boathouse in lake 
பயணம்

படகுவீடுகளுக்கு 'கிடுக்கிப்பிடி' ; பரபரப்பில் வேம்பநாடு! #HouseBoat

வேம்பநாடு ஏரியின் அழகையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால், விதிகளை மீறி செயல்படும் அனைத்து படகு வீடுகளும் அப்புறப்படுத்தப்படவுள்ளது.

எம். குமரேசன்

கேரளாவை கடவுளின் சொந்த தேசம் என்று சொல்வார்கள். அந்த கடவுளின் சொந்த தேசத்துக்கு ஆலப்புழாதான் சுற்றுலா தலைநகரம் என்று தைரியமாக சொல்லலாம். கேரளாவில் தனித்துவமான பல சுற்றுலாத்தளங்கள் உள்ளன. ஆனால், ஆலப்புழாவைப் போன்ற ஓர் இடத்தை வேறு இடத்தில் காண முடியாது. மிதக்கும் படகு வீடுகளுடன் கூடிய அமைதியான வேம்பநாடு ஏரியும் , ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள் குறுக்கும் நெடுக்குமான கால்வாய்களும் அழகான கிராமங்களும் சுற்றிலும் அமைந்த வயல்வெளிகளும் ஆழப்புலாவை மற்ற சுற்றுலாத்தளங்களில் இருந்து நிச்சயம் வேறு படுத்திக் காட்டும்.

இந்தியாவின் நான்கு திசைகளிலும் நான்கு முக்கியமான சுற்றுலாத்தளங்கள் உள்ளன. ராஜஸ்தானில் ஜெய்சால்மரில் வறண்ட மணல் பாலைவனம் உள்ளது. மேற்கு வங்கத்தில் சுந்தரவன காடுகள் பிரமிக்க வைக்கும். வடக்கிலுள்ள லடாக் மனதை மயக்கும் என்றால் தெற்கில் ஆலப்புழாவின் காயல்கள் மனதை கொள்ளை கொள்ளும்.

காயல்கள் அவற்றை இணைக்கும் கால்வாய்கள், ஆறுகள் என உள்நாட்டு நீர்வழி ஆலப்புழாவில் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த நகரத்தை 'கிழக்கின் வெனிஸ்' என்றும் சொல்கிறார்கள்.இங்குள்ள வேம்பநாடு ஏரி, ஆலப்புழா மாவட்ட மக்களின் பொருளாதாரத்துக்கு முதுகெழும்பாக உள்ளது. 16 லட்சம் மக்கள் இந்த ஏரியை நம்பி வாழ்க்கைநடத்துகின்றனர்.

வேம்பநாடு 96 கி.மீ நீளம் கொண்ட இந்தியாவின் மிக நீளமான ஏரி. 230 சதுர கி.மீ தொலைவு பரப்பளவு கொண்டது. ஆலப்புழா, கோட்டயம், கொச்சி மாவட்டங்களில் இந்த ஏரி பரந்து விரிந்து கிடக்கிறது. பிரமாண்டமான படகுகளில் பயணித்து இந்த ஏரியை ரசிப்பதும், கரிமீன் உள்ளிட்ட கேரள கடல் உணவுகளை சாப்பிடுவதும் சுற்றுலாப்பயணிகளின் முக்கிய ஆசையாக இருக்கும். இதற்காகவே, உலகம் முழுக்கவிருந்து, சுற்றுலாப்பயணிகள் ஆலப்புழா வருகிறார்கள்.

இந்த படகு வீடுகள் வேம்பநாடு ஏரியின் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதை காண்பதே மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாகும். அப்படி, கிட்டத்தட்ட 1000 படகு வீடுகள் வேம்பநாடு ஏரியில் ஓடிக் கொண்டிருக்கின்றன. இவை, ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டவை. மேலும், பதிவு செய்யப்படாமல் ஏராளமான படகு வீடுகள் ஓடிக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதையடுத்து, முறையான அனுமதி, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்கள் இல்லாமல் செயல்படும் படகுவீடுகளுக்கு கிடுக்கிப்பிடி போட கேரள உயர்நீதிமன்றம் முடிவு செய்தது. கடந்த ஜனவரி 20ம் தேதி கேரள உயர்நீதிமன்றம், படகு வீடுகளில் pollution control systems பொருத்த உத்தரவிட்டது. இதற்காக, 3 மாதங்கள் அவகாசமும் கொடுக்கப்பட்டது. அப்படியில்லையென்றால், வேம்பநாடு ஏரியில் இருந்து படகுவீடுகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து pollution control systems இல்லாத படகு வீடுகளை ஏப்ரல் 19 ம் தேதி முதல் அப்புறப்படுத்தும் பணியில் கேரள அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர்.

இது குறித்து கேரள சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், '' வேம்பநாடு ஏரியும் அதன் சுற்றுப்புற பகுதியும் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு, நகரமயமாக்கல் காரணமாக சுற்றுசூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பல ஆண்டு காலமாகவே குற்றச்சாட்டு இருக்கிறது. எனவே, ஏரியின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். நீதிமன்றத்தின் உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்துவோம். நீதிமன்றத்தில் உத்தரவை மதிக்காத எந்த படகு வீடுகளும் வேம்பநாடு ஏரியில் இயங்க முடியாது'' என்று தெரிவித்துள்ளனர்.

படகு வீடுகளில் இருந்து வெளியிடப்படும் கழிவுகள், ஏரியின் மீன் வளத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆண்டாண்டு காலமாக மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதோடு, தொழிற்சாலை கழிவுகளும் இந்த ஏரியில் கலக்கப்படுவதால், ஏரியின் சுற்றுச்சூழல் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனை, கருத்தில் கொண்டே கேரள உயர்நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதனால், வேம்பநாடு படகு இல்ல உரிமையாளர்கள் 'கிலி' யில் உள்ளனர்.