இந்தியாவில் பல பிரமாண்டமான நீளமான நதிகள் உள்ளன. சுமார் 2510 கிலோமீட்டர் தொலைவு பாய்கிறது கங்கை நதி. பிரம்மபுத்திரா இமயமலையில் உருவாகி வங்கதேசத்தை நோக்கி ஓடுகிறது. சிந்து நதி, பாகிஸ்தான் நோக்கிச் செல்கிறது. இந்த மூன்று நதிகளும் 'இமயமைலை நதிகள் '. இவை தவிர, வைகை, கோதாவரி, கிருஷ்ணா, மகாநதி, காவிரி, தாமிபரணி போன்ற தீபகற்பக நதிகளும் இந்தியாவில் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி வங்கக்கடலில் கடக்கின்றன. இந்திய நதிகளில் நர்மதை நதி மத்தியபிரதேசத்தில் உற்பத்தியாகி மேற்கு நோக்கிப் பாய்கிறது. மகாராஷ்டிரம், குஜராத் வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய அணையான சர்தார் சாரோவர் அணை மற்றும் யூனிட்டி சிலை ஆகியவை இந்த நதியின் அடையாளங்கள்.
நீளமான பிரமாண்ட நதிகள் பற்றி அனைவருக்கும் தெரியும். இத்தகைய பிரமாண்ட நதிகளுக்கு மத்தியில் இந்தியாவில் ஒரு நதி தனித்துவமான அடையாளத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
நாட்டின் மிகச் சிறிய நதி என்ற பெருமையும் அதற்கு உண்டு. நீளத்தில் சிறியதாக இருந்தாலும், செழுமையான நதி இது. புத்துணர்ச்சியூட்டும் வித்தியாசமான பயண அனுபவத்தை சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த நதி வழங்குகிறது. அந்த நதி எங்கே இருக்கிறது தெரியுமா?
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் (Alwar district ) பாயும் அர்வாரி (Arvari River) நதிதான், இந்தியாவின் மிகச்சிறிய நதியாக கருதப்படுகிறது. சுமார் 45 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நதி, பழமையான ஆரவல்லி குன்றுகளில் உருவாகி, சர்சா நதியுடன் இணைகிறது. இந்தியாவின் வற்றாத நதிகளைப் போன்ற பிரமாண்டம் இந்த நதிக்கு இல்லை. அமைதியே வடிவான நதி இது. இந்த நதி முற்றிலும் மழைநீரை நம்பியே உள்ளது. பருவமழைக் காலத்தில், அர்வாரி நதியின் கரைகள் பசுமையுடனும் நீரோட்டத்துடனும் உயிர்ப்புடன் காணப்படும். வறட்சியான காலங்களில் வறண்டுவிடும். சிறிய நதியாக இருந்தபோதிலும், இந்த நதி விவசாயத்துக்கு உதவுகிறது. நிலத்தடி நீரை உயர்த்துகிறது, பல கிராமங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது.
20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், காடுகள் அழிப்பு, அதிகப்படியான நிலத்தடிநீர் எடுத்தததன் காரணமாக அர்வாரி நதி கிட்டத்தட்ட வற்றிப்போனது. கடந்த 1986ம் ஆண்டு இந்த நதிக்கரையில் வசிக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி, 'ஜோஹாட்' (Johads) எனப்படும் பாரம்பரிய மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கி ஆற்றுக்குப் புத்துயிர் அளித்தனர். இந்த நதியில் 375 மண் தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீரை உயர்த்தினர். இது, ஆற்றின் நீரோட்டத்தை மீட்டெடுக்க உதவியது. மக்களின் கூட்டு முயற்சியால் ஒரு ஆற்றுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியும் என்பதற்கு அர்வாரி நதி உண்மையான எடுத்துக்காட்டாக இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது.
அர்வாரி இந்தியாவின் மிகச் சிறிய நதியாக இருக்கலாம். ஆனால், இந்த நதி நல்ல மனநிறைவைத் தரும் ஒரு பயண அனுபவத்தை சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்குகிறது. இந்தியாவின் அதிகம் அறியப்படாத பகுதிகளை காண விரும்புபவர்கள் இங்கு தாராளமாக செல்லலாம்.
ராஜஸ்தானின் அழகியக் கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் அர்வாரி நதிக்கரையில் அமைந்துள்ளன. நதியை ஒட்டியுள்ள கிராமங்கள் வழியாக நடந்து சென்று, பழங்கால நீர் சேமிப்பு அமைப்புகளை காணலாம். உள்ளூர் மக்களுடன் உரையாடி அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ஆற்றைச் சுற்றியுள்ள வயல்வெளி, மலைகள், பசுமயான புல் வெளிகள் மற்றும் பருவகால நீரோடைகள் தரும் உற்சாகத்துடன் நிதானமாக நடைப்பயணம் மேற்கொள்ளலாம்.
பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் நதிக்கரை எங்கும் பசுமை போர்த்தி காணப்படும். இந்தக் காட்சி மனதுக்கு மிகுந்த உற்சாகத்தை தரும். இந்த நதிக்கரையில்தான் புகழ்பெற்ற சரிஸ்கா புலிகள் சரணாலயம் (Sariska National Park) அமைந்துள்ளது. இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சஃபாரி பிரியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய சரணாலயம் இதுவாகும். ராஜஸ்தானின் அடையாளங்களில் ஒன்றான 'பாங்கர் கோட்டை' இந்த நதிக்கரையில்தான் அமைந்துள்ளது. ஆரவல்லி மலைகளுக்கு மத்தியில் சிலிசெர் ஏரியில் படகு சவாரி செய்வதும், சூரிய அஸ்தமனக் காட்சிகளைக் காண்பதும் மனதுக்கு உற்சாகத்தைத் தரும். அல்வார் நகரில் அமைந்துள்ள அரண்மனை ராஜ்புத் மற்றும் முகலாய கட்டடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இப்படி, ஏராளமான சுற்றுலாத்தளங்கள் அர்வாரி நதிக்கரையைச் சுற்றிலும் அமைந்துள்ளன.
அர்வாரி நதியை அடைவது எப்படி?
டெல்லியில் இருந்து அல்வார் நகரம் 150 கி.மீ தொலைவில் உள்ளது.
அல்வார் நகரம் ரயில் வழியாக டெல்லி மற்றும் ஜெய்ப்பூருடன் இணைக்கப்பட்டுள்ளது.
NH48 வழியாக டெல்லியிலிருந்து அல்வாருக்குச் செல்ல சுமார் மூன்று மணி நேரம் ஆகும்.