பயணம்

EMI மூலம் விமான டிக்கெட்!... இந்தியர்களுக்கு எமிரேட்ஸ் அளித்த திடீர் சலுகை!

அமீரகத்தில் கோடை விடுமுறை காலம் ஜூலை முதல்வாரத்தில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 31ம் தேதி பள்ளிகள் மீண்டும் தொடங்கும்.

எம். குமரேசன்

ஐக்கிய அரபு அமீரகத்தில் மக்கள் தொகையில் 35 சதவிகிதம் பேர் இந்தியர்கள். துபாய், அஜ்மான், புஜைரா, ரஃஸ் அல்-கைமா, ஷார்ஜா, உம் அல்-குவைன், அபுதாபி என ஏழு நகரங்கள் இணைந்த இந்த நாட்டில் 40 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அமீரகத்தில் சொந்த நாட்டு மக்களுக்கு அடுத்தபடியாக, அதிக மக்கள் தொகை கொண்ட சமூகம் இந்திய சமூகம்தான். ஏராளமான இந்தியர்கள் இங்கு குடும்பத்துடன் வசிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் கூடுதல் பலன்பெறும் வகையில், அந்த நாட்டைச் சேர்ந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் எதிர்பாராத மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.

எமிரேட்ஸ் விமான நிறுவனம் உலகின் மிகச்சிறந்த விமான சேவை நிறுவனம் ஆகும். பிரமாண்டமான ஏர்பஸ் 380 ஏ விமானங்களை இந்த நிறுவனம் அதிகமாக இயக்குகிறது. அபுதாபி, ஷார்ஜா, துபாய் போன்ற நகரங்களில் இருந்து இந்தியாவுக்கு வாரத்துக்கு 167 முறை விமானங்களை இயக்கப்படுகிறது.

அதிகபட்சமாக மும்பைக்கு வாரத்துக்கு 35 முறை விமானங்களும் சென்னைக்கு வாரத்துக்கு 21 முறை விமானங்களும் இயக்கப்படுகிறது. அமீரகத்தில் கேரள மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இதனால், கொச்சிக்கு வாரத்துக்கு 14 முறையும் திருவனந்தபுரத்துக்கு வாரத்துக்கு 7 முறையும் எமிரேட்ஸ் விமானங்கள் இயக்கப்படுகிறது. தற்போது, இந்தியர்களுக்கு மட்டும் டிக்கெட் புக்கிங்கில் இ.எம்.ஐ வசதியை எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், அங்கு குடும்பமாக வசிக்கும் இந்தியர்கள் அதிக மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அமீரகத்தில் கோடை விடுமுறைக் காலம் ஜூலை முதல் வாரத்தில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 31ம் தேதி பள்ளிகள் மீண்டும் தொடங்கும். பள்ளி விடுமுறைக் காலத்தில் அமீரகத்தில் வசிக்கும் இந்தியக் குடும்பங்கள் தாய்நாட்டுக்கு வரத் திட்டமிடுவார்கள். ஆனால், குடும்பமாக வந்து செல்ல விமான டிக்கெட்டுக்கு அதிக செலவு செய்ய வேண்டியது இருக்கும். மேலும், ரமலான், கிறிஸ்துமஸ், ஓணம், பள்ளி விடுமுறைக் காலங்களில் விமான டிக்கெட் விலையும் அதிகமாக இருக்கும். இதனால், பலரும் தங்களது பயணக் காலத்தை தள்ளிப்போடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இது போன்ற பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியர்களுக்கு விமான டிக்கெட் புக்கிங் செய்ய இ.எம்.ஐ வசதியை எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் நிறுவனம் சேவையளிக்கும் 140 மார்க்கத்தில் இந்தியர்கள் தங்கள் கடனட்டைகளைப் பயன்படுத்தி 3 முதல் 36 மாதங்கள் இ.எம்.ஐயாக டிக்கெட் கட்டணத்தைக் கட்டிக் கொள்ள முடியும். எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.எஸ்.பி.சி, இன்டஸ்இன்ட், யெஸ் பேங் உள்ளிட்ட 12 வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை இந்தியர்கள் இதற்காகப் பயன்படுத்தலாம்.

இது குறித்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் இந்தியா மற்றும் நேபாளத்திற்கான துணைத் தலைவர் முகமது சர்கான் கூறுகையில், ''மதிப்புமிக்க இந்திய வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான கட்டணத் திட்டங்கள் மற்றும் வசதியான கட்டண முறைகளை வழங்குவதன் மூலம், அவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்வதை நாங்கள் எளிதாக்குகிறோம். இந்த நெகிழ்வான கட்டணத் திட்டங்களை இந்தியாவிலுள்ள எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற கட்டணத் திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த விடுமுறைப் பயணங்களை மேற்கொள்ள இது சிறந்த வாய்ப்பாக அமையும். இந்தத் திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு எளிதான மாதத் தவணைகளில் கட்டணத்தைச் செலுத்திக்கொள்ளலாம்" என்றார்.