masinagudi village wikipedia
பயணம்

வாழ்க்கைக்காக போராடும் கிராமம்! #Masinagudi

சுற்றுலாவை மட்டுமே நம்பியுள்ள அழகிய கிராமமான மசினகுடி மக்கள் நீலகிரி மாவட்ட நிர்வாகம் எடுத்த ஒரே நடவடிக்கையால் முடங்கிப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எம். குமரேசன்

கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வழியாக உதகைக்குச் சாலை செல்கிறது. கிட்டத்தட்ட 36 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்தப் பாதை தமிழகத்திலேயே அபாயகரமானது. அடிக்கடி விபத்துகள் நடப்பதால், இந்தச் சாலையில் ஏறிச்செல்ல மட்டும் வாகனங்களுக்கு அனுமதியிருந்தது. இறங்கிச் செல்ல அனுமதியில்லை.

இந்த நிலையில், கடந்த மே 1ம்தேதி முதல் இந்தச் சாலையில் முற்றிலும் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப்பயணிகள் கூடலூர், முதுமலை தெப்பக்காடு வழியாகவே மசினகுடிக்கு செல்ல முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மசினகுடியைச் சேர்ந்த மக்களின் வாகனங்களுக்கு இந்தச் சாலையில் ஏறி, இறங்க எந்தத் தடையும் இல்லை. வெளி மாவட்ட, வெளி மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை காரணமாக, அனைத்து சுற்றுலா வாகனங்களும் மசினகுடிக்கு வராமல் கூடலூர், நடுவட்டம் வழியாக உதகைக்கு செல்கின்றன. இதனால், மசினகுடி சுற்றுலாப்பயணிகள் வரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

மசினகுடியின் அருகில்தான் முதுமலை புலிகள் காப்பகமும் , பண்டிப்பூர் புலிகள் காப்பகமும் அமைந்துள்ளன. இங்கு, வனத்துறையினரின் தங்கும் அறைகளில் இடம் கிடைக்காதவர்கள் மசினகுடி, மாவனல்லா, சிறியூர், வாழைத்தோட்டம் பகுதிகளில் அமைந்துள்ள ரிசார்ட்டுகளில்தான் தங்குவார்கள். இந்த கிராமங்களைச் சுற்றி ஏராளமான ரிசார்ட்டுகள் உள்ளன. ஜீப்களில் காடுகளுக்குள் சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்று வனவிலங்குகளைக் காட்டுவதும், இந்த கிராம மக்களுக்கு முக்கியத் தொழிலாக இருந்தது. அதோடு, சுற்றுலாப்பயணிகளுக்கு நாட்டு சேவல் கறி, முயல் கறி என கிராமத்துப் பாணியிலான உணவுகளை சமைத்துக் கொடுத்தும் மசினகுடியைச் சேர்ந்த பெண்கள் வருவாய் ஈட்டி வந்தனர்.

மசினகுடியைச் சுற்றியும் ஏராளமான சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன. சுற்றுலாத் தொழிலை மட்டும் நம்பியே மசினகுடி கிராமம் உள்ளது. மசினகுடியில்தான் வங்கிகள், ஏடிஎம், மருத்துவமனை, ஹோட்டல்கள் உள்ளன. தற்போது, இந்தப் பாதையில் வாகனப் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதித்திருப்பதால், சுற்றுலாத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள மசினகுடி மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.

இதையடுத்து, மசினகுடி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மசினகுடியில் இருந்து உதகைக்குச் செல்லும் மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை அனுமதிக்க வேண்டுமென்பதே இந்த மக்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், '' சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்குத் தடை விதிப்பதால் வருமானம் இல்லாமல் மசினகுடி பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளதால் எங்களது வாழ்வதாராமே சிதைந்து போய் விட்டது. பலரது அன்றாடமே பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பாதையில் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களை அனுமதிக்க வேண்டும்'' என்கின்றனர்.

நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றியே மசினகுடி சாலையில் போக்குவரத்துக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் முற்றிலும் தடை விதித்துள்ளது . இதனால், முதுமலை தெப்பக்காடு பகுதியில் பேரி கார்டு அமைத்து வாகனங்கள் கூடலூர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன. இதன் காரணமாக, கூடலூர் நகரிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

முதுமலை தெப்பக்காட்டில் இருந்து உதகை வரை, 37 கி.மீட்டர் தூரம் கொண்ட இந்தச் சாலையில் சீகூர் பாலம் முதல் தலைக்குந்தா வரை 12.5 கிலோ மீட்டர் தொலைவு மிகவும் அபாயகரமானது. இந்த 12.5 கிலோமீட்டர் தொலைவுக்குள்தான் 36 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் அமைந்துள்ளன. பெரும்பாலும், இந்த பகுதிகளில்தான் விபத்துகள் ஏற்பட்டு, ஏராளமானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.