நிலையம்' என்றும் சொல்வார்கள்) இந்தியாவின் மிகச்சிறிய விமான நிலையங்களில் ஒன்றாகும். துரா நகருக்கு வடகிழக்கே சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் மலைப்பகுதி மக்களைத் தேசத்தின் முக்கிய நகரங்களுடன் இணைக்கும் நோக்கத்தில் கட்டப்பட்டது.

இந்த விமான நிலையத்தைக் கட்டுவதற்கு 1983ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. 1995ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து பணிகள் தொடங்கி, 2008ம் ஆண்டு கட்டுமானம் முடிக்கப்பட்டது. இதனைக் கட்ட 12.52 கோடி ரூபாய் மட்டுமே செலவானது. சிறிய ரக விமானங்கள் மட்டுமே இந்த விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும். 20 இருக்கைகள் கொண்ட 'Dornier 228 ரக விமானங்களுக்காக வடிவமைக்கப்பட்டது. விமான நிலையத்தில் ஓடுபாதை 1.1 கிலோமீட்டர் நீளமே கொண்டது. குறுகிய தூரத்திலிருந்து வானில் எழுதல் மற்றும் தரையிறங்குதல் வசதி கொண்ட விமான நிலையமாக இது வடிவமைக்கப்பட்டது.

inauguration ceremony led by President Pratibha Patil.

மேற்கு காரோ மலைப்பகுதியைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது. அதோடு, மேகாலயாவின் தோட்ட விளைபொருட்களை நாட்டின் பிற பகுதிகளுக்கு மிக விரைவாகக் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டது.

கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி பால்ஜெக் விமான நிலையத்தை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் திறந்து வைத்தார். தொடக்க விழாவின்போது, ​​கவுஹாத்தியிலிருந்து நான்கு இருக்கைகள் கொண்ட 'செஸ்னா' (Cessna) மற்றும் ஒன்பது இருக்கைகள் கொண்ட 'டோர்னியர்' (Dornier) என இரண்டு விமானங்கள் இங்கு தரையிறங்கின. ஆனால் இதில் சோகம் என்னவென்றால், இந்த இரு விமானங்கள்தான், இங்கு தரையிறங்கிய முதலும் கடைசியுமான விமானங்கள். அதன்பிறகு, இங்கிருந்து வழக்கமான வணிக ரீதியிலான விமானச் சேவைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. காரணம் மிகச் சிறிய ரக ஓடுபாதை. இதனால் ATR 42 மற்றும் ATR 72 போன்ற சற்று பெரிய ரக விமானங்கள் இறங்கும் வகையில் ஓடுபாதையை நீட்டிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இந்த விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள 2014-ம் ஆண்டில் அரசு மேலும் 58 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது. இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வழக்கமான பயணிகள் விமானச் சேவைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்த விமான நிலையம் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் இடமாகவே உள்ளது.