tovino and TJ elephant  
பயணம்

'எனது கென்ய நண்பர்!'- டொவினோ தாமஸ் குறிப்பிட்ட யானையின் ஸ்பெஷல் என்ன?

உலகின் அழகிய நாடான கென்யாவில் வசிக்கும் யானை ஒன்று, அதன் தந்தங்களுக்காக உலகப் புகழ்பெற்றது. அம்போஸ்லி வனவிலங்கு சரணாலயத்தில், இந்த யானை வசிக்கிறது.

எம். குமரேசன்

உலகின் அழகான நாடுகள் எதுவென்று கேட்டால், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா என்று பலரும் பட்டியலிடுவார்கள். ஆனால், உண்மையிலேயே உலகின் அழகான நாடுகளில் ஆப்ரிக்காவின் கென்யாவுக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டுமென்றும் சில உலகம் சுற்றும் வாலிபர்கள் கூறுவது உண்டு. உலகப்புகழ் பெற்ற மசாய் மாரா (Maasai Mara) வனப்பகுதி இந்த நாட்டில்தான் அமைந்துள்ளது.

இந்த வனப்பகுதியில் சிறிய, பெரிய வனவிலங்குகள் ஆயிரக்கணக்கில் வசிக்கின்றன. ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 15 லட்சம் வன விலங்குகள் (Wild beasts) இந்த வனத்துக்குள் இடம் பெயர்கின்றன. இவை, ஆற்றைக் கடந்து செல்லும் காட்சியே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

யானைகள், சிங்கங்கள், சிறுத்தைகள், சிவிங்கிப்புலிகள், மான்கள், கரடிகள் என அனைத்துவிதமான விலங்குகளின் வாழ்விடம்தான் இந்த மசாய் மாரா. இந்த வனத்துக்குள் ஒரு முறை சுற்றுலா சென்றால், வாழ்க்கைக்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்று சுற்றுலாப்பயணிகள் கூறுகிறார்கள். மசாய் மாராவிலுள்ள தங்குமிடங்கள் உங்களுக்கு நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். அன்பான உபசரிப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஏனென்றால், தங்களது வருவாய்க்குச் சுற்றுலாவை மட்டுமே கென்யா பெரும்பாலும் நம்பியுள்ளது.

பூர்வகுடிகளான மசாய் மக்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த பகுதிக்கு மசாய் மாரா என்று பெயரிடப்பட்டது. மாரா என்றால் புள்ளி என்று அர்த்தம். இந்த வனத்தில் ஆங்காங்கே காணப்படும் குட்டையான புதர் போன்ற மரங்கள், வனத்துக்குள் புள்ளி போன்ற தோற்றத்தில் காணப்படும். இதனால், மசாய் மாரா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வனம் ஏறக்குறைய 1510 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. தான்சேனியாவின் புகழ்பெற்ற செரெங்கெட்டி (Serengeti) வனவிலங்கு சரணாலயம் இந்த வனத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மசாய் மாரா வனத்துக்குள் மூன்று ஆறுகள் ஓடி புற்களைச் செழித்து வளர உதவுகின்றன. இந்த வனத்தின் பெரும்பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அக்கேசியா (Acacia) மரங்கள் நிறைந்திருக்கும்.

கென்யாவிலுள்ள ஆப்ரிக்காவின் உயரமாக கிளிமஞ்சாரோ மலையின் அடியில் அமைந்திருக்கும் அம்போஸ்லி வனவிலங்குகள் சரணாலயத்துக்கும் (Amboseli National Park) உலகச் சுற்றுலா வரைபடத்தில் முக்கிய இடமுண்டு. இங்கு, நீண்ட நீண்ட தந்தங்களைக் கொண்ட 1,500 பிரமாண்ட யானைகள் வசிக்கின்றன. 'Land of supertuskers ' என்று இந்த வனப்பகுதியை அழைக்கிறார்கள். இந்தக் காட்டில், வசிக்கும் டி.ஜே (Tee-Jay) என்று அழைக்கப்படும் நீண்ட தந்தமுடைய யானையும் ரொம்பவே பாப்புலர். 1988ம் ஆண்டு இந்த யானை பிறந்தது. 38 வயதாகும், இந்த யானையின் ஒவ்வொரு தந்தமும் 45 கிலோ எடை கொண்டது. அம்போஸ்லி வனத்துக்கு முக்கிய அடையாளமே இது போன்ற நீண்ட, பிரமாண்டத் தந்தங்களைக் கொண்ட அழகு நிறைந்த பேரினம்தான்!

சமீபத்தில், அம்போஸ்லி வனப்பகுதிக்குச் சென்ற மலையாள நடிகர் டொவினோ தாமஸ், டிஜே யானையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து 'எனது கென்ய நண்பர்' என்கிற தலைப்புடன் ‘இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். வனவிலங்குகளுடன் இணைந்து இயற்கையாக வாழும் மசாய் மக்களுடனும் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அம்போஸ்லி செல்ல உகந்த தருணம் எது?

அம்போஸ்லி வனவிலங்கு சரணாலயத்துக்கு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதக் காலக்கட்டத்தில் செல்வது நல்லது. இந்தத் தருணத்தில் பரந்து விரிந்துள்ள இந்த வனத்தில் யானைகள், ஆடுகள் போலச் சுற்றித் திரிவதைக் காண முடியும். சிங்கங்கள், வரிக்குதிரைகள், ஒட்டகச்சிவிங்கிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், கழுதைப்புலிகளை நேரில் கண்டு ரசிக்க முடியும். கென்யத் தலைநகர் நைரோபியிலிருந்து 4 மணி நேர சாலைப்பயணத்தில் இந்த வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. சரணாலயத்தின் எல்லைப் பகுதியிலேயே, தங்குவதற்கு நல்ல விடுதிகள் உள்ளன.