கோடை கொளுத்தத் தொடங்கியுள்ளது. மக்கள் சுற்றுலாத் தலங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களான கொடைக்கானல், உதகை, கோத்தகிரி, குன்னூர், ஏற்காடு போன்ற நகரங்களில் மக்கள் அடைக்கலமாகியுள்ளனர். போக்குவரத்து நெரிசலைத் தடுக்க மே 1ம் தேதி முதல் மேட்டுப்பாளையம்- உதகை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் வாகனங்கள் குன்னூர் வழியாக மட்டுமே செல்ல வேண்டும். உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக மட்டுமே இயக்க வேண்டும். தமிழகத்தின் மிகவும் அபாயகரமான சாலையான உதகை - மசினகுடி சாலை முற்றிலும் போக்குவரத்துக்கு மூடப்பட்டு விட்டது.
உதகை தலைகுந்தாவில் இருந்து முதுமலை செல்லும் பாதைதான் உதகை- மசினகுடி சாலை ஆகும். கல்லட்டி, மாவனல்லா, கக்கநல்லா, மசினகுடி வழியாக முதுமலையில் தெப்பக்காடு என்ற இடத்தில் இந்தப் பாதை உதகை- மைசூர் தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும். உதகை- மைசூர் சாலையில் கூடலூர் சென்று அங்கிருந்து முதுமலை அடைய கிட்டத்தட்ட 70 கி.மீ சுற்றிச் செல்ல வேண்டும். ஆனால், கல்லட்டி மலைப்பாதை வழியாகச் சென்றால் 30 கிலோ மீட்டர் தொலைவுதான்.
இதனால், சுற்றுலாப்பயணிகள் இந்த கல்லட்டி மலைப் பாதை வழியாக மிக விரைவாக முதுமலையை சென்றடைவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆபத்தான இந்த மலைப் பாதையில் ஒரு சிலர் வாகனங்களை சரிவர இயக்கத் தெரியாமல் தடுமாறும் காரணத்தினால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டன. உயிர்ப்பலிகளும் நிகழ்ந்துக் கொண்டிருந்தது . இதனால், இந்த மலைப்பாதையில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்களுக்கு இறங்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. முதுமலையில் இருந்து மேலே ஏறி வர, மட்டுமே அனுமதி இருந்தது. அதேவேளையில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கு எந்தத் தடையும்இல்லை. இந்த நிலையில், முதுமலை - கல்லட்டி மலைப்பாதையில் முற்றிலும் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உதகை- கல்லட்டி - முதுமலைப் பாதை ஒரு பார்வை
உதகையில் இருந்து முதுமலைக்குச் செல்லும் இந்தப் பாதையில் 36 அபாயகரமான ஹேர்பின் பெண்டுகள் உள்ளன. செங்குத்தாக ஏற வேண்டும். அல்லது தலைகீழாக வாகனங்கள் இறங்க வேண்டும். இந்த பாதையில் பயணிப்பதே, ஒரு திகிலை தரும். இந்தப் பாதையில் வாகனங்கள் கியரில் இறங்குவதே நல்லது. இரண்டாவது அல்லது 3வது கியரிலேயே வாகனங்கள் இயக்க வேண்டும். ஆனால், வாகன ஓட்டிகள் விரைவாகச் சென்று ஒவ்வொரு வளைவிலும் பிரேக் பிடித்து இறங்குவார்கள். இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்தே, இந்தப் பாதையில் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதுமலைக்கு முன்னதாக மவனல்லா, மசினகுடி , வாழைத் தோட்டம் போன்ற அழகிய கிராமங்கள் இந்தச் சாலையில் உள்ளன. இங்கு ஏராளமான ரிசார்ட்டுகளும் உள்ளன.
இந்த ரிசர்ட்டுகளில் தங்கியிருந்து ஜீப்புகளில் வனத்துக்குள் சென்று , வனவிலங்குகளை பார்க்க சுற்றுலாப்பயணிகள் விரும்புவார்கள். அதுவும், கோடைக் காலத்தில் சுற்றுலாப்பயணிகள் சொர்க்கபூமியாகவே மசினகுடி கருதப்பட்டது. இங்கு, நல்ல ஹோட்டல்கள், ஏ.டி.எம்கள் , வங்கிகள் உள்ளன. அதோடு, 'ஹோம்ஸடே' வசதியும் இருக்கிறது. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் கோடைக் காலத்தில் இங்கு வந்து தங்கியிருப்பார்கள். தற்போது, இந்தப் பாதையில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் உதகையில் இருந்து கூடலூர் சென்று, முதுமலை காட்டுக்குள் புகுந்து, தெப்பக்காடு வழியாக மட்டுமே மசினகுடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.